தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 3, 2018

இணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்!

காரைக்கால் சுவாமிகள்!
சடைமுடியுடன் கூடிய தாடி, அரையில் வேட்டி, நெற்றியில் நீறு, இவற்றுடன் புராணங்களில் வரும் முனிவர்களை நினைவூட்டும் ஒரு எளிதான சிறிய உருவம். இவர்தான் காரைக்கால் சுவாமியார். பலவிதமான நோய்களையும் தீர்த்து வைக்கும் அருள் நிறைந்த அற்புதமான ஒருவர் என்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தேடிவரும் ஒரு புண்ணிய பூமியாக நமது இணுவிலை மிளிர வைத்தவர்களில் இவரும் ஒருவராவர்.
இவர் இணுவிலில் குழந்தையர் வேலாயுதர் மரபு வழிவந்த கதிரித்தம்பி என்பவரின் ஒரே புதல்வராக பிறந்தார். அம்பலவாணர் என்று பெயருடன் வளர்ந்து இறைவன் அருளலால் ஆட்கொண்டு பல அரும் பெரும் செயல்களையும் சேவைகளையும் மேற்கொண்டு மக்கள் மனதில் நிறைந்து காரைக்கால் சாமியார் என்று அழைக்கப்பட்டார் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததனால் இவருடைய கல்விப் படிப்பு தடைப்பட்டுவிட தகப்பனாருடைய விவசாய நிலங்களைப் பராமரித்துவந்தார். தங்களது மாடுகளை காரைக்கால் பகுதிகளுக்கு கொண்டு சென்று மேய்த்து வருவதும் இவருடைய வழக்கமாகவிருந்தது.
காரைக்காலில் அமைந்த விசாலாட்சி சமேத விஸ்வநாதப் பெருமான் கோயில் மிகப் பிரசித்தி பெற்றிருந்ததால் பல பெரியோர்கள் அயற்கிராமங்களில் இருந்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.இத் திருத்தலத்திற்கு அடிக்கடி வந்து போகும் வைத்தியர் நடராசா அவர்கள் அத்திருத்தலத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அடிக்கடி நினைத்துக் கொள்வார். ஒருநாள் அதே சிந்தனையுடன் நித்திரை கொண்டிருந்த போது அவர் கனவில் சிறிய உருவமுடைய பையனின் தோற்றம் தெரிந்தது.
தனது கனவைப் பற்றி இளையவர் செல்லப்பா என்பவரிடம் கூற, அவர் ஆண்டவன் கிருபையினால் அம்பலவாணர் தான் அப் பையனாக இருக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டு அம்பலவாணரை வைத்தியர் நடராசரிடம் அழைத்துச் சென்றார். கனவில் கண்ட சிறுவனை நேரிற் கண்டதும் வைத்தியர் நடராசர் மிக மகிழ்ச்சிகொண்டு அன்று முதல் அம்பலவாணருக்கு குருவுபதேசம் செய்து, ஞானமார்க்கம், சித்த வயித்தியம், விசக்கடி வைத்தியம், மாந்திரீகம், சோதிடம் போன்ற பல்வேறு கல்விகளையும் கற்றுக் கொடுத்து ஆலயத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தார். நாளடைவில் அம்பலவாணர் சிவன் கோயில் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, சித்த வையித்தியத்தையும் முறைப்படி செய்வதற்கு ஆரம்பித்தார்.
காலைப் பூசை முடிந்ததும் தன்னை நாடிவந்த நோயாளருக்கும், மற்றும் மனக்குறைகளோடு வந்தவர்க்கும் திருநீறிட்டு மந்திர செபம் செய்து மருந்துகள் கொடுத்து வழியனுப்பிவைப்பார். இவ்வளவுதான் பணம் என்று கேட்டு வாங்காமல் அவர்கள் தரும் பணத்தை மட்டும் மகிழ்வோடு பெற்றுக் கொள்வார். இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் நோயாளிகள் இவர் சிறப்பையும் மகிமையையும் கேட்டு வந்தனர். பல வைத்தியர்களால் கைவிடப்பட்ட மணி மந்திரம், கிரகசாந்தி, வீபூதி, பெல்லி சூனியக்கழிப்பு ஆகியவற்றால் தீர்த்து வைப்பார். இவர் சூனியத்தால் தாகப் பட்டவர்களை மயானத்தில் பறைமேளம், உடுக்கு, சங்கு, சேமக்கலம் போன்ற இசைக் கருவிகளை இசைக்க வைத்து பலியும் கொடுப்பித்து சுகப்படுத்தினார். கூடுதலாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை "துலங்கு" என்னும் மரக்குற்றியில் கால் கைகளுக்கு விலங்கிட்டும் வேறுபல முறைகளைக் கையாண்டும் அவர்களை குணப்படுத்துவதை நான் அங்கு போகின்ற வேளைகளில் கண்டிருக்கிறேன்.
நாளடைவில் இவரது பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. பல இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து பலன் பெற்றுச் சென்றார்கள். அங்கு வருபவர்கள் தங்கிச் செல்வதற்கு வசதியாக மடங்களும் தருப்பிடங்களும் அமைக்கப்பட்டன. அங்குவருபவர்கள் கொடுக்கும் நிதிகளைக் கொண்டு கோயிலுக்கு பல திருப்பணி வேலைகள் இவரது மேற்பார்வையில் நடைபெற்றன. ஆலயத்தின் பூசைகளை சின்னத்துரை ஐயர் அவர்கள் செய்துவந்தார்கள். பெரிய சந்நியாசியாரினால் இக்கோயிலில் நடப்பட்ட 1008 மரங்களை காரைக்கால் சாமியார் பராமரித்து வளர்த்ததனால் இத் திருக்கோயில் மிக அழகாக சோலைசூழ்ந்து காணப்படுகிறது. இன்றும் காலக்கிரமப் பூசைகளும் கொடியேற்ற மகோற்சவங்களும் காலம் தவறாமல் ஒழுங்காக, மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காரைக்கால் பூங்காவனத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. விடிய விடிய மேள, நாதஸ்வரம், இசைநிகழ்ச்சிகள் விடிய விடிய இடம்பெறும். நண்பர்களுடன் சென்று பார்த்த நினைவுகள் இன்றும் மனதில் நீங்காது இருக்கின்றன.
காரைக்கால் சாமியாரின் சடைமுடியும், தாடியும், வேட்டியும் பார்ப்பவரை கையெடுத்து வணங்கச் செய்யும். இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இவர் முத்தி எய்தியபோது இணுவில் கிராமமே திரண்டு வந்து மரியாதை செய்தது. இவர் சமாதியடைந்தது 1979ம் ஆண்டு தைப்பூச தினமாகும். இவரது பூதஉடல் கோயிலின் மேற்குப்புறத்தே சமாதியில் வைக்கப்பட்டுள்ளது.
இவரைப் போன்ற பல சுவாமிகளும் வேதாந்திகளும் அறிஞர்களும் ஞானிகளும், சித்தர்களும், அருலாளர்களும் பிறந்து வாழ்ந்ததாலும், இன்றும் அவர்களைப் போல பலர் வாழ்ந்து கொண்டிருப்பதாலும், எமது இணுவில் மண் ஒரு ஞானபூமியாகத் திகழ்ந்து வருகிறது.

No comments:

Post a Comment