தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 மார்ச், 2017

பெண்களுக்குச் செம்மையான செம்பருத்தி!

ஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை அடுக்கு மலர் கொண்ட செம்பருத்தியே மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலை, பூ, வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கொண்டவை.
செம்பருத்திப் பூ
சிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகிறது. ஆண்மையைப் பெருக்க, மாதவிலக்கு உண்டாக பயன்படுகிறது. உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்கவும், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தவும், உடலில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. செம்பருத்திப் பூவைக் குடிநீர்செய்து, காலை மாலை குடித்துவந்தால், நீர்க்கட்டு, நீர்எரிச்சல், சிறுநீர்ப் பாதை எரிச்சல், நீர் அடைப்பு போன்ற சிறுநீர் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி மற்றும் உதிரப்போக்குப் பிரச்னையைத் தீர்க்கும்.
செம்பருத்திப் பூ பால்
செம்பருத்திப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை, ஓமம் சேர்த்துக் குடிக்க, வெள்ளை நோய் குணமாகும்.
செம்பருத்தி இலை
செம்பருத்தி இலையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படாது. உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
செம்பருத்திப் பூ மொட்டு
ஆண்மைப் பெருகும், சிறுநீர் எரிச்சல் தீரும், தினமும் நான்கு அல்லிமொட்டு இதழ்களைச் சாப்பிடலாம்.
செம்பருத்திப் பூவின் தைலம்
செம்பருத்திப் பூவின் சாற்றுடன், சரிபங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து, மிதமான வெப்பத்தில் நீர் சுண்டும் வரை காய்ச்சி, காற்று படாமல் வைத்து, தலையில் தேய்த்துவர, உடல் குளிர்ச்சி அடையும். தலை முடி கறுப்பாய் அடர்தியாய் வளரும். தலைச்சூடு, தலைவலி குணமாகும்.
செம்பருத்தித் தேநீர்
தேவையான பொருட்கள்: ஒற்றைச் செம்பருத்தி பூ - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனைவெல்லம் - சிறிதளவு, ஏலக்காய் பொடி -சிறிதளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி, அதில், செம்பருத்திப் பூவின் இதழ்களைப் பிரித்துப் போட்டு, நன்றாகக் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு, அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு மற்றும் பனைவெல்லம் சேர்த்து, நன்றாகக் கொதித்த பிறகு சிறிதளவு ஏலக்காய்ப் பொடி தூவி இறக்க வேண்டும். இதை வடிகட்டினால், ஹெல்த்தி தேநீர் ரெடி!
பலன்கள்
*செம்பருத்தித் தேநீர் குடிப்பதால், உடலில் உள்ள வறட்சி நீங்கும்.
*வயிற்றுப் புண் குணமாகும். வெப்பத்தினால் ஏற்படும் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
*கோடை காலங்களில் முகத்தில் ஏற்படும் சூட்டுக் கொப்பளங்களை நீக்கும்.
*மாதவிடாய் காலங்களில் முந்தைய மூன்று நாட்களுக்கு செம்பருத்தித் தேநீர் அருந்தினால், மாதவிடாய்ப் பிரச்னைகள் குறையும்.
*இந்தத் தேநீரில் எலுமிச்சை சேர்ப்பதால், உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும். மேலும், எடை ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.
*சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கும்.
*பெண்களுக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக