நாம் சைவர்களா? இந்துக்களா?
விடையளிப்பதற்கு யோசிக்கவேண்டிய சிக்கலான கேள்வி இது!
இன்றைக்கெல்லாம் மதம் பற்றிப் பேசினாலே, குறிப்பாக இந்துமதம் பற்றிப் பேசினாலே “மதம்பிடித்தவர்கள்”, “மதவெறியர்கள்”, “மதத்தீவிரவாதிகள்” என்று வரிசையாக முத்திரை குத்தல்கள் நடக்கும்.
அதிலும், சைவம், வைணவம் என்று பிரித்துப் பேசத் தொடங்கினால், போலிப் பகுத்தறிவாளர் மாத்திரமன்றி, இந்துத்துவவாதிகளும் சேர்ந்தே “பிரிவினைவாதிகள்” என்று கும்மியடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இப்படியான நிலையில், எங்களுக்கு ஒரு மண்ணும் வேண்டாமையா என்று விட்டுவிட்டு தம்மை “இறைநொதுமலர்களா”கக் (Agnostics) அடையாளப்படுத்திக்கொண்டு நகரும் கூட்டம், நம் சமயத்தில் அதிகரித்துவருகிறது.
“இந்து” என்ற பதம் இன்றைக்கும், பல தமிழர்கள் – அதிலும், கடவுள் நம்பிக்கை உள்ள தமிழர்களும் வெறுக்கும் சொல்லாடலாக இருக்கிறது.
தீவிரமாக ஆன்மிகம் பேசும் சிலரது பேசுபுக் சுயவிவரப் பக்கத்திற்கு (Facebook Profile) சென்று பாருங்கள்! மதப்பார்வைகள் (Religious Views) என்ற நிலையே அங்கு காட்டப்பட்டிருக்காது. தம்மை “இந்து” என்று வெளிக்காட்ட அவர்கள் தயங்குவதே அதற்கான காரணம்!
இந்து என்பது ஒரு தனிமதமல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. வைதிகநெறிகளான சைவம், வைணவம். சாக்தம், சுமார்த்தம் முதற்கொண்டு அவைதிக நெறிகளான கிராமிய வழிபாடுகள், இறைமறுப்புப் பேசும் உலகாய்தம் வரை அனைவருமே இந்துக்கள் தான். அவ்வளவு ஏன், சிலவேளைகளில் புத்தர், சமணரைக் கூட இந்துக்களாகக் கொள்வதுண்டு!
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். “இந்து” என்பதற்கும், “இந்துத்துவம்” என்பதற்கும் இடையிலான வேறுபாட்டைப் பலர் – குறிப்பாக இந்துசமயம் பற்றி விமர்சிப்பவர்கள் அறிவதில்லை!
இன்றைய இடதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் “இந்துத்துவம்” என்பது, இந்து சமயத்தையும், இந்தியா, இந்தியாவின் பண்பாட்டுப் பல்வகைமை என்பவற்றை அடிப்படையாக வைத்து எழுந்த அரசியல் சித்தாந்தமாகும்.
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மாற்றுமதங்கள் சார்ந்தெழும் வன்முறைகளையும், மாற்றுமதங்கள் வழியான பண்பாட்டுச் சீரழிப்பையும் எதிர்த்து, இந்துத்துவவாதிகள் கிளர்ந்தெழுவதை, இருவேறு கோணங்களில் நின்று நோக்கி, சரியென்றும் தவறென்றும் வாதாடலாம். அந்த வாதத்தில் நாம் இறங்கப் போவதில்லை.
இந்நிலையில் தம்மை இந்துக்களாக இனங்காட்டப் பிடிக்காத சைவர், வைணவர்கள் முதற்கொண்டு, “இந்து” என்ற சொல்லாடல் குறித்த எவ்வித அறிமுகமும் இல்லாமல், தன் கிராமத்து ஐயனாருக்கு பொங்கலிட்டு வணங்கும் குப்பன், சுப்பன் வரை, எல்லோரையுமே இந்துத்துவவாதிகளாக முத்திரைகுத்திக் கேலிசெய்யும் முட்டாள்த்தனமான “பகுத்தறிவு”ம் தற்போது, இணைய உலகு வரை வியாபித்திருக்கிறது.
“இந்து சமயம்” என்ற சொல்லைச் சார்ந்திருக்கும் அனைவரையும் இந்துத்துவ வாதிகளாக இனங்காண்பதை இந்த “பகுத்தறிவு ஞானப்பழங்கள்” முதலில் நிறுத்தவேண்டும்.
சைவ – வைணவரிலும் கூட மிகச்சிறிய எண்ணிக்கையானவர்களே இந்துத்துவத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்பதையாவது இவர்கள் புரிந்துகொண்டாற் போதும்.
இனி, விடயத்திற்கு வருவோம்!
சைவமாகட்டும், வைணவமாகட்டும், சாக்தமாகட்டும், ஒவ்வொரு கிளைச் சமயமுமே கிறித்துவம், இசுலாம் போல தனித்தனி மதங்களாகக் கருதுவதற்கான எல்லாத் தகுதிகளும் கொண்டவை.
அப்படியிருக்க, அந்த எல்லா மதங்களையும் ஒன்றுகலந்து ஒரே மதமாகக் காட்டுவதை பலர் விரும்புவதில்லை.
அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருக்கும் “சைவம்”, “வைணவம்” என்ற பெயர்களைக் கைவிட்டு, முகலாயரும் வெள்ளையரும் அழைத்த “இந்து” என்ற பெயரால் தம்மை இனங்காட்டிக்கொள்வது அவர்களால் சீரணிக்க முடியாததாக இருக்கிறது.
பொதுப்படையாகக் கூறப்படும் “இந்து” என்ற பதத்தால், “சைவம்” என்ற தனிச் சமயத்தின் தனித்துவமும் வரன்முறையும் திட்டமிட்டே அழிக்கப்படுகிறது என்பது பல சைவ அன்பர்களின் ஆதங்கம்!
சைவசமயம், தமிழரோடு இரண்டறக் கலந்த ஒன்று. “இந்து”வின் மூலம், சைவத்தை தமிழரிடமிருந்து பிரிப்பதை, தம் பண்பாட்டில் – விழுமியங்களில் கைவைப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
இக்கருத்து முழுக்க முழுக்கத் தவறென்பதற்கில்லை.
வருங்காலச் சந்ததிக்கு, சைவசமயத்தைப் பின்பற்றும் ஒரு கூட்டாத்தார் இருந்தனர் என்பதுகூடத் தெரியாமல் போகலாம். அக்காலத்தில், காபாலிகர்கள் போல உயிர்ப்பலியெடுக்கும் கொடுமைக்காரர்களாக சைவர்கள் இருந்ததாகவும், எனவே வழக்கிலிருந்து அம்மதம் ஒழிக்கப்பட்டதாகவும் கதைகள் கட்டப்பட்டாலும் மறுப்பதற்கில்லை. எனவே, எப்பாடுபட்டாகிலும் நாம் நம் சைவ அடையாளத்தைக் கட்டிக்காக்க வேண்டும்!
வெள்ளம் கரைகடந்துவிட்டது. இந்து என்ற பதத்தை நாம் முழுமையான வெறுக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது! இன்று ஒரு மதமாக உலகப்பிரசித்தி பெற்ற ஒன்று அது! நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் நம் அடையாளம்!
ஆனால், அந்த அடையாளத்திலிருந்து வெளிவராமலேயே, நம் சுய அடையாளத்தையும் காப்பாற்றமுடியும்… எப்படி?
“I am from Tamil Nadu!” என்பது புரியாத வேற்று நாட்டவன் ஒருவனுக்கு, “I am From India” என்று சொன்னால் புரிந்துவிடும்! தான் தமிழன் என்று பெருமைப்படும் எவனும் இப்படித் தான் தன்னை அறிமுகப்படுத்துவான். முதலில் தாய்மண்ணைச் சொல்லி, அடுத்ததாகத் தன் நாட்டைச் சொல்லி…..
இதே வழியை சமயத்திலும் கைக்கொண்டால் போதும்!
நெஞ்சை நிமிர்த்தி “நான் சைவன்” - “I am a Saivite” என்று சொல்லுவோம்! அப்படியும் புரியாதவர்களுக்கு மட்டும்….
“I am a Hindu - Hindu Saivite!”
படித்துமுடித்த கையோடு பேசுபுக் “மதப்பார்வை”யையும் “Saivite” / “Hindu Saivite” என்று மாற்றிவிடுங்கள்!
சைவ நெறி நம் அடையாளம்! நம் அடையாளத்தை நாம் காப்பாற்றாவிட்டால், வேறு யார் காப்பாற்றப்போகிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக