தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஜூலை, 2012

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!


செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!

2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் கடந்த 3 மாதமாக செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.
இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.
ஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தனது பதக்கம் பறிக்கப்பட்டு வேலையில்லாமல் இருந்த சாந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு தமிழக தடகள வீரர்களுக்கு பயிற்சியாளராக மாதம் ரூ.5,000 சம்பளத்தில் வேலை பார்த்தார். அதுவும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றும் அவருக்கு ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து அவரது தந்தை சவுந்திரராஜனும், தாய் மணிமேகலையும் தினமும் ரூ.500 சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த வருமானத்தை வைத்து 6 பேர் இருக்கும் குடும்பத்தை ஓட்டுவது கடினம் ஆகும். அதனால் சாந்தி கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளையில் தினமும் ரூ.200 கூலிக்காக வேலை பார்க்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
செங்கல் சூளையில் வேலை பார்க்கிறேன். வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் முடியாது, எந்த பொருளையும் தொடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கைகள் வீங்கி வலிக்கும். தோல் உரிந்து கொப்புளங்களாக இருக்கும். நான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து பியூன் வேலை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாததால் எனக்கு அந்த பணியைத் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.
நான் ஒரு தடகள வீராங்கனையாக செய்த சாதனைகளைக் கூறியும், எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியும் எனக்கு வேலை தர மறுத்துவிட்டார். நான் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.
நான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக கலைஞர் கொடுத்த பரிசு பணம் ரூ.15 லட்சம் எனது சகோதர, சகோதரிகளின் படிப்புக்கும், சகோதரியின் திருமணத்திற்கும் செலவாகிவிட்டது. எனது சகோதரர் இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார். சில சமயம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். அல்லது யாரும் காணாத இடத்திற்கு சென்றுவிடலாமா என்று தோன்றும். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். என் கையில் இல்லாத விஷயத்திற்காக நான் ஏன் தண்டிக்கப்பட்டேன் என்றார்.
மீண்டும் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொள்ள சாந்தி விரும்பினாலும், தற்போது அவருக்குத் தேவை குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வரும் ஒரு வேலை தான்.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக