தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 8, 2017

திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்:-

திருகோணமலை ஈழத் தமிழ் மக்களின் தொன்மைச் சான்றுகள் நிறைந்த மானுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சைவமும் தமிழ் அரசர்களின் தனித்துவ ஆட்சியும் கொண்ட திருகோணமலை வரலாறு முழுதும் அழிக்கப்படுத்தலுக்கும் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இங்கு காணப்படும் சைவ – சிவ மரபு சார்ந்த தொன்மங்கள் சிவ பூமி எனப்படும் ஈழத்தின் வரலாற்றை பறைசாற்றுபவை. அண்மையில் திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது. வரலாற்றின் சுவடுகளை பாதுகாக்க வேண்டிய கால நிர்பந்தத்தில் வாழும் ஈழத் தமிழ் இனம் பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்பு குறித்த இப் பதிவை குளோபல் தமிழ் செய்திகளுக்கு அனுப்பித் தந்த பேராசிரியர் ப. புஷ்பரட்ணத்திற்கு நன்றியுடன் இங்கே பிரசுரிக்கிறோம்-ஆசிரியர்
அண்மையில் சேருவிலைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அழிவடைந்த ஆலயம் ஒன்றின் புகைப்படத்தை யாழ் பிராந்திய தொல்லியற் திணைக்கள அதிகாரி திரு.மணிமாறன் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அப்புகைப்படத்தில் அவதானிக்கப்பட்ட ஆலயத்தின் வடிவமைப்பு, அதன் கலைமரபு பொலநறுவை இரண்டாம் சிவதேவாலயத்தை நினைவுபடுத்தியதால் அவ்வாலயத்தைப் நேரில் சென்று பாரக்கத் தூண்டியது. இதற்காக கடந்த மாதத்தின் முற்பகுதியில் தொல்லியற்திணைக்கள அதிகாரிகளான திருமணிமாறன், திரு.கபிலன் மற்றும் யாழ் பிராந்திய மத்திய கலாசாரநிதியத்தின் திட்டப்பணிப்பாளர் திரு. லகஷ்மன் சந்தன மைத்திரிபால ஆகியோருடன் இணைந்து இவ்வாலய அழிபாட்டை பார்வையிட்டோம்.
இவ்வாலயம் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிராதேசத்தில் பிரதான வீதியிலிருந்து ஏறத்தாழ பத்துமைல் தொலைவிலுள்ள லிங்கபுரம் என்ற காட்டுப்பிரதேசத்தில்  அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடம் திருமங்களாய் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால் ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் தற்போது பெருங்காடாகவே காணப்படுகிறது. மாலை மூன்று மணிக்குப் பின்னர் இப்பிரதேசத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதால் மிகக் குறுகிய நேரத்திலேயே இவ்வாலயப் பகுதியில் ஆய்வினை மேற்கொள்ளமுடிந்தது. ஆயினும் குறுகிய நேர ஆய்வில் சிதைவடைந்த தமிழ்கல்வெட்டொன்றை அவதானித்ததால் அவ்விடத்தில் ஆய்வு செய்யத் திட்டமிட்டோம்.
இதற்காக தொல்லியல் சிறப்புக் கலை மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள அதிகாரிகளான திரு.மணிமாறான், திரு.கபிலன் ஆகியேருடன் இணைந்து கடந்த ஆறு நாட்களாக ஆய்வை மேற்கொண்டிருந்தோம். இந்த ஆய்விலிருந்து மிகப் பழமைவாய்ந்த ஆலயம் அழிவடைந்து அவற்றின் பெரும்பாகங்கள்  மண்ணுக்குள் மறைந்துள்ளமையை அடையாளம் காணப்பட்டுள்ளன. கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்டுள்ள இவ்வாலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில்கள், சுற்றுமதில் என்பன கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்பதை ஆலயத்தின் நாலா புறத்திலும் உள்ள அழிவடைந்த அத்திவாரங்கள், கருங்கற்தூண்கள், செங்கற்கள் என்பன உறுதிசெய்கின்றன. கர்ப்பகிருகமும், அதன் மேலமைந்த விமானமும் முற்றாகச் சிதைவடைந்து தற்போது அவ்விடத்தில் சிறு மேடு காணப்படுகிறது.
கர்ப்பக்கிருகத்துடன் இணைந்திருந்த கோமுகியைத் தவிர அங்கிருந்த பீடங்களோ, தெய்வச்சிலைகளோ அல்லது சிற்பங்களையோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாலயத்தின் அமைப்பு, கலைமரபு, தூண்களின் வடிவமைப்பு பொலநறுவை சிவதேவாலயத்தை நினைவுபடுத்தினாலும் தோற்றத்தில் இவ்வாலயம் மிகப் பெரியதென்பதை நிச்சயப்படுத்த முடிகிறது.
இவ்வாலயத்திற்குரிய கருங்கற்;தூண்கள் ஆலயச் சுற்றாடலில் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன. பல தூண்கள் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்றன. அவற்றுள் இருந்து இதுவரை ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இவ்விடங்களில் இருந்து மேலும் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்க வாய்ப்புக்கள் உள்ளன. இக்கல்வெட்டுக்கள் தமிழர் வரலாறு, தமிழர் மதம் பற்றிய ஆய்வில் விலைமதிக்கமுடியாத பொக்கிசங்களாகக் காணப்படுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கல்வெட்டுக்களில் மூன்று கல்வெட்டுக்கள் கி.பி. 10ஆம் – 11 ஆம் நூற்றாண்டையும், ஏனைய இரு கல்வெட்டுக்களும் கி.பி.14ஆம்-15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிடமுடிகிறது.
இக்காலக் கணிப்பை இந்தியாவின் தலை சிறந்த கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது இக்கல்வெட்டுக்கள் திரு.மணிமாறனின் கடினஉழைப்பாலும், தொல்லியல் மாணவர்களின் அதிதீவிர ஆர்வத்தாலும் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை முழுமையாக வாசித்து முடிக்கும் கட்டத்தில் இங்குள்ள ஆலயம் முதல் மூன்று கல்வெட்டுக்களின் காலத்தில் இலங்கையில் ஆட்சியிலிருந்த சோழ ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதா அல்லது அவர்கள் ஆட்சிக்கு முன்பின்னாக அல்லது சோழர் ஆட்சியில்  இங்கிருந்த தமிழர்களால் கட்டப்பட்டதா என்ற உண்மை தெரியவரும்.
இருப்பினும் இக்கல்வெட்டுக்களின் சில பாகங்கள் சிதைவடைந்து இருப்பதால் இவற்றை வாசித்து முடிக்க கால அவகாசமும், புலமையாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. எதிர்வரும் 11 திகதியில் இருந்து 20 திகதிவரை இந்துகலாசாரத் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருக்கும் கல்வெட்டுப் பயிலரங்கிற்கு தமிழகத்தின் மூத்த சாசனவியல் அறிஞர்களும் பயிற்றுவிக்க வருகைதர உள்ளனர். அக்காலப் பகுதியில் அவர்களின் ஒத்துழைப்போடு இக்கல்வெட்டுகளை முழமையாக வாசிக்க முடியும் என நம்புகிறோம்.
இருப்பினும் வேறுபட்ட காலங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நீண்ட வரலாறு இருப்பது தெரிகிறது. இதற்கு திருகோணமலையிலுள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்கள் பற்றி கூறும் தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் இவ்வாலயம் பற்றிக் கூறியிருப்பது இதன் பழமைக்கு மேலும் சான்றாகும்.
இவ்வாலயம் அமைந்திருக்கும் திருமங்களாய் பிரதேசத்தில் பண்டு தொட்டு வாழ்ந்த பரம்பரையின் தற்கால வழித்தோன்றல்களான திரு. வி.முத்துலிங்கம் (தலைவர்),திரு.கே.குரேந்திரராசா (செயலாளர்,திரு. கே. மாணிக்கராசா (பொருளாளர்) ஆகியோர் இணைந்து திருமங்களாய் திருக்கரையைப்பதி சிவன் பரிபாலனசபையை ஏற்படுத்தி அதனுடாக சமகால சமாதான சூழ்நிலையில் இவ்வாலயத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகின்றனர் அவர்களின் முயற்சி வெற்றியடைய  இலங்கைத் தொல்லியற் திணைக்களமும், மத்திய கலாசாரநிதியமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்புகிறோம்.
 
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தொல்லியல் இணைப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கiலைக்கழகம்.









http://globaltamilnews.net/archives/26061

No comments:

Post a Comment