இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது….
ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்…
கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.
அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.
இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.
காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.
தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.
பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.
அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.
1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.
திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.
பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.
பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.
அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.
தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.
பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.
பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.
அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக