தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 24, 2017

சிவாயநம

திருச்சிற்றம்பலம்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

-திருமூலர்

ஒவ்வொரு வருஷம் தவம் இருந்த பின் அந்த தவத்தின் பயனாய்
ஒவ்வொரு பாடலாக 3000 பாடல்களை அரும் தமிழ் மொழியில்
தந்தவர் திருமூலர். அவர் 3000 வருடங்கள் வாழ்ந்து சிவமானவர்.

கோடான கோடி அண்டங்களுக்கும் தலைவனனும், அணைத்து உயிர்களுக்கும்
நிரந்தர தாயும் தந்தையுமான சிவபெருமானின் புனிதமான நாள்.

இந்த நாளிலே சிவனின் பழமைத்தன்மையையும் அவனுடைய நீண்டு அகண்ட விஸ்வரூபத்தையும் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்
என்று அவன் அருள் கொண்டு எழுதுகிறேன்.

சிவனுடைய பெருமைகளையெல்லம் எடுத்து மிக தெளிவாக இந்த மண்ணுலகுக்கு எடுத்துச் சொன்னவர் மணிவாசக பெருமான். அவர் அறிவினால் சிவமே ஆனவர். எல்லா சிவனடியார்களும் சிவனுக்கு
தொண்டு செய்து அவனடி அடைந்தார்கள் ஆனால் அந்த சிவனோ
மாணிக்கவாசகருக்கு தொண்டு செய்து அவரை ஆட்க்கொண்டார் என்றால்! மாணிக்க வாசகரின் பெருமையை என்னவென்று சொல்லுவது? அவர் முதல் முதலில் சிவபெருமானை குரு வடிவாக குருந்த மர நிழலில் கண்டதாக பாடுகின்றார்.

குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்து
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

-மாணிக்கவாசகர்

திருவாசகத்துக்கு உருகார் வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார் இது ஒரு
பொன்மொழி.

அந்த திருவாசகத்தால் தமிழுக்கு பெருமை சைவர்களாகிய எங்களுக்கு
பெருமை ஏன் என்றால்! மாணிக்கவாசகர் பாட அதை தன்னுடைய
திருக்கரங்களினாலேயே தமிழில் எழுதி கொடுத்தான் எம் அப்பன் சிவன்!
அப்படி கூறுவோமானால் திருவாசகம் எத்தனை உயர்ந்தது?

திருவாசகம் படித்தால் மீண்டு ஓர் கருவாசம் இல்லை. திருவாசகம் படித்தால் என்ன கிடைக்கும்? இவ்வுலகில் நல்லன எல்லாம் கிடைக்கும்
அவ்வுலகில் அவனே கிடைப்பான்.
தொல்லை தரும் பிறவி வேரை அறுக்கும் சக்தியுடையது திருவாசகம்.

மனிதன் சந்திரனை ஆராய்கின்றான் சூரியனை ஆராய்கின்றன் அணுவை
ஆராய்கின்றான், ஆனால் நான் யார் எங்கிருந்து வந்தேன்? எதற்காக இங்கே வந்தேன்? இந்த உடல் தானே வந்ததா? இல்லை யராவது கொடுத்து வந்ததா? ஏன் வாழ்க்கையில் இத்தனை இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது? இறந்த பின் எங்கே போகப்போகிறது இந்த உயிர் ?
இந்த உயிரினுடைய இலக்கு என்ன ?
இவற்றை நம்மில் பலர் ஆராய்ந்து பார்ப்பதே இல்லை.

இந்த அழியக்கூடிய உடல் மேலும், பொருள் மேலும் அதிக அக்கறை காட்டுகிறோம்.

இந்த உடல் அழிக்க கூடியது இந்த உலகமும் இங்கே இருக்கின்ற அனைத்துமே அழியக்கூடியவை. ஆனால் என்றுமே அழிவில்லாதவன்
சிவன் ஒருவனே. அப்படி பட்ட அந்த அழிவில்லாத சிவத்தோடு இரண்டற
கலப்பதே முக்தி. முக்தி அடைந்தால் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டியதில்லை. அதற்கு வழிகாட்டுவதே சிவபுராணம்.
இதை தான் ஒவ்வொரு ஆத்மாக்களும் தங்களுடைய இலக்காக வைத்து
கொள்ள வேண்டும்.

சிவபுராணத்தில் திருவண்ட பகுதியில் மாணிக்க வாசகர் கூறுகின்றார்.
சிவபெருமான் இந்த பரந்த வான் மண்டலத்தில் கோடான கோடி
அண்டங்களை படைத்தது அது இன்னும் விரிந்து கொண்டே செல்வதாக
கூறு கின்றார். இதை இன்றைய விஞஞானமும் ஒப்புக்கொள்ளுகிறது.

ஒரு அண்டம் என்பது ஒரு சூரிய குடும்பம் அந்த சூரியன் தன்னுடைய
சொந்த குடும்பதை ஒருமுறை சுற்றிவர இருபத்தி மூவாயிரம் கோடி
ஆண்டுகள் எடுக்கின்றனவாம் (23 மில்லியன்) இப்படி பலகோடி சூரிய
குடும்பங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சிவபெருமானுடைய
கண்ணுக்கு சிறு சிறு தூசிகளை போல் தெரியுமாம் அப்படியென்றால்
அவனுடைய திருவுருத்தின் அளவை எங்களால் கற்பனை கூட பண்ண பார்க்க முடியாது.

ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒவ்வொரு பிரம்மா, ஒவ்வொரு விஷ்ணு, ஒவ்வொரு இந்திரன் ஆனால் அனைத்து அண்டங்களுக்கும் சிவன் ஒருவனே தலைவன்.

இங்கே ஒரு வினா வரக்கூடும் ஏன் இந்து சமயத்தில் இத்தனை கடவுள்கள் ?
ஒவ்வொரு கடவுள்களும் ஒவ்வொரு காரணத்திற்காக சிவபெருமானால்
தோற்றுவிக்க பட்டவை.

கஜாசூரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக விநாயகர் தோற்றுவிக்க படார், சூரபத்மனை வதம் செய்வதற்காக ஆறுமுகன் தோற்றுவிக்க படார்
மஹிஷி என்ற அரக்கியை வதம் செய்வதற்காக ஐயப்பன் தோற்றுவிக்க பட்டார் .... இப்பிடியே கூறிக்கொண்டே போகலாம்.
நாங்கள் எந்த கடவுளை வணங்கினாலும் அந்த பலன் யாவும், மூலமும்
நடுவும் முடிவுமாகிய சிவனையே சென்றடையும்.

ஊழிக்காலம் வரும் போது அனைத்து அண்டங்களையும் அழித்து
தனக்குள் ஒடுக்கி கொண்டு, உயிர்களுக்கெல்லாம் ஓய்வு கொடுப்பானாம்.
உயிர்கள் மீதுகொண்ட அன்பினால் சிலகாலத்தின் பின் மீண்டு அனைத்து அண்டங்களையும் விரியவைத்து உயிர்களை பிறக்க வைப்பான் இதைத் தான் அவன் செய்து கொண்டிருக்கிறான். அப்படி பட்ட அந்த தனிப் பெரும் கருணை கடலான சிவனை நாமும் திருவாசகம் பாடி அவன் திருவடி பேறு பெற்று மீண்டும் பிறவா நிலை அடைவோமாக.

அதுமட்டும் அல்ல அவனுடைய திருவைந்தெழுத்தை (சிவாயநம) நாளும் ஜெபித்து நற்கதியடைவோமாக.

பிறப்பு, இறப்பு, பிரபஞ்ச ரகசியங்களை எங்களுக்கு அள்ளி தந்த வள்ளல் மாணிக்கவாசகர் திருவடிகளை போற்றி வணங்குவோமாக.

வாழ்க மாணிக்கவாசகர் புகழ்.

சிவாயநம

சிவ சிந்தனையோடு

பாலா ரவி
 — with ஸ்ரீ மகாதேவர் கோவில் சிவலிங்கபுரம்.

No comments:

Post a Comment