தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வலிப்பு நோய் என்றால் என்ன? வரக்காரணம் என்ன?

வலிப்பு அல்லது ’காக்கா வலிப்பு’ என கூறப்படும் நோய் மூளையை தாக்கும் ஒரு நோயாகும்.
மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு வரும் நரம்புகளில் ஏதேனும் சிறிது நேரம் தடங்கள் ஏற்படும் போது ஒருவித இழுப்பு ஏற்படும் இதனையே வலிப்பு என்பார்கள்.
வலிப்பு நோய் வர காரணம்:
மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சேதங்கள், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் மற்றும் நரம்புமண்டலக் குறைப்பாடு, விபத்தினால் தலையில் ஏற்படும் பாதிப்புகள், மூளையில் ஏற்படும் கட்டிகள், ஆல்கஹால் மற்றும் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதைவு, மூளைக் காய்ச்சல் ஆகியவற்றால் வலிப்பு வர காரணமாக உள்ளது.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
வலிப்பு நோய் உள்ளவர்கள் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லுதல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், பொக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.
வலிப்பு நோயின் அறிகுறிகள்:
  • உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடல் உதறுவது போன்ற அசைவுகள்.
  • நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
  • முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
  • சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
வலிப்பு நோய் உள்ளவரை பார்க்கும் போது செய்ய வேண்டிய முதலுதவி:
  1. வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரின் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றின் அருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம், ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.
  3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  4. தலையில் மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.
  5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
வலிப்பு நோய்க்கு இயற்கை மருத்துவம்:
அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வலிப்பு நோய் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக