திரும்பி வந்ததும் அந்தப்புரத்துக்கு வேகமாகச் சென்றவன் மயங்கினான். வாயில் நுரை தள்ளியது. குணவதி பதறிப்போனாள். அரண்மனை வைத்தியர்கள் விரைந்தனர். அதற்குள் வீரசேனனின் உயிர் பிரிந்து விட்டது. குணவதியின் கதறல் ஒலி அரண்மனையில் மட்டுமல்ல, வானத்தில் பறந்து கொண்டிருந்த திருமூலர் சித்தரின் காதிலும் விழுந்தது. ஐயோ! எவ்வளவு அன்பாக இருந்தனர் இந்த தம்பதிகள்! சின்ன வயதிலேயே மன்னனின் விதி முடிந்து விட்டதே! இவள் இனி உயிர் வாழ மாட்டாள். இதுபோன்ற உயர்ந்த பெண்மணிகள் மடிந்து விடக்கூடாது. என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன் மிக வேகமாக தான் தங்கியிருந்த சதுரகிரி மலைக்குப் பறந்தார் திருமூலர் குருராஜனிடம் மேற்கண்டபடி பேசினார். குருராஜனும் சம்மதிக் கவே, சீடனே! நான் மன்னனின் உடலில் புகுந்து, அந்நாட்டு ராணியின் மனம் மகிழும் வகையிலும், நாட்டு மக்களை தெய்வீக வழியில் திருப்பும் வகையிலும் சேவையாற்றி திரும்ப சில ஆண்டுகள் ஆகும். அதுவரை என் உடலை இந்த மலைக் குகைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வா! இது கெட்டுப் போகாது. ஏனெனில், நான் கல்பசாதனை செய்து என் உடலை வைரம் பாய்ந்த மரம் போல் மாற்றியிருக்கிறேன். மிருகங்களால் இதற்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள், என சொல்லிவிட்டு ராஜேந்திரபுரிக்கு கணநேரத்தில் சென்று விட்டார். எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மன்னனின் உடல் அசைந்தது. ஆ... மன்னரின் உடல் அசைகிறது. அவர் இறக்கவில்லை, மயக்கநிலையில் தான் இருந்திருக்கிறார், என்று எல்லோரும் கூவினர். குணவதியோ இந்திரலோகத்தில் வசிப்பது போன்ற உணர்வை அடைந்து, சோக நீரை ஆனந்த நீராக கண்களில் இருந்து வடித்தாள். மன்னனின் உடலில் திருமூலர் புகுந்து விட்டார்.
எழுந்து அமர்ந்ததும், மகாராணி அவரைத் தன் கணவனெனக் கருதி தழுவிக் கொள்ள முயற்சித்தாள். சற்று ஒதுங்கி அமர்ந்த கணவரிடம், அன்பரே! தங்களுக்கு என்னாயிற்று? தாங்கள் இறந்து போய் விட்டதாக கருதியல்லவா இப்படி அரற்றி அழுதோம்! நடந்ததைச் சொல்லுங்கள், என்றார். மன்னர் பேச ஆரம்பித்தார்.குணவதி! நான் நகர்உலா முடித்து, காற்று வாங்கலாம் என எண்ணி நமது நந்தவனத்திற்குள் புகுந்தேன். அப்போது, ஒரு ரோஜா செடியின் மீது பாம்பு ஒன்று ஓடியது. அதன் முள் பாம்பு மீது படவே, சீறி எழுந்த பாம்பு அதில் இருந்த ரோஜாமலரில் கொத்தியது. அதன் விஷம் அந்த மலரில் பாய்ந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். நான் அந்த மலரைப் பறித்து முகர்ந்து பார்த்தேன். எனக்கு தலை சுற்றியது.சிரமப்பட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தேன். அதன் பின் என்ன நடந்ததென எனக்குத் தெரியவில்லை. இப்போது விழித்துக் கொண்டேன், என்றார். இடையில் நடந்ததை குணவதி மன்னரிடம் விளக்கினாள். மக்களும் மகிழ்ச்சியடைந்து திரும்பி விட்டனர். திருமூல மன்னரோ, குணவதியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதால் விலகியே இருந்தார். மன்னர், முன்பு போல் தன்னிடம் பிரியமாக இல்லையே என்று குணவதியின் மனதில் ஆற்றாமை தாங்கவில்லை. அவரது நடவடிக்கைகளே வித்தியாசமாக இருந்தன. அவரை நெருங்கும் நேரத்தில், தத்துவங்களை உதிர்க்க ஆரம்பித்தார்.இதென்ன, இந்த வயதிலேயே இவ்வளவு தத்துவங்கள்! ஒருவேளை மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியதால் இந்த மாற்றமோ? மக்கள் மத்தியிலும், அமைச்சர்களிடமும் போர், வாள் என எந்நேரமும் முழங்குபவர், இப்போது அன்பு, ஆன்மா, ஆன்மிகம் என்று பேசுகிறாரே! இவருக்கு என்னாயிற்று? அவர் தானா இவர்? அவளது மனதில் சந்தேகப்பொறி தட்டியது.
அவள் அவரிடமே கேட்டு விட்டாள். அதற்கு மேலும் விதுரசேன திருமூலர் அவளிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. பெண்ணே! நீ சரியாகத்தான் கணித்திருக்கிறாய். நான் உன் கணவன் வீரசேனன் அல்ல! நான் ஒரு சித்தன். பெயர் திருமூலர். உன் கணவன் இறந்ததைப் பார்த்து நீயும், உன் நாட்டு மக்களும் அழுது புலம்பியதை காண சகிக்காமல், நான் அவனது உடலில் புகுந்தேன். நான் செய்தது தவறுதான். அதற்காக என்னை மன்னித்து விடு. அதேநேரம், உன்னிடம் இதுவரை நான் எவ்விதத்திலும் ஒழுக்கக்கேடாக நடந்தததில்லை. மேலும், உன் உடல் வீரசேனனுக்குரியது என்பதை நான் அறிவேன், என்றார். ராணிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் அவளது மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடியது. இந்த சித்தர் இருக்கும் வரை, நமது சுமங்கலித் தன்மையை காத்துக் கொள்ளலாம். மேலும், இவரது ஆட்சியும் நன்றாகவே இருக்கிறது. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். இவரே இங்கிருக்கட்டும், என சிந்தித்தவள், சித்தரே! நீங்களே தொடர்ந்து நாட்டை ஆளுங்கள், என்றாள். ஒருவேளை சித்தர் மனம் பாதித்து, ஊரை விட்டு ஓடிவிட்டால் என்ன செய்வதென நினைத்து, அவரது உண்மையான உடலை அழித்து விட எண்ணி, நாசூக்காக பேச்சு கொடுத்தாள். சித்தரே! என் கணவரின் உடலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் நிஜ உடல் எங்கே? அது பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலையிலேயே கேட்கிறேன், என்றாள். அவள் நிஜமாகவே அக்கறையுடன் தான் கேட்கிறாள் என்றெண்ணிய சித்தர், ராணி! அது சதுரகிரி மலையில் இருக்கிறது. அதை என் சீடன் பாதுகாத்து வருகிறான். எனது உடலை சில பொருட்களைத் தடவி வில்வ இலை மற்றும் மரத்தடிகளால் எரித்தால் மட்டுமே அது எரியும், என உண்மையைச் சொல்லிவிட்டார்.ராணி அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை. சில பணியாளர்களை அழைத்து, நீங்கள் சதுரகிரி மலை குகையிலுள்ள ஒரு உடலை எரித்து விட வேண்டும். இதுபற்றி யாரிடமும் மூச்சுவிடக்கூடாது, என சொல்லி விட்டாள்.
பணியாளர்களும் புறப்பட்டனர். அந்நேரத்தில் குருராஜன் நீண்டநாளாக காணாமல் போன குருவைத் தேடி புறப்படவே, அனாதையாகக் கிடந்த உடலை பணியாளர்கள் சிரமமின்றி எரித்து விட்டனர். இதையறிந்த சித்தர் ராணியிடம், நீ இப்படி செய்வாய் என கனவிலும் நினைக்கவில்லை. இருப்பினும், உன் நிலையில் இருந்து பார்த்தால், சாதாரண மனிதர்கள் யாரும் இப்படி தான் செய்வார்கள். இருப்பினும், உனக்கு வேண்டும் வரம் கேள் தருகிறேன், என்றார். ராணி அவரிடம், நான் நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும், என்றாள். சித்தர் அங்கேயே தங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவள் அப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்ட சித்தர் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டார். அன்றிரவில், தன் வாழ்வில் ஏன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பதைப் பின்னோக்கி திரும்பிப் பார்த்தார்.கடந்த பிறவியில், திருமூலர் நந்திதேவரின் மாணவராய் இருந்தார். அஷ்டமாசித்திகளைப் பெற்றிருந்தார். அவர் சிவத்தலங்களைப் பார்க்க எண்ணம் கொண்டு, தென்திசை நோக்கி வந்தார். தற்போது திருவாவடுதுறை என்னும் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அருள்பாலிக்கும் கோமுக்தீஸ்வரரை வழிபட்டு விட்டு, சாத்தனூர் என்ற இடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தார்.அங்கே, மூலன் என்பவன் ஊர் மக்களின் பசுக்களை மேய்த்து வந்தான். பசுக்களுக்கு அவன் மீது பிரியம் அதிகம். ஒருநாள் விதிவசத்தால் அவன் இறந்து போகவே, பசுக்கள் கண்ணீர் சொரிந்தன. இதை அவ்வழியே வந்த திருமூலர் பார்த்தார். பசுக்கள் மேய்ப்பன் இல்லாமல் அல்லாடுவதை காண அவருக்கு சகிக்கவில்லை. அவர் ஓரிடத்தில் படுத்து உடலை மறைத்து விட்டு, தன் உயிரை மூலனின் உடலில் செலுத்தினார். மூலன் உயிர் பெற்றதும் பசுக்களும் மகிழ்ந்தன. பின்னர் பசுக்களை ஊருக்குள் ஓட்டி வந்ததும், மூலனின் மனைவி, அவரைத் தன் கணவன் எனக்கருதி வீட்டுக்கு வரச்சொன்னாள்.
சித்தர் நடந்த உண்மையை அவரிடம் சொல்ல, அவளும் மற்றவர்களும் நம்பவில்லை. தன் கணவனுக்கு ஏதோ சித்தபிரமையோ என அவள் எண்ணினாள். பின்னர் நடந்த உண்மையை ஊராரிடம் நிரூபித்த திருமூலர் தன் சுயஉடலைத் தேடி வந்தார். அதைக் காணவில்லை. பின்னர், திருவாவடுதுறை திரும்பிய அவர் மூலனின் உடலுடன் சிவ தியானத்தில் அமர்ந்து விட்டார்.அது போன்ற சம்பவமே இப்பிறவியிலும் தொடர்ந்தது. பசுக்களை பாதுகாத்ததால், ராஜயோகத்தை அனுபவிக்கும் யோகமும் அவருக்கு கிடைத்தது.இப்போது வீரசேன திருமூலர், அரண்மனை வாழ்வை துறக்க முடிவு செய்தார். திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் அருகில் வந்த அவர், வீரசேனனின் உடலை ஒரு மரத்தில் ஒளித்து வைத்து விட்டு, உயிரை அங்கு வந்து உயிர்விட்ட ஒரு அந்தணனின் உடலில் செலுத்தினார். பின்னர் சதுரகிரி வந்து அங்கு தங்கி விட்டாள். நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும் என ராணி கேட்டதால் சித்தர் ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ வேண்டியது அவசியமாயிற்று. ராணி சித்தரைக் காணாமல் சதுரகிரி மலைக்கு வந்தாள். அங்கு யாரோ ஒரு சித்தர் இருந்தார். அவரே திருமூலர் என அறியாத ராணி, தன் கணவனை எங்கே எனக்கேட்டாள். அவளிடம் உண்மையைச் சொல்ல விரும்பாத சித்தர், அவன் ஒரு மரமாக திருவானைக்காவலில் யோகநிலையில் இருக்கிறான். அரசனின் மரம் என்பதால் அது அரச மரம் என்று பெயர் பெறும். அதை சுற்றி வந்து, நீ நற்பயன்களைப் பெறு. கணவன் மரமாகி விட்டானே என்பதற்காக நீ சுமங்கலி நிலையில் இருந்து மாறமாட்டாய். நீயே உன் நாட்டை ஆண்டுகொள், எனச் சொல்லி அனுப்பி விட்டார். இப்படி மக்களை நல்வழிப்படுத்தவும், பசுக்களை வாழ வைக்கவும் பிறந்த திருமூலர் சித்தர் திருவாவடுதுறையிலேயே சமாதியானதாகக் கருதப்படுகிறது. சிலர் அவர் இன்னும் சதுரகிரியில் வசிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரார் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்து விட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நூல்:
அகத்தியர் பண்ணிரெண்டு காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகின்றது.
திருமூலர் காவியம்( கிரந்தரம்) 8000
திருமூலர் சிற்ப நூல் 1000
திருமூலர் சோதிடம் 300
திருமூலர் மாந்திரிகம் 600
திருமூலர் சல்லியம் 1000
திருமூலர் வைத்திய காவியம் 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை 600
திருமூலர் சுருக்கம் 200
திருமூலர் சூக்கும ஞானம் 100
திருமூலர் பெருங்காவியம் 1500
திருமூலர் தீச்டை விதி 100
திருமூலர் கோர்வை விதி 16
திருமூலர் தீட்சை விதி 8
திருமூலர் தீட்சை விதி 18
திருமூலர் யோக ஞானம் 16
திருமூலர் விதிநூல் 24
திருமூலர் ஆறாதாரம் 64
திருமூலர் பச்சைநூல் 24
திருமூலர் பெருநூல் 3000
திருமூலர் காட்டும் சிவநாம மகிமை!
அலங்காரப்பிரியன் மகாவிஷ்ணுவுக்கு மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி இரவு சிறப்பானதென்றால், அபிஷேகப்பிரியன் சிவனுக்கு உகந்தது மாசி மாத சிவராத்திரி. இந்த நாளில் விரதமிருப்பவன் அனைத்து பாவங்களிலிருந்தும் வழிபட்டு நற்கதி பெறுவான். சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்று ஐந்து முகங்கள். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைப் புரிகின்றன. தொழிலுக்கேற்ப பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேசன், சதாசிவன் என்று பெயர்களைப் பெறுகிறார். சிவ வழிபாட்டுக்கு வில்வம் மிகவும் உயர்ந்தது.
த்ரிதசாம் த்ரிகுணாகாரம்
த்ரிநேத்ரம் ச த்ரை ஆயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம்
ஏகவில்வம் சிவார்ப்பணம்
என்கிறது வில்வ துதி.
முக்குணங்கள், முக்குணங்கள், முக்கண், மூன்று ஆயுதங்களைக் குறிக்கும் மூன்று தளமுள்ள வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும் என்று இந்த துதி கூறுகிறது. இதுபோன்று 108 துதிகள் உள்ளன.
ஒருமுறை பூஜை செய்து அணிவிக்கப்பட்ட மலர்களை பிறகு அகற்றிவிடுவார்கள். இதை நிர்மால்யம் என்பர். இந்த நிர்மால்யத்தை மறுபடி பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. ஆனால், ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை அலம்பிவிட்டு மீண்டும் ஐந்துமுறை பூஜைக்குப் பயன்படுத்தலாம். அத்தகைய புனிதம் வாய்ந்தது வில்வ இலை. சிவனை ஆசுதோஷி என்பர். அதாவது உடனே மனம் குளிர்ந்து அருளுபவர். ஒரு வில்வார்ப்பணத்தால் எளிதாக சிவனருள் பெற்றுவிடலாம்.
சிவ, ஹர என்று அட்சரங்கள் உள்ளன. அதன் மகிமையை திருமூலரின் திருமந்திரம் எவ்வாறு உரைக்கிறது என்று காண்போமா?
ஹரஹர என்றிட அரியதொன்றில்லை
ஹரஹர என்றிட அறிந்திலர் மாந்தர்
ஹரஹர என்றிட அமரரும் ஆவர்
ஹரஹர என்றிட அறும் பிறப்பன்றே.
ஹர என்னும் அட்சரம் பிறவிச் சங்கிலியை அறுக்கவல்லது.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதிதானே.
முற்பிறவியில் செய்த தீவினையால் சிவநாமம் ஓதாதிருக்கின்றனர். சிவசிவ என்றால் தீவினைகள் யாவும் தீர்ந்துவிடும். சிவசிவ என்றால் தேவர்களுமாகலாம். சிவகதியாகிய முக்திப்பேறும் கிட்டும். ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்கும் உணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர் சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. ஒரு பொருளான சிவனே இனிய சக்தியுடன் இரண்டாக இருக்கிறான். நான்முகன், திருமால், ருத்ரன் என்னும் மூன்று நிலைகளில் விளங்குகிறான். அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் உணர்ந்தளிப்பவன். மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து புலன்களையும் வென்றவன் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விசுக்தி ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களில் (குண்டலினி) விரிந்தவன். அதற்கு மேலே ஏழாவதான சகஸ்ராரத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, நெருப்பு, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருட்களாக உணர்ந்து கலந்து விளங்குபவன் சிவபெருமான் என்கிறார் திருமூலர். சிவோஹம் என்போமே- அப்படி நன்மையும் தன்னில் இரண்டறக் கலக்கச் செய்பவன் சிவன்.
சிவயநம என்பது சிவ பஞ்சாட்சரம்.
சிவாயநம என்பது (சிவ) சக்தி பஞ்சாட்சரம்.
ஓம் ஹ்ரீம் நம: சிவாய என்பது சிவசக்தி சப்தாட்சரம். (ஏழு அட்சரங்கள்)
சிவனருளாய சிவன் திருநாமம்
சிவனருளான்மாத் திரோமல மாயை
சிவ முதலாகச் சிறந்து நிரோதம்
பவ மதகன்று பரசிவனாமே
சிவசக்தியின் சிவாயநம என்ற ஐந்தெழுத்தானது சிவன், ஆன்மா, திரோதாயி, மாயாமலம் என விளங்கும். சீவனானது சிகாரம் முதலாக ஓதும் முறையினால் பிறப்பு நீங்கி பரசிவனாகும் என்கிறார் திருமூலர்.
சிவசிவ என்றே தெளிகிலார் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்க
சிவசிவ வாய தெளிவிலுள்ளார்கள்
சிவசிவ வாகும் திருவருளாளே.
பேசாத மவுனிகளும் சிவசிவ என்று எண்ணுவதிலுள்ள நன்மைகளை அறிவதில்லை. சிவசிவ என்றிட மூச்சின் கதி உள்ளடங்கிலயமடையும். அவ்வாறு அடைந்தால் திருவருள் பெற்று சிவமயமாகுவர்.
(திருப்பதி வேங்கடசப் பெருமாளும் சிவ- சக்தி சொரூபம் கொண்டவரே அவருக்கு வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது. மூல விக்ரகத்தில் சடையும் முக்கண்ணும் உள்ளன. அம்பாளுக்குகந்த வெள்ளியன்று அபிஷேகம்-அணிவிக்கப்படுவது புடவை. அவருக்கு பிரம்மோற்சவமும் நவராத்திரி தினங்களில்தானே. எனவே ஹரி-ஹர பேதம் பார்க்காமல் பக்தி செய்ய வேண்டும்.)
நம எனும் நாமத்தை நாவிலொடுக்கி
சிவ எனும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவமது தீரும் பரிசுமது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பன்றே.
சிவாய நம என்னும் ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையில், நம என்ற எழுத்துக்களை நாவுள் கழுத்துப்பகுதியில் நிறுத்தி, சிவ என்னும் திருப்பெயரை மணமண்டலத்தின் உச்சியில் நினைக்க பாவம் நீங்கும் தன்மையுண்டாகும். அதனால் அஞ்ஞானம் நீங்கி, பிறவியும் நீங்கி முக்தியும் சித்திக்கும்.
சிவபெருமானென்று நான் அழைத்தேத்த
தவபெருமானென்று தான்வந்து நின்றான்
அவபெருமான் என்னை ஆளுடைநாதன்
பவபெருமானைப் பணிந்து நின்றேனே.
சிவபெருமானே என்று நான் உள்ளன்புடன் நினைத்து வழிபட, தவத்தில் விளங்கும் பெருமானான அவனும் இங்கிருக்கிறேன் என்று என்முன் நின்றான்; உள்ளுற்றான். பற்றுகளைக் கொடுப்பவனாகவும் தீர்ப்பவனாகவும் நின்ற நித்தியப் பொருளானவனை வணங்கி, என் பிறவியைக் கடந்து நின்றேன் என்று தான் பெற்ற இறையானந்தத்தை நாமும் பெற அருளியுள்ளார் திருமூலர்.
ஆக, இந்த சிவராத்திரித் திருநாளில்- என்றுமே உள்ளன்புடன் சிவநாமம் துதித்து, பவசாகரம் என்னும் பிறவிக்கடலைக் கடப்போம். ஆழ்ந்த பக்தியையன்றி வேறெதையும் வேண்டாதவனம் சிவன். அதற்கு நந்தனாரும் கண்ணப்பருமே சாட்சி. எனவே உணர்ந்து செயல்படுவோம்; மகிழ்வோம்; மகிழ்வோம்; அருள்பெறுவோம்.
காலம்: திருமூலர் முனிவர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த 3000 ஆண்டுகள் 13 நாள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக