தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 மார்ச், 2014

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான் - மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணனின் மலரும் நினைவுகள்

தமிழகத்தின் அடித்தட்டு மக்களால் தெய்வப் பிறவியாக பார்க்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும் கடைசிவரை ராஜபார்ட்டாகவே இருந்தார். அவரைப் பார்க்க மாட்டோமா, அருகில் போய் தொட்டுப் பார்க்க முடியுமா என ஏங்கியவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்பதையே நம்ப மறுக்கும் வெள்ளந்திகள்கூட இன்னும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் சுமார் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். தற்போது 84 வயதாகும் அவர், சென்னை கோபாலபுரத்தில் சாதாரண வீட்டில் எளிமையாக வசித்து வருகிறார்.
எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்த நாளையொட்டி, மலேசியாவில் வரும் சனிக்கிழமை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில், கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி ‘தி இந்து’ சார்பில் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். எம்.ஜி.ஆருடனான தனது அரசியல் பயணத்தை மலரும் நினைவுகளாய் பகிர்கிறார் ராமகிருஷ்ணன்.தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. திமுக வளர்ந்து வரும் கட்சி. அப்போது, திமுகவின் பிரச்சார பலமே எம்.ஜி.ஆர்.தான். அவருக்காகவே ஸ்பெஷலாக 18 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரானது பிரச்சார வேன். அவர் பகல் 3 மணிக்கு பிரச்சாரத்தைத் தொடங்கினால் மறுநாள் பகல் 3 மணிக்குத்தான் முடிப்பார். (அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது).
எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் தவம் கிடப்பார்கள் மக்கள். வழிநெடுகிலும் மக்கள் வெள்ள மாக இருக்கும். கொஞ்சம்கூட அசராமல், அத்தனை பேரையும் பார்த்து கையசைத்தபடியே செல்வார் எம்.ஜி.ஆர். அதிகாலை 4 மணியானாலும் சிரித்த முகமாய் பிரச்சாரம் செய்வார். அவரிடம் சோர்வை பார்க்க முடியாது. ஆங்காங்கே குழந்தைகளுக்கு பெயரும் சூட்டி மகிழ்வார்.ஒரு இடத்தில் இரவு 7 மணிக்கு எம்.ஜி.ஆர். பேசுவார் என அறிவித்திருப்பார்கள். ஆனால், வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் அங்கு போவதற்குள் நள்ளிரவு கடந்துவிடும். இருந்தாலும் மக்கள் கூட்டம் கலையாமல் காத்திருக்கும். 1962-ல் தேனியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய சேலத்திலிருந்து போய்க்கொண்டிருந்தோம்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் (அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்) அருகே நள்ளிரவில் சாலையின் குறுக்கே மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியைப் பார்த்துவிட்டு வேனை நிறுத்தி இறங்கினோம்.
அப்போது சுமார் 30 பேர், தீப்பந்தங்களுடன் வந்து எங்களை சூழ்ந்துகொண்டனர். அருகில் இருந்த மலையைக் காட்டி, அங்கே வந்து தலைவர் கொடியேற்ற வேண்டும் என்றனர்.
‘நாங்கள் பிரச்சாரத்துக்காக தேனிக்கு போய்க்கொண்டிருக் கிறோம். திரும்பி வரும் போது தலைவர் கொடியேற் றுவார்’என்றோம். அதை அவர் கள் ஏற்கவில்லை. கும்பலில் இருந்த ஒருவன், ‘இப்பவே வராவிட்டால், வேனைக் கொளுத்திவிடுவோம்’என்றான். வேனில் இருந்த எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுவிட்டார். வேகமாய் வெளியில் வந்த அவர், வேட்டியை மடித்துக் கட்டியபடி, ‘தைரியம் இருந்தா கொளுத்துங்கடா பார்க்கலாம்’என்றார். வாய்த் தகராறு முற்றி அடிதடியாக மாறியது. எங்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரும் கொலை வெறித் தாக்குதலை எதிர்க்கொண்டார்.
நிலைகுலைந்த அந்தக் கும்பல் தலைதெறிக்க ஓடிவிட்டது. இத்தனைக்கும் எம்.ஜி.ஆருடன் சேர்த்து நாங்கள் மொத்தமே இருந்தது 7 பேர்தான்.இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது பொதுக்கூட்டங்களுக்கு வரும் மக்களிடம் தெரியும் எழுச்சியை வைத்தே வெற்றி, தோல்வியை துல்லியமாக கணிக்கும் சூத்திரம் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக