தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூலை, 2014

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (வீடியோ இணைப்பு) !

பல பெண்களுக்கு மத்தியில் நட்சத்திரமாய் திகழும் கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார்.
இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் 1961ம் ஆண்டு யூலை 1ம் திகதி பிறந்த கல்பனா சாவ்லாவுக்கு சிறு வயதிலிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பது தான் விருப்பமாக இருந்தது.
ஆகாயத்தை பற்றியே கனவு கொண்டிருந்த அவரை அமெரிக்கா வரவேற்றது.
1984ம் ஆண்டு டெக்ஸஸ் பல்கழைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1993ம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்த அடுத்த ஆண்டே கல்பனா சாவ்லாவின் விண்வெளி கனவு நனவாக தொடங்கியது.
1997ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம்.
அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார்.
டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா.
முதல் விண்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது.
முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003ம் ஆண்டு ஜனவரி 16 ம் திகதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர்.
அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது.
ஆம், கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது. கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர்.
இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து.
அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவரது ஆத்மா அவருக்கு விருப்பமான அந்த விண்வெளியில்தான் உலா வந்து கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக