மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன்.
அன்றாட வாழ்வில் உணவுகளுடன் சேர்த்து தேன்களை ருசிக்கும் மனிதன் இந்த தித்திப்பான தேன் எவ்வாறு நம்மை வந்து சேர்ந்தடைகின்றன என்ற கதையை அவசியம் தெரிந்துகொள்ளதான் வேண்டும்.
தேன் வகைகளில் சுத்தமான தேன் என்று பல்வேறு கடைகளிலும், பல்வேறு இடங்களிலும் கூவி கூவி விற்றாலும் உண்மையான தேன் என்றால் அது மலைத்தேன் தான்.
அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கலப்படமற்ற தேனாக இந்த குரூங் தேனை தான் சொல்கிறார்கள்.
நேபாள் நாட்டைச் சேர்ந்த தேன் வேட்டையர்களால் தான், நாம் இந்த தேனினை சுவைத்து மகிழ்கின்றோம்.
மத்திய நேபாளத்தின் இமயமலை அடிவாரத்தில் உலகின் பெரிய தேனீக்கள் காணப்படுகின்றன.
அங்குள்ள தேனீக்கள் சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத செங்குத்தான மலை பகுதிகளில், மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கூடுகளை அமைக்கின்றன.
கஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த மலை உச்சியில் பழங்குடி மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான கயிறுகள் மற்றும் தொங்கும் ஏணிகளை பயன்படுத்தி தேனைச் சேகரிக்கின்றனர்.
12-க்கும் மேற்பட்டவர்களாக இணைந்து செயல்படும் இவர்கள் தேனைச் சேகரிக்க 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய வழக்கத்தையே இன்றும் தொடருகின்றனர்.
முதலில் பசுமையான இலைகளைச் சேகரித்து அவற்றை தீயிட்டுக் கரும்புகையை பரவச் செய்கின்றனர். கரும்புகையை தாக்கு பிடிக்கமுடியாமல் தேனீக்கள் தங்களது கூட்டில் இருந்து வெளியேறுகின்றன.
அவ்வாறு தேனீக்கள் துரத்தப்பட்ட பின்னர் ’கட்டர்’ என்றழைக்கப்படும் தேனை சேகரிப்பவர், பாதுகாப்பாக கட்டப்பட்டிருக்கும் 50 மீட்டர் உயரத்தில் உள்ள கயிறு ஏணி ஒன்றின் வழியே ஏறி தேனை சேகரிக்கின்றார்.
தேனை சேகரிக்க ’டேங்கோஸ்’ என்றழைக்கப்படும் இரு மூங்கில் குச்சிகளை பயன்படுத்துகின்றனர்.
ஏணியில் நிற்பவர் தேன் கூட்டை ஒரு நீண்ட மூங்கிளால் குத்துகிறார், இன்னொரு மூங்கிளால் கீழே விழும் தேன் துண்டுகளை கூடையில் சேகரிக்கிறார்.
தவறி விழும் தேன் கூடுகளை மலையின் கீழே நிற்கும் மற்றொருவர் தான் வைத்திருக்கும் கூடையில் சேகரிக்கிறார் அல்லது சிறுவர்கள் அதனை உண்டு மகிழ்கின்றனர்.
மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தன்னுடன் 20 கிலோ எடை கொண்ட தேனைக் கொண்டு செல்கிறார்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தேன் ஜப்பான், சீனா மற்றும் கொரியா போன்ற வெளிநாடுகளுக்கு பாரம்பரிய மருந்து தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வசந்த காலத்தில் கிடைக்கும் சிவப்பு நிறத் தேன் அதிக லாபம் தருகின்றது, அது ஒரு கிலோ 30 பவுண்டுகள் வரை இருக்கும்.
ஆனால் மாறி வரும் பருவநிலையாலும், தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.
இதற்கு தீர்வாக நேபாள அரசு,பழங்குடியினருக்கு பயன் தரும் வகையில் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்க அன்னபூர்ணா பகுதிக்கு செல்லும் சுற்றுலாவாசிகள் தேன் சேகரிப்பை பார்வையிட ஆயிரம் அமெரிக்க டாலர் வசூல் செய்கின்றனர்.
குறுகிய கால லாபம் பெறும் வாய்ப்புள்ளதால் பழங்குடியினரும் அதனை பயன்படுத்தி கொள்கின்றனர்.
எனினும், சுற்றுலாவாசிகள் தங்களுடன் கொண்டு வரும் நவீன மலையேறும் கருவிகளால் மலை பிரதேசத்தில் உள்ள சுவர் பகுதிகள் பாதிப்படைகின்றன. மேலும், தேன் ஏற்றுமதியில் அரசின் தலையீட்டாலும், தேனீக்கள் அழிவை நோக்கி செல்வதாலும் நேபாள பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக