"இன்றைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைக்கான நேரத்தைச் சரியா ஒதுக்கி, வளர்கிறது இல்லை. தங்களோட தவறை சரிசெய்ய, குழந்தைக்குத் தேவையில்லாத பல பயிற்சி வகுப்புகளும் அனுப்பி, பொறுப்போடு வளர்க்கிறதா பெருமைப்பட்டுக்கறாங்க. குழந்தைக்கு பெஸ்டா கொடுக்கணும்னு நினைச்சு, அவங்களுக்குப் பிடிக்காத விஷயத்தில் அழுத்தம் கொடுக்குறாங்க. நம்ம பிள்ளை சந்தோஷமா சிரிக்கிறான், படிக்கிறான் என நினைக்கிறாங்க. ஆனால், பள்ளிச் சூழல், பயிற்சி வகுப்புச் சூழல், வீடு எனப் பல இடங்களில் குழந்தைகள் கடுமையான மனஅழுத்தத்தை சந்திச்சுட்டு இருக்காங்க. இப்படிப் பிடிக்காத விஷயங்களைத் திணிக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் நம்ம ரத்தச் சொந்த உறவுகளுடன் பழக எந்த அளவுக்கு வாய்ப்புக் கொடுக்கிறாங்க எனப் பார்த்தால், ரொம்ப குறைவுதான்.
மரங்களும் மண்ணும் சொல்லிக்கொடுக்காத, தராத சந்தோஷத்தை மற்ற எந்தச் சூழலிலும் பெறவே முடியாது. இதை முழுசா கொடுக்குறது கிராமம்தான். தன்னோட உறவுகளான சகோதர, சகோதரிகளோட சேர்ந்து விளையாடி மகிழ்வது, ஆற்றில் குளிப்பது, கிராம உணவுப் பண்டங்களை சாப்பிடுவது, தாத்தாவுடன் சேர்ந்து வயல் வேலைகளைச் செய்வது, கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்வது, வண்டி ஓட்டிப் பழகுவது, குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது, கால்நடைகளும் விளையாடுவது, எல்லா உறவுகளுடன் சேர்ந்து விளையாடுவது எனச் சொந்த பந்தங்களினால் கிடைக்கும் மகிழ்ச்சியும், புத்துணர்வும் அலாதியானது. இதெல்லாம் நகரப் பகுதியில் எவ்வளவு பணம் செலவழித்தாலும் கிடைக்காது. சிறு வயதுப் பருவத்தில் மட்டுமே, இந்தச் சந்தோஷங்களை முழுமையாக உணர முடியும்.
விளையாடும் குழந்தைகள்
தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை என எந்த உறவாக இருந்தாலும், அவர்களுடன் செலவிடும் அந்தக் குறுகிய காலத்தில் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். உறவுகள் ஒன்று கூடியிருக்கும் சமயத்தில் ஒரு விஷத்தைப் பல கண்ணோட்டத்தில் அணுக முடியும். யாரிடம் எப்படிப் பேசுவது, நடந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தங்களோட குடும்ப கலாசாரம், மொழி, பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். முன்பு கூட்டுக் குடும்பங்களில் கருத்து மோதல்கள் இருந்தாலும், சுமூகமாப் பேசி தீர்த்துப்பாங்க. விட்டுக்கொடுத்துப் போகும் மனநிலையும் இருக்கும். வாழ்க்கைக்கான அத்தனை விஷயங்களையும் கிராமச் சூழல் மற்றும் உறவுகளின் வாயிலாகக் கற்க முடியும். பத்து வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைச்ச இவை, இன்றைய குழந்தைகளுக்கு சரிவர கிடைக்கிறது இல்லை. இன்றைய குழந்தைகளுக்கு இதெல்லாம் கிடைக்கத்தான், குழந்தைகள் விடுமுறை காலங்கள்லயாவது சொந்த பந்தங்களோடு பழக வேண்டும்.
'தாத்தா பாட்டி உள்ளிட்ட உறவினர்கள் வீட்டில் இருந்து, பழகினால் அவங்களோட பாஷைதான் வரும். இங்கிலீஸ் சரியா பேச மாட்டான். பிகேவியர் மாறிடும் என அபத்தமாகப் பேசும் பெற்றோரையும் பார்க்க முடியுது. முன்னாடி சொந்தக்காரப் பிள்ளைங்களோடு ஒண்ணா விளையாடி பழகினாங்க. இன்னமும் அதே மகிழ்ச்சியோடு இருக்காங்க. இன்னைக்கு, சக சொந்தக்காரப் பிள்ளையோட தம் பிள்ளையை ஒப்பிட்டு, 'அவன் உன்னைவிட அதிக மார்க் வாங்கிட்டான்; அவள் பரிசு வாங்கிட்டா' என்கிற பெற்றோர்கள் அதிகமாகிட்டாங்க. கூடப் படிக்கும் நண்பன், சொந்தக்காரங்க என எல்லோரையும் எதிரியா நினைச்சுக்கிட்டு வளரும் குழந்தை, யாரிடம் உண்மையான நட்பையும் பாசத்தையும் காட்டும்?
குழந்தைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பயிற்சி வகுப்பு கொடுக்கிறது எந்த அளவுக்குப் பயன் தருதுன்னு பெற்றோர்கள் யோசிச்சுப் பார்க்கணும். நல்ல கல்வியை கொடுத்துட்டால் குழந்தைகளே தங்களுக்கான வேலையை தேர்வுசெய்துக்குவாங்க. ஆனால், 'இவங்கதான் நம்ம சொந்தங்கள். எங்களுக்குப் பிறகு உனக்குப் பக்கபலமா இவங்க எல்லாம்தான் இருப்பாங்க'னு நம் உறவினர்களை அறிமுகம் செய்து வைத்து வளர்த்தால்தான், குழந்தையின் வாழ்க்கைப் பயணத்தில் என்றைக்கும் அன்பும் பாசமும் இருக்கும். இந்தச் சந்தோஷம் அடிக்கடி கிடைக்காவிட்டாலும், சம்மர் விடுமுறை நாட்களிலாவது குழந்தைகளுக்குக் கிடைக்கணும். அப்படிக் கிடைக்கும் புத்துணர்ச்சி, அடுத்த வருஷ பள்ளிப் படிப்பை மகிழ்ச்சியா எதிர்கொள்ள உதவும். இதைப் பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்'' என்கிறார் ப்ரீத்தா நிலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக