தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 மார்ச், 2017

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயிக்கும் உண்மைகள் !(வீடியோ,படங்கள் இணைப்பு )

இலங்கையின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு . நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல் நடுவே அருள் ஒளி பரப்பி நிற்பது . இதுதான் நயினாதீவு உருவால் சிறியதாயினும் அருளின் பொலிவால் சிறந்து விளங்கும் இத்தீவு பழைய காலம் தொட்டே பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டது. நாகதீவு (நாகதீபம்) , நாகநயினாதீவு (வையாபாடல்) , மணித்தீவு (செளந்தர்யலகரி) , மணிபல்லவத்தீவு ( மணிமேகலை) , சம்புத்தீவு (யாழ்ப்பாணச் சரித்திரம் � யோன் ஆசிரியர்) , பிராமணத்தீவு (ஒல்லாந்தர் காலம்) என்பன அவற்றுள் சில.



புகழ் பூத்த இச் சிறிய தீவின் பெருமைக்கு அணியாய் இன்றும் சிறப்புற்று விளங்கும் ஆலயங்கள் பல. ஆதி மனிதன் தன் சிந்தனைக்கும் செயலுக்கும் மேலாக மூலமாய் நின்று வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று உண்டென்று ஒரு கால் உணர்ந்தான். மனம் வாக்கைக் கடந்து உள்நின்ற அப்பொருளைக் கடவுள் என்று அழைத்து வழிபடத்தொடங்கினான். அக் காலத்தில் இருந்தே இச்சிறிய தீவில் தொன்மையான வழிபாட்டு நெறி இருந்து வந்துள்ளது என்பது வெளிநாட்டு நல்லறிஞர் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒரு கருத்தாகும்.

இத்தீவு வாசிகளில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தவர். இவர்களின் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கு முக்கிய காரணமாய் விளங்குவது இன்று நாகபூசணி என அழைக்கப்படும் அம்பிகையின் ஆலயமாகும். சைவ சமயத்தவர்களின் இவ்வூரில் அமைந்துள்ள வேறு வழிபாட்டுத் தெய்வங்கள் ஐயனார், ஸ்ரீ வீரபத்திரர், வயிரவர், முருகன், வேள்விநாயன், காளி, காட்டுக் கந்தசுவாமி, விநாயகர், பிடாரி, மீனாட்சி அம்மன், மலையில் ஐயனார் இவர்களுக்கு அமைந்த கோயில்களாம். இவையன்றியும் , பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வழிபாட்டுக்கான ஆலயங்களும் இங்கு அமைந்துள்ளன.


2002 ஆம் ஆண்டு எடுத்த சில படங்கள்
இலங்கையின் வட பாகத்தில் நாகர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் நாகத்தை வழிபட்டனர் என்று இதிகாச நூல்களால் நாம் அறியலாம் . அம்மன் கோவிலின் மூலத்தானத்தே சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்துதலை சர்ப்பச்சிலை இதற்குத்தக்க சான்றாகும் என்று ஆராச்சியாளர் கருதுகின்றனர்.

இந்திய புராதன சிற்ப சாஸ்திர ஆராச்சியாளர் திரு எம்.நரசிம்மன் அவர்கள் சேர் .கந்தையா வைத்தியநாதன் அவர்களுடன் 11-03-1951 ல் வருகை தந்தார்கள். அப்பொழுது அம்பாள் ‘பாலஸ்தாபனம் ‘ செய்யப்பட்டிருந்த காலம். மூலமூர்த்தியின் அயலே எல்லோரும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த ஆய்வாளர் மூலஸ்தானத்தில் அம்பாள்சிலையின் பின்புறத்தே அழகுற விளங்கும் ஐந்துதலை நாக்ச்சிலையில் தாம் கொண்டு வந்த ஒரு நுண் கருவியை அழுத்தி வெளியே கொண்டுவந்து பார்த்தார். இந்த நாக்ச்சிலை பதினான்காயிரம் வருடப் பழமை உடையது. இங்கு அமைந்திருந்த பழைய வழிபாட்டுப் பொருள் இதுவே. சரித்திரத்தில் கூறப்படும் சர்ப்ப வழிபாட்டுக்கு இலங்கை இந்தியாவில் வேறுஎங்கும் பார்க்கமுடியாத வகையில் பிரத்தியட்ச சான்றாக இது அமைந்திருக்கிறது. இதில் நம்பிக்கை குறைந்தகாலத்தில் முன்னால் அம்மனை பிரதிட்டை பண்ணி இருக்கிறார்கள். இதுவே உண்மையென்று தம்முடன் வந்தோருக்கும் கூறிச் சிலையைத் தரிசிக்கச்செய்தார். பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளரான இவரின் கருத்து இக் கோவிலில் புராதன வழிபாடு நடைபெற்று வந்தமைக்கு தக்க சான்றாகும்.

பண்டிட் சேதுராமன் (அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்னும் சோதிடநூலின் ஆசிரியர்) 1951ஆம் ஆண்டில் இங்கு வந்தார். பூரண நாளான அன்று அம்மனை சிரத்தையோடு வழிபட்டார். ‘ பாம்பு பாம்பு என்று கூறுகிறார்களே, மகா குண்டலினியடா, வழிபடுவோருக்கு நினைத்தவரம் கொடுப்பாள்! என்றார் . மூல மூர்த்தியாக சர்ப்பஉருவில் விளங்குவது மகா குண்டலினி சக்தி என்பது இவர் கருத்து.

ஆதி சங்கராச்சாரியாரால் பாடப்பட்ட லின்காஷ்டகத்தில் ‘ பணிபதி வேஷ்டித கொபிதலிங்கம் ‘ என்றது பாம்பின் படத்தினால் இயற்கையாகச் சுற்றப்பட்டது. அல்லது மூடப்பட்டது. இந்த நயினாதீவைத்தவிர வேறு ஊரில் எங்கும் இருபதாகத் தெரியவில்லை.

இவர்களே அன்றி, வேறு பல இந்திய பேரறிஞர்களும், ஞானிகளும் இங்கு வந்து அம்பாளை தரிசித்து அவள் நல்லருள் பெற்று, இந்த வழிபாட்டு இடத்தின் பழமைக்கு தக்க சான்று பகர்ந்து போய் இருக்குறார்கள். அவர்களில் முதன்மையாக எண்ணத் தக்கவர்கள் : � சிவானந்த சரஸ்வதி, வித்துவான் கி. வா. ஜகந்நாதன், சென்னை பேராசிரியர் ஞானசம்பந்தன், பார்த்தசாரதி, தவத்திரு குன்றக்குடி அடிகள், யோகி சுத்தானந்த பாரதியார், கிருபானந்தவாரியார் (2-9-1955), காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் போன்றோர்.

சர்வமத சமரச வழிபாட்டுக்கும் நிலைக்களனாக விளங்கும் நயினாதீவு ஆலயங்களில் பழமையானது ஸ்ரீ நாகபூசணி அம்மனின் ஆலயமே. நாகேஸ்வரி,நாகராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பராசக்தி, மனோன்மணி, பரமேஸ்வரி என்று அறியப்பட்டவளும், அறுபத்துநான்கு சக்திபீடங்களுள் மணித்தீவில் புவனேஸ்வரி பீடம் ( செளந்தரியலகரி) என கூறப்பட்டதும் இதுவே என்பது ஆன்றோர் துணிபு. அனலைதீவில் இப்போது விளங்கும் நாகதம்பிரான், ஒல்லாந்தர் இக் கோயிலை அழிப்பதற்கு முன், அம்மன் இக் கோயிலிலே இருந்தது என்று நம்பப் படுவதால் இது நாகேஸ்வரம் எனவும் அழைக்கப்பட்ட தென்பர்.

புராதன வழிபாட்டு இடமாய் அமைந்த இக்கோவிலின் ஆரம்பநிலைபற்றி நாம் இப்பொழுது அறிதற்கு தக்க சான்றுகள் கிடைத்தில. சிலப்பதிகாரகால செட்டிமார் வியாபார நிமித்தம் இங்கு வந்து போயினர். அம்மனைப் பூசிக்க பூவுடன் கடல்வழியே வந்தநாகத்தை தாக்க முயன்ற கருடனை அவ்வழிவந்த செட்டி விலக்கி கப்பலில் இருந்த திரவியத்தைக் கரைசேர்த்து கோயிலைச் செப்பனிட்டு நயினாபட்டர் என்னும் பிராமணரைப் பூசைக்கு நியமித்தார் அவர்பெயரால் இத்தீவு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று என அறிகிறோம். இதன் அறிகுறியாக பாம்பு சுற்றிய கல், கருடன் கல் ஆகியவற்றை கோவிலுக்கு வடக்கே உள்ள கடலில் இப்பொழுதும் பார்க்கிறோம். நாகத்தால் பூசிக்கப்பட்ட அம்மை நாகபூசணி எனும் பெயர் பெற்றாள்.

ஒல்லாந்தர் காலத்தில் அம்மன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது.அம்பாளின் திருஉரு வடமேற்கே நின்ற ஒரு ஆலமரப் பொந்துள் மறைத்து வைக்கப்பட்டது.

ஊரின் சிறப்பால் கோயிலும், கோயிலின் சிறப்பால் ஊரும் ஒன்றுக்கொன்று இணையிலாப் பெருமையும் தொன்மையும் கொண்டு விளங்கும் நயினாதீவும், இங்குறையும் ஸ்ரீ நாகபூசணி அம்பாளும் ஈழத்தில், சக்தி வணக்கப் பெருமைக்குச் சான்றாகக் காணப்படுகின்றது.


14 Mar 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1489478521&archive=&start_from=&ucat=1&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக