7 ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம், அக்காலத்தில் வடிக்கப்பட்ட தத்ரூபமான பாறைச் சிற்பங்களால் இக்காலம் வரை தமிழகத்தின் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், இங்கு வாழ்ந்த பழமையான மக்களின் திறமையான கலையுணர்வை கண்டு ரசிக்கவும் வியக்கவும் செய்கிறார்கள்.
அமைவிடம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள ஒரு பேரூராட்சியே மாமல்லபுரம்.
இந்நகரம் பல்லவ மன்னனான நரசிம்மவர்மனின் (கி.பி.630- 668) பட்டப்பெயரான மாமல்லன் என்ற பெயரால் விளங்குகிறது. ’மகாபலிபுரம்’ என்றும் மருவி அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தின் பாறையும் சிற்பமுமான கட்டடங்களை, மூன்றுவகையாக பிரிக்கலாம். 1. குடைவரைக் கோயில்கள் (அ) மண்டபங்கள், 2. ஒற்றைக்கல் கோயில்கள் (அ) ரதங்கள், 3. கட்டுமானக் கோயில்கள்.
இவற்றில் உள்ளும் வெளியிலுமாக காணப்படும் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் என தத்ரூபமும் நேர்த்தியுமான கலைச்சிறப்பால், மாமல்லபுர நினைவுச் சின்னங்கள், உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாக 1984 ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
பிரதானமான கடற்கரைக் கோயில்
மாமல்லபுரத்தின் சிற்பக் கோயில்கள் பல பல்லவ மன்னர்களின் காலங்களில் கட்டப்பட்டவை. முக்கியச் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.
இங்கு திருமால் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்துள்ளது. அதற்கு மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
இதில், கிழக்கு பார்த்திருப்பதே 5 அடுக்குகளுடைய கோபுரத்தைக் கொண்ட பெரிய கோயில். மேற்கு பார்த்திருப்பது 3 அடுக்குகள் கோபுரம் கொண்ட சிறிய கோயில்.
இக்கோயில்களின் கருவறையின் பின் சுவரின் உட்பக்கமாக சிவன், உமை, குழந்தை முருகன் சேர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. கருவறையை ஒட்டி உள்சுற்று ஒன்றும் உள்ளது. மேலும், பல தெய்வங்களும் புராண பாத்திரங்களும் சிற்பங்களாக காணப்படுகின்றன.
மலைப்பான மண்டபங்கள்
பெரும்பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில், உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள்.
இவற்றில் கருவறைகளும், அர்த்த மண்டபம், முகமண்டபம் என்ற முன்னறைகள் உள்ளன.
கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்பிரமனியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. கருவறையில் இந்த தெய்வங்கள் சிலைகளாகவோ, மரத்தால் செதுக்கப்பட்ட, அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ இங்கு வழிபட்டிருக்கலாம் என்கின்றனர் அறிஞர்கள்.
சில கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைத்ததற்கான குழி காணப்படுகிறது. கருவறைக்கு வெளியே துவாரபாலகர்கள் என்ற வாயிற்காவலர்கள் சிலை உள்ளது. பெண்தெய்வங்களுக்கு பெண்காவலர்கள் சிலையே உள்ளது.
இங்கு தர்மராச மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், ராமானுச மண்டபம், திரிமூர்த்தி மண்டபம், கோடிக்கல் மண்டபம், கோனேரி மண்டபம், அதிரணசண்ட மண்டபம் மற்றும் பாதியிலே கவிடப்பட்ட சில மண்டபங்கள் உள்ளன.
ரதங்கள்
பாறையில் செதுக்கிய ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதில் ஐந்து ரதம் (அ) பஞ்சபாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல் கோயில் சிறப்பானது. ஆனாலும், இது மகாபாரதத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையது இல்லை.வலையன்குட்டை ரதம், பிடாரி ரதம், கணேச ரதம் போன்றவையும் உள்ளன.
பிற்கால கோயில்கள்
பல்லவர் காலத்துக்குப் பிறகு வந்த விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் இங்கு உள்ளது. ஒரு மொட்டை கோபுரமும் கோவர்த்தன சிற்பத் தொகுதியின் மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மண்டபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.
தொழிலான சிற்பக்கலை
பல்லவர் காலத்தின் சான்றான இந்த சிற்ப உலகம், இப்போதும் அங்குள்ள மக்களால் பெரிதாக துதிக்கப்படுகிறது. முழுஈடுபாடு கொண்ட அவர்களால், சிற்பம் செதுக்குவது ஒரு பெரிய தொழிலாக இப்பகுதியில் நடக்கிறது.
இதை பார்க்கும்போது, சிற்பக்கலை அந்த பகுதி மக்களுக்கு வரமாக தரப்பட்ட மண்வாசனையா என எண்ண தோன்றுகிறது.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆண்டில் டிசம்பர்- ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டிய விழா ஒன்றும் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக