தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஜூலை, 2014

'ஒரே மருந்து அனைத்து நோய்களும் குணமாகும்’


'வாலி’ படத்தில் தன் உடம்பில் இருக்கும் ஏகப்பட்ட நோய்களைச் சொல்லி, ''எல்லாத்துக்கும் ஒரே மருந்து வேண்டும்'' என்று கேட்பார் பாலாஜி. ஆனால் நிஜத்தில் 'ஒரே மருந்து அனைத்து நோய்களும் குணமாகும்’ என்கிற விளம்பரத்துடன் பைக்கில் வலம்வருகிறார் சுந்தரராஜன். குறிப்பாக மெரினா கடற்கரையில் இவரை அடிக்கடி பார்க்கலாம். 'மெரினா’ படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்தாரே, அவரேதான்!

''திருநெல்வேலி என்னோட சொந்த ஊர். பரம்பரை பரம்பரையா சித்த வைத்தியம் பண்ணிட்டு இருந்த குடும்பம். அந்த அனுபவத்துல நானே மூலிகைகளைக் கொண்டு இந்த 'என்’ ஆயிலைத் தயாரிக்கிறேன். 'என்’னா நான்கு நிலத்தையும் 'நேச்சர்’ங்கிறதையும் குறிக்கும். தீக்காயத்துக்கு ஒரு வாரம் இதைத் தேய்ச்சா போதும். பழையபடி தோல் இருந்த நிறத்துக்கே திரும்பிடும். தவிர, பல் வலி, உடல் வலி, தேமல், ஜலதோஷம், சக்கரை வியாதினு எல்லாத்துக்கும் கொடுக்கலாம்'' என்று ஆரம்பித்தார் சுந்தரராஜன்.

''தினமும் காலையில் நாலு மணிக்கு எழுந்திருச்சு வண்டியை ஸ்டார்ட் பண்றவன்தான், கரெக்டா ஏழு மணிக்கு மெரினா பீச்ல இருக்கிற காந்தி சிலைக்கு முன்னாடி எல்லோருக்கும் யோகா சொல்லித் தருவேன். இதுவும் சேவை மனப்பான்மைதான். பலபேர் யோகாங்கிற பேர்ல மூச்சுப் பயிற்சியைச் சொல்லித் தர்றாங்க. ஆனா, மூக்குல விரல் தொடாம செய்றதுதான் உண்மையான மூச்சுப் பயிற்சி. பாபா ராம்தேவும் புத்தகங்களைப் படிச்சுட்டு, அதையே சொல்லிக்கொடுத்துட்டு இருக்கார். சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிஞ்சு விழுந்து அஞ்சாறு நாள் கழிச்சு உயிரோட பலபேர் கிடைக்கிறாங்க. இன்னும் 20 நாள் கழிச்சு கிடைச்சாலும் பலபேர் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா, உடம்புக்குள் நுழையிற காத்துல 0.01 சதவிகிதம்தான் நுரையீரலுக்குத் தேவைப்படுது. அதுக்குத் தகுந்தபடி செய்றதுதான் தெளிவான மூச்சுப் பயிற்சி. இதை என்னால முடிஞ்ச வரைக்கும் மக்களுக்குச் சொல்லித் தர்றேன். தவிர, மக்களுக்குப் பயன்படணும்னு சுனாமி எச்சரிக்கைக் கருவியும் நம்மை நாமே காப்பாத்திக்கிறதுக்கு நவீன தீயணைப்புக் கருவியையும் கண்டுபிடிச்சிருக்கேன். சென்னையின் நெரிசலான ஏரியாவான ரங்கநாதன் தெருவில் தீவிபத்து நடந்தால், ஒரே நேரத்துல அனைத்துப் பகுதிகளையும் காப்பாத்துறதுக்கு ஒரு புரோகிராமும் ரெடி பண்ணிவெச்சிருக்கேன். ஒரு நாள் மடிப்பாக்கத்துல இருக்கிற எங்க வீட்டுக்கு வாங்க. அங்கே அதை பரிசோதனை பண்ணிக் காட்டுறேன்'' என மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தவரிடம் சினிமா வாய்ப்பு பற்றி கேட்டேன்.

''பீச்சுல நான் யோகா சொல்லித் தர்றதைக் கேள்விப்பட்ட இயக்குநர் பாண்டிராஜ்தான், 'மெரினா’ படத்துல தாத்தா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்தார். தவிர, நான் நல்லா நடிச்சதுக்குப் பரிசா ஒரு பைக்கும் வாங்கிக்கொடுத்தார். அந்த வண்டிதான் இது'' என்றபடியே, வண்டியை ஸ்டார்ட் செய்தால் தானாகவே பக்திப் பாடல் ஒலிக்கும்படி தான் செய்த பட்டி டிங்கரிங் டெக்னாலஜியை விளக்கிச் சிரித்தவர்...

''இப்போ 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ங்கிற படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன். தவிர, இன்னும் சில படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். முக்கியமானதை சொல்ல மறந்துட்டேனே? நான் புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆரம்பகால உதவியாளர்களில் ஒருவரா இருந்தவன். அப்புறம் பங்காரு அடிகளாருக்கு உதவியாளரா இருந்தேன்'' என்கிறார்.

இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலையே!

- கே.ஜி.மணிகண்டன் ,

நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக