தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

இணுவில் கிழக்கு இளந்தாரி கோயில்


வடபால் தமிழ் மன்னர் ஆட்சியில் இணுவைப் பேரூரை ஆண்ட மன்னனாக கைலாசநாதன் எனப்பெயர் கொண்ட இளந்தாரி பரிபாலனம் செய்து வந்தான். இவனுடைய பேராண்மை, ஆளமை, உயர்பண்பு என்பவற்றை கருத்திலே கொண்டு தெய்வமாகவே வழிபடலாயிற்று. இவர் இவ்வுலகினை நீத்தல்பற்றி முன்னையே மற்றவர்களிற்கு கூறியுள்ளார். புளியமரத்திலேறி உருக்கரந்து வானுலகம் சென்றதனால் இவரை தெய்வமாகவே வழிபட்டனர்.
போர்த்துக்கேயர் மன்னர் காலத்திலேயே இவருடைய அரண்மனை சேதமுற்றதாக குறிப்பிடப்படுகின்றது. அவ்வரண்மனைக்கு வடகிழக்கேயுள்ள புளியமரத்தின் கீழ் வைத்திலிங்கம் நாகலிங்கம் என்னும் பெரியார் பொங்கல் பூசைசெய்து வந்தார். சிறியகாலத்தின் பின் இவ்வழிபாடு மாற்றமடைந்து முப்பது யார் தொலைவில் சிறுகட்டிடத்திலேயே நடத்தப்பட்டது. புளியமரத்தை மையமாக கொண்டு கிழக்க நோக்கியமைந்த கோயிலில் தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்திய செவ்வாய்க்கிழமை வருடாந்த மடை நடைபெறும். மாலை வேளையிலேயே புதிதாகப் போடப்பட்ட பந்தலில் பொங்கல் ஆரம்பமாகும். உள்மண்டபத்திலேயே பஞ்சவர்ணதூது ஓதப்படும். பொங்கல், கறிசோறிகளும் தயாரானதும் பறைமேளம், சங்கு, சேமக்கலம் ஒலிக்க இளந்தாரியின் பாடல்களைப் பாடியபடி அடியவர்கள் அப்பொருட்களை தட்டில் ஏந்தியபடி செல்வார்கள். உருவேறிய நிலையில் பூசாரியார் ஒருகையில் கத்தியும் மறுகையில் பிரம்புடனும் காய்கறிகளை சந்தியில் வெட்டியும் கற்பூரம் கொளுத்தி இளநீரும் வெட்டிவைப்பார். சிவகாமி;யம்பாள், வைரவர், பத்திரகாளி போன்றவர்களிற்கு படையல்கள் படைப்பார். இளந்தாரியின் மெய்க்காப்பாளராக இருந்த அன்னமாரினை நினைவு கூர்ந்து ஆலமரத்தடியில் படையல் செய்யப்படும். இளந்தாரிகோயில் மண்டபத்திலும் படையல் செய்யப்படும். உருவேறிய நிலையில் காணப்படும் பூசாரியார் நோய், பிணிதுன்பத்தால் அவதியுறுவோருக்கு திருநீறு வழங்குவார். திருவாக்கும் சொல்லுவார். தற்போதய பூசகராக நாகலிங்கம் ஆறுமுகராசா என்பவர் கடமையாற்றுகின்றார்.
விஷேட விழாக்களாக எட்டாம் நாள் பொங்கலும், தைப்பொங்கல், தைப்பூசம், ஆடிப்பிறப்பு, நவராத்திரி, திருவெம்பாவை என்பன கொண்டாடப்படுகின்றன. இவ்வழிபாட்டு முறையானது வீரனுக்கும், நற்பண்புடையவனுக்கும், அருளாளனுக்கும் செய்யும் வழிபாட்டு முறையாக குறிப்பிடப் படுகின்றது.
நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக