வேலூர் அருகே, காங்கேயநல்லூரில் 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை!
வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை!
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 'இலக்கிய முது முனைவர்' என்றது. காஞ்சி மகா பெரியவர் 'சரஸ்வதி கடாக்ஷமிர்தம்' என்று பாராட்டினார். அனைவருமே 'அருள் மொழி அரசு' என்று வணங்கினர். வாரியார் வாங்கிய பட்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஆனால், வாரியார் பள்ளிக்கூடம் சென்று படித்ததே இல்லை!
சிறுவயதில், பாலாறுக்குத் தினமும் குளிக்கச் செல்வார். அப்போது தனது அம்மாவிடம் அரிசி வாங்கி, போகும் வழியில் எறும்புப் புற்று இருக்கும் இடங்களைத் தேடிச் சென்று அதில் அரிசியைப் போட்டுக்கொண்டே போவாராம்!
மகன் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்ற ஊர் ஊராகப் போய் வருவது ஆரம்ப காலத்தில் அவரது அப்பாவுக்குத் தெரியாது. காங்கேயநல்லூர் முருகன் ஆலய ராஜ கோபுரம் கட்டியதில் தந்தைக்கு ஏற்பட்டிருந்த ரூ.5,000 கடனைத் தனது சொற்பொழிவு வருமானத்தில் அடைத்தார் வாரியார். அதன் பிறகுதான் அதை அறிந்து பாராட்டினார் தந்தை!
வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார். 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம்.
வாரியார் தனது 19-வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால், குழந்தைகள் இல்லை!
தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற 'சிவகவி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே!
வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தவர்!
எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், 'பொன் மனச் செம்மல்' என்பது அனைவராலும் சொல்லப்படுவது. அப்பட்டத்தை வழங்கியவர் இவரே!
வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்துஇருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் 'கிருபானந்த 'லாரி' வருகிறது' என்று கிண்டல் அடித்துத் தட்டிவைப்பார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டு ஜன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. 'வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!' என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்!
'தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்' என்று கம்பர் கூறுகிறார். 'தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக் கும், அளவுக்கு அதிக சினம்கொண்டாருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?' என்று கண்ணதாசன் கேட்க, 'அதை 'தாம் அரைக் கண்ணால்' என்று பிரித்துப் பொருள்கொள்ளலாம் அல்லவா?' என்று விளக்கம் கூறிக் கவியரசரை அசத்தினார்!
'பெற்றெடுத்த தாயின் பெயரை இனிஷியலாகப் போடலாமே!' என்று பெண்களைப் போற்றும் ஒரு கருத்தை அக்காலத்திலேயே கூறியவர்!
திருப்புகழ் உரை நடை, மகாபாரதம், கம்பராமாயணம், கந்த புராணம், பெரிய புராணம் என்று இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 200 இருக்கும். அவை அனைத்தையும் படிக்கும்போது வாரியாரின் பேச்சைக் கேட்பதுபோலவே இருக்கும்!
'எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்!' என்று ஒரு முஸ்லிம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன்!' என்பார்!
27 லட்ச ரூபாய் நன்கொடை வசூலித்து, திருப்பராய்த்துறையில் 'ராமகிருஷ்ண குடில்' அமைத்தார். ஆதரவற்ற சிறுவர்களின் புகலிடமாக அது விளங்கி வருகிறது!
தான் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். பள்ளிக்கு என உதவி கேட்டால் உடனே செய்வார்!
'ஏழைகள், மாணவர்கள், விதவைகள், மருத்துவ உதவி வேண்டுவோர் எனப் பல தரப்பினருக்கும் நிதி உதவி செய்திட, 'திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை' ஒன்றைத் தன் சொந்தப் பணத்தில் அமைத்தார்!
ஆன்மிகச் சொற்பொழிவுகளின் இடையே சிறுவர்களிடம் கேள்விகள் கேட்டு, சரியாகப் பதில் சொல்பவர்களை மேடைக்கு அழைத்து, புத்தகங்கள் பரிசளித்து ஊக்குவிப்பது வாரியார் வழக்கம்!
தமிழின் பெருமைபற்றி வாரியார் கூறியது இது... 'பாரிஸ் நகர நூல் நிலையத்தில் மடக்கிவைத்துள்ள பீரோக்களை நீட்டிவைத்தால், ஆறு மைல் நீளம் வரும். மிகப் பெரிய நூலகம். அதில் எண் ஒன்று போட்டு பைபிள் உள்ளது. எண் இரண்டு போட்டு திருக்குறளை வைத்திருக்கிறார்கள்!' மானம் என்ற சொல் தமிழில் தவிர வேறு எந்த மொழிகளிலும் இல்லை!
பழநி ஈசான சிவாச்சாரியார், 'டால்ஸ்டாய் எழுதிய 'நாம் செய்வது என்ன' என்ற புத்தகத்தை நீ ஒரு முறை படி. நான் படித்தால் அழுகை வருகிறது' என்றார். அந்நூலைப் படித்து முடித்ததும் பொன், பொருள், உலகம் ஆகிய பற்றுகள் அகன்றுவிட்டன வாரியாருக்கு. அன்று முதல், தான் அணிந்திருந்த தங்க ருத்திராட்ச மாலை, மோதிரங்கள் உட்பட அத்தனை அணிகலன்களையும் கழற்றி காங்கேய நல்லூர் முருகனுக்கு அர்ப்பணித்துவிட்டார் வாரியார்!
தன் விரிவுரைகளுக்குக் கிடைத்த வருவாயில் காங்கேய நல்லூரில் நாலு ஏக்கர் நிலத்தை வாங்கினார் வாரியார். அதில் இருந்து கிடைக்கும் வருவாயைவைத்து தினமும் தயிர் சாதம் தானமாக வழங்க உத்தரவிட்டார். 54 ஆண்டுகளாக இது தடை இல்லாமல் நடக்கிறது!
'எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை!
20 வயதுக்கு மேல், மேல் சட்டை அணிந்தது இல்லை. ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக