தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஆகஸ்ட், 2016

பிரெஞ்சு அரசின் உயரிய ‘செவாலியர்’


பிரெஞ்சு அரசின் உயரிய ‘செவாலியர்’ விருதை சிவாஜி, கமல் ஆகிய இரு தமிழர்கள்தான் பெற்றுள்ளதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்.. சினிமா ஒளிவெள்ளம், பிற துறைகளை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது.

1995ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, பிரான்ஸ் அரசு, செவாலியர் விருது அறிவித்தபோதுதான், அதன் கவுரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கும் செவாலியர் விருதை அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசின் கலாசாரத்துறை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவாஜிக்கு பிறகு, செவாலியர் விருது பெறும் 2வது தமிழர் கமல் என முன்னணி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது.

அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி. புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்தான், மதன கல்யாணி. பிரெஞ்சு மொழியி்ல் முதுகலையும், தமிழில் புலவர் பட்டமும் பெற்று, இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.

இந்த அறிவை கொண்டு, இரு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். ‘புதுச்சேரி நாட்டுப்புற கலைகள்’, சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ ஆகிய நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

இவரது பணிகளை பாராட்டியே செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதன கல்யாணி கூறுகையில், “அந்த காலத்தில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுகாரர்கள் பிரஞ்சு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். இரு மொழிகளையும் நானும் கற்றேன். எனவேதான் மொழி பெயர்க்க முடிந்தது. இரு மொழிகளிலும் நூல்கள் எழுத முடிந்தது” என்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், செவாலியர் விருதைவிட கவுரவம்மிக்கது ‘ஒபிசியே’ விருது. இந்த விருதையும் பிரான்ஸ் அரசு மதன கல்யாணிக்கு கொடுத்துள்ளது. இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண் மதன கல்யாணிதான் என்பது தமிழினத்தின் பெருமை. அதை தெரியாமல் இருந்தது தமிழனின் அறியாமை.

மதன கல்யாணியின் கணவர், சண்முகநாதன் கூறுகையில்,

செவாலியர் விருதை, சிவாஜி வாங்கியதால் பிரபலமானது. ஆனால், ஒபிசியே விருதை பிரான்ஸ் அரசு தானாக முன்வந்து மதன கல்யாணிக்கு கொடுத்தது. இதை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது என்றார்.

இத்தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூவரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். மதன கல்யாணியை புதுச்சேரி அரசு கவுரவிக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


எனது  வினாவும்  கருத்தும்:எந்த   மக்களுக்கு?

கூத்தாடிகளை கொண்டாடும் அளவு வசதியும் பொழுது போக்கின்மையும் தமிழ்நாட்டில் உள்ளதென்றால் அதுவும் பெருமைதான்!ஆனால் விருதுகள் சாதிப்பவருக்கு கொடுக்கப்படுவது,நடிப்பில் சாதித்தவர் பெற்ற பரிசால் மக்கள் பெருமை கொள்ள என்ன இருக்கோ!!அது அவரின் சாதனை மட்டுமே!வாழ்த்துவோம்,பெருமை????

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதும் சிவாஜிக்கு பிறகு இந்த விருது வாங்கும் நடிகர் என கூறப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த குணச்சித்திர நடிகர் அலெக்ஸ் இந்த விருதை கடந்த 2010ம் ஆண்டு வாங்கியுள்ளார்.
வள்ளி படத்தில் அறிமுகமான இவர் கோவில்பட்டி வீரலட்சுமி உட்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் போன்றவற்றிலும் நிபுணர்.
மேஜிக்கிலும் ஆர்வம் கொண்ட இவர் 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்த்தி கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். ஹிப்னாடிசம் 12 மணி நேரம் தொடர்ந்து செய்ததற்கு லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு கேன்சர் நோயால் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக