புறநானூறு, 249. (சுளகிற் சீறிடம்!)
பாடியவர்: தும்பைச் சொகினனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை.
==========================
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று மன்னே; இன்றே,
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
உயர்நிலை உலகம் அவன்புக வார
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே
அருஞ்சொற்பொருள்:-
கதிர் மூக்கு = கூர்மையான மூக்கு
ஆரல் = ஒரு வகை மீன்
ஒளிப்ப = மறைய
கணை = திரண்ட
கோடு - இங்கு, வாளை மீனின் மீசையைக் குறிக்கிறது
எரிப்பூ = நெருப்பைப் போல் சிவந்த செந்தாமரை
பூ = தாமரை
பழனம்= பொய்கை (குளம்)
நெரித்து = நெருங்கி
வலைஞர் = நெய்தல் நில மக்கள்
அரிக்குரல் = மெல்லிய ஒலி
தடாரி = சிறுபறை
யாமை = ஆமை
நுகும்பு = குருத்து
சினை = கரு
வரால் = ஒரு வகை மீன்
உறழ்தல் = எதிரிடுதல்
கயல் = கெண்டை மீன்
முகத்தல் = மொள்ளல்
புகா = உணவு
நெருநை = நேற்றை
பகல் = ஒளி
கண்ணி = கருதி, குறித்து, பொருந்தி
ஒருவழிப்படுதல் = ஒற்றுமைப் படுதல்
மன்னே – கழிந்தது என்ற இரங்கற் பொருளில் கூறப்பட்டது
ஆய் = அழகு
நுதல் = நெற்றி
புகவு = உணவு
நீறு = புழுதி
ஆடுதல் = பூசுதல்
சுளகு = முறம்
ஆனாமை = நீங்காமை
ஆப்பி = பசுவின் சாணி
கலுழ்தல் = அழுதல்
இதன் பொருள்:-
கதிர்மூக்கு=====> வராலொடு
கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் மறைய, திரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ, நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கையை வலைஞர் அடைந்தவுடன், மெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை பிறழ, பனங்குருத்தைப் போன்ற கருமுதிர்ந்த வரால் மீன்களோடு,
உறழ்வேல்=====> மடந்தை
எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும் அகன்ற நாட்டின் தலைவன் உயிரோடு இருந்த பொழுது, ஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி உண்டான். அது கழிந்தது. இப்பொழுது, அவன் மேலுலகம் அடைந்ததால், அழகிய நெற்றியும் கற்பும் உடைய அவன் மனைவி
உயர்நிலை=====> கலுழ்நீ ரானே
அவனுக்கு உணவு படைப்பதற்காக, புழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் தன்னுடைய கண்ணீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.
பாடலின் பின்னணி:-
பெரிய நாட்டுக்குத் தலைவனாக இருந்த ஒருவன் உயிரோடு இருந்த பொழுது, பலரோடும் கூடி உண்பவனாக இருந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருநாள், அவள் ஒரு சிறிய இடத்தை கண்ணிர் கலந்த சாணத்தோடு மெழுகுவதைக் கண்ட புலவர் சொகினனார் தம் வருத்தத்தை இப்படலில் வெளிப்படுத்துகிறார்.
ஆசிரியர் பக்கம் facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக