மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார்.
அவருடைய தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த ஆய்வகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கின்றது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.
மூன்று மீட்டர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகள் அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வின் மூலம் புதிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அடைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.
இந்த அகழ்வாராய்ச்சிக்கு மத்திய கலாசார நிதியம், தொல்லியல் மரபுரிமைப் பிரிவு, சுற்றுச் சூழல் பிரிவு ஆகியன யாழ் பல்கலைக்கழகத்தின்; பொறுப்பில் அனுசரணை வழங்கியிருக்கின்றன.
இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், தொல்லியல் மரபு நிலையத்தைப் பராமரிப்பதற்குமாக மன்னார் மாவட்டத்திற்கு மத்திய கலாசார நிதியம் அடுத்த ஆண்டுக்கென ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கியிருப்பதாக யாழ் மாவட்ட மத்திய கலாசார நிலைய அதிகாரி லக்ஸ்மன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் மரபுரிமை நிலையங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக மத்திய கலாசார நிதியம் 150 மில்லியன் ரூபா நிதியை அடுத்த ஆண்டுக்கென ஒதுக்கியிருக்கின்றது என்றார் லக்ஸ்மன்.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில் ஐயனார் வழிபாடு செய்யப்பட்ட இடம் அல்லது ஐயனார் கோவில் ஒன்று அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் இந்த அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன. ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில்கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக