தஞ்சை பெரியகோயில் கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களை அழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார்.
அப்போது, கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது, என்று அசரீரி வாக்கு கேட்டது. உடனே மன்னர், கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது, என கேட்டார்.
போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார்.
கருவூரார் போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக? என்று கேட்டார்.
போகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன், என்றார்.
மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
~ சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக