தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 மே, 2017

நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்

நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாக விளங்குகிறது திருமங்கலக்குடி. இந்த ஆலயத்திற்கு வந்து இதில் சொல்லியபடி வழிபாடு செய்தால் தோஷத்திலிருந்து விடுதலை பெறலாம்.
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாக விளங்குகிறது திருமங்கலக்குடி. நவக்கிரக நாயகர்கள் இத்தலத்து இறைவன் - இறைவியை வணங்கி தங்களது சாபம் நீங்கி அருள் பெற்றனர். அந்தக் கதை என்ன?
முன்னொரு காலத்தில் விந்திய மலைச்சாரலில் காலவ முனிவர் என்ற முனிவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் கணிக்கும் வல்லமை கொண்டவர். ஒருநாள் அவர் தன் ஜாதகத்தை கணிக்கும் போது, முன் ஜென்மத்தில் நண்டுகளின் காலை முறித்து தின்ற பாவத்தால், கூடிய விரைவில் தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். மேலும் தனக்கு கிரகதோஷம் இருப்பதால், கிரகங்களை வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்றும் அறிந்து கொண்டார்.
உடனடியாக நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினார். நவக்கிரகங்கள், காலவ முனிவரின் தவத்திற்கு இணங்கி அனைவரும் அவர் முன் காட்சி தந்து, ‘என்ன வரம் வேண்டும்?’ எனக்கேட்டனர். முனிவர் நவக்கிரக நாயகர்களை வணங்கி, தன்னை தொழுநோய் தாக்காத வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு நவக்கிரகங்களும் அப்படியே வரம் தந்தனர்.
ஆனால் காலவ முனிவருக்கு, நவக்கிரகங்கள் வரம் அளித்ததை அறிந்த பிரம்மா சினம் கொண்டார். ‘உங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது. முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே, நீங்கள் தர வேண்டுமெனப் பணித்திருந்தேன். நீங்களோ காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் தந்தீர்கள். எனவே, நீங்கள் பூலோகத்தில் பிறந்து தொழுநோயால் பீடிக்கப்படுவீர்கள்’ எனச் சாபமிட்டார்.
பிராணநாதேஸ்வரர், மங்கள நாயகி.
அதிர்ச்சியடைந்த நவக்கிரகங்கள் அனைவரும், தங்களது சாபத்தை நீக்கும்படி பிரம்மாவை வேண்டினர். மனம் இளகிய பிரம்மா, அவர்கள் சாப விமோசனம் பெற வழி அருளினார்.
‘நீங்கள் யாவரும் சோழநாட்டில் திருமங்கலக்குடிக்கு அருகே உள்ள வெள்ளெருக்குக் காட்டை அடையுங்கள். கார்த்திகை மாதத்தில் முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு ஞாயிறுகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் நீராடுங்கள். பின், திங்களன்று காவிரியில் நீராடி, திருமங்கலக்குடி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பிராண நாதேஸ்வரரையும், மங்கள நாயகியையும் வழிபடுங்கள். வழிபட்ட பின் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சாப்பிடுங்கள். இப்படிச் செய்தால் சாபம் நீங்கி விமோசனம் பெறுவீர்கள்’ என பிரம்மா சொல்ல, நவக்கிரக நாயகர்களும் அப்படியே செய்து சாபவிமோசனம் பெற்றனர்.
விமோசனம் அளித்த பிராணநாதேஸ்வரர், நவக்கிரகங்களிடம் ‘இந்த அரக்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கென தனி ஆலயம் உண்டாகும். அது உங்களுக்குரிய தலமாக விளங்கட்டும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு, நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யலாம்’ எனக்கூறி மறைந்தார்.
பின்னர், நவக்கிரகங்களின் வேண்டுதல் படி, கால முனிவர் சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் நவக்கிரக நாயகர்களுக்கு கோவில் அமைத்து, நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிராணநாதேசுவரர் ஆலயம் உள்ள இடம் திருமங்கலக்குடி எனவும், நவக்கிரக நாயகர்கள் கோவில் கொண்டுள்ள இடம் ‘சூரியனார் கோவில்’ எனவும் இரண்டு தலங்களாகப் பிரிந்தன.
எனினும் சூரியனார் கோவில் செல்பவர்கள், முதலில் திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரை வணங்கிய பின்னரே சூரியனார் கோவில் செல்ல வேண்டுமென்பது புராணத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக