தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

உரிச்சொல் !!


சொல்லிலக்கணம் – 8
உரிச்சொல்
*********************

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில்
உரிச்சொல் இறுதியாக வருகிறது.

“உரி” என்றால் உரிய, உரிமை என்று பொருள் தருகிறது.
இது செய்யுள் வழக்கில் விரவிவரும் ஒரு சொல்லாகும்.
பேச்சு வழக்கில் இது பயில்வதில்லை.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறலாம்.
இது பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் வேறுபடுத்தி விளக்கி நிற்கும் எனலாம்.
பெயரும் வினையும் தத்தமக்குரிய பொருளை உணர்த்தித்
தனித்து நின்று இயங்கும் ஆற்றல் வாய்ந்தவை.
இடைச்சொல்லுக்கும், உரிச்சொல்லுக்கும் தனித்தனிப் பொருள்
உண்டெனினும் அவை பெயரையும் வினையையும் சார்ந்து நின்றே பொருளை உணர்த்தவல்லன.
உரிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் முன்னால் வந்து நின்று அவற்றின் பொருளைச் சிறப்பிக்கும் அடைகளாக விளங்குவன.

உரிச்சொல் இலக்கணம்
***********************
உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு
உரியதாக வரும்.
ஒரு சொல் ஒரு பொருளுக்கே உரியதாய் வருவதும் உண்டு.
ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.
பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.
தொல்காப்பியர் உரிச்சொல் குறித்து இவ்வாறு இலக்கணம் கூறுகிறார்.

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.

இவை வினையடைகளாகவும், பெயரடைகளாகவுமே தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை பின்வருமாறு நன்னூலார் கூறுகிறார்.
பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்
நன்னூல் – 442

உரிச்சொல் ன்பது பல்வேறுபட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகும்.

ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்.
ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
இவை பெயர்ச்சொற்களோடும், வினைச்சொற்களோடும்
இணைந்து நின்று பண்ப உணர்த்தும்.
இது செய்யுள் வழக்கிற்கு உரியதாகும்.

நனி – மிகுதி - நனி பேதை = அறிவற்றவன்.
சால – மிகவும் - மிகவும் தின்றான்.
கடி – மணம் - கடி மலர் = மணம் மிக்கமலர்
கடி – காவல் – கடி நகர் = காவல் மிக்கநகர்
உரிச்சொல் உணர்த்தும் பண்புகளை இரண்டாக வகைப்படுத்தபடுகின்றன.
குணப் பண்பு
தொழிற் பண்பு

உயிர்களின் குணங்கள்:
***********************
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).

அவையாவன:
அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை)
ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு,
வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்),
துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு),
துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி),
பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும்.

உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள்:
******************************************
உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள்
வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம்
முதலிய பலவகை வடிவங்களும்

நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும்,

வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை,
பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும்

கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு
(காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும்,

வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை,
நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு)
சருச்சரை (சொரசொரப்பு) என்னும்
எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்)
உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454)

உயிருள்ள உயிரற்ற இரண்டிற்கும் பொதுவான தொழில் பண்புகள்
உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455)
‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல்,
அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல்
என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும்.

முடிவுரை:
***********
உரிச்சொல்லுக்குரிய எளிமையான இலக்கணங்களை இங்கே கண்டோம்.
இவை பெரும்பாலும் உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன.
உரிச்சொற்கள் பெயர், வினைகளைத் தழுவி வருபவை.

குணப்பண்பு, தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை

அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும்
பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும்.

உயிர் உடைய பொருள்களின் வகைகளும் அவற்றின் குணப்பண்புகளும்
தொழில் பண்புகளும்

உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும்,

மற்றும் உயிருள்ள உயிர் அற்ற ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் மிகவும் எளிதான முறையில் கற்றுக்கொண்டோம்!
*********************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
15/02/2013
 —

முடிவுரை:
***********
உரிச்சொல்லுக்குரிய எளிமையான இலக்கணங்களை இங்கே கண்டோம்.
இவை பெரும்பாலும் உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன.
உரிச்சொற்கள் பெயர், வினைகளைத் தழுவி வருபவை.


குணப்பண்பு, தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை 

அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும் 
பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும். 

உயிர் உடைய பொருள்களின் வகைகளும் அவற்றின் குணப்பண்புகளும் 
தொழில் பண்புகளும் 

உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும், 

மற்றும் உயிருள்ள உயிர் அற்ற ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் மிகவும் எளிதான முறையில் கற்றுக்கொண்டோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக