இந்து மக்களின் நம்பிக்கை படி மனிதர்களின் பாவ புண்ணியத்திற்கேற்ப அவரவர் விதியை நவக்கிரகங்கள் தீர்மானிப்பதாக நம்புகின்றனர். சூரியனும் அதை சுற்றும் ஒன்பது கோள்களும் இந்து மக்களின் வாழ்வில் மிக முக்கியமானவை.
நவகிரக கோயில்கள் தமிழ் நாடு முழுவதும் ஏராளமாக இருந்தாலும் நாம் வழிபடும் சிறு சிறு கோயில்களிலும் நவகிரகங்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் சிறப்பு முக்கியத்துவம் பெற்றவை. அவற்றில் நாம் இப்போது காணப் போவது தேவிபட்டினம் என்கிற ஊரில் உள்ள நவபாஷான நவகிரக கோயில்.
தேவிபட்டினம் என்பது ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு ஊர். இங்குதான் கடற்கரையில் இருந்து சுமார் 45 மீட்டர் தொலைவில் கடலினுள் இக்கோயில் அமைந்திருக்கிறது. இந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் ஸ்ரீராமர் என்று புராணம் கூறுகிறது.
பாஷாணம் என்றால் கல் என்று பொருள். நவபாஷாணம் என்றால் ஒன்பது கற்களால் ஆன சிலைகள் என்று அர்த்தம்
இதன் காலம் 1000 - 2000 வருடங்களுக்கு முந்தையது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் இன்னமும் இதன் சக்திநிலை மற்றும் சிலைகள் சேதாரம் இன்றி அப்படியே இருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.
முன் ஜென்ம பாவங்கள் தீரவும் , பிதுர் கடன் தீர்க்கவும் இந்த தலம் உதவி செய்கிறது. அமாவாசை அன்று இங்கு விசேஷமாக இருக்கிறது.
ராமன் கதை நம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் தெரியும்.தேவர்களாலும் தெய்வங்களாலும் மரணம் ஏற்படாத வரம் வாங்கிய ராவணனை அழிக்க மனித உருவில் வந்து வதம் செய்த அவதாரமே ராம அவதாரம்.
தவறவிட்ட தனது மனைவியை மீட்க இலங்கைக்கு பாலம் கட்டும் போது முதலில் விநாயாகரைத் தொழுது பின்னர் பாலம் கட்ட வேண்டும் என்கிற சாஸ்திரப் படி நவபாஷன சிலை வடித்து வேண்டிக் கொண்டார். அந்தக் கோயிலின் பெயர் உப்பூர் வெயிலுகந்த விநாயகர்.
அங்கு வழிபட்டு முடிந்தபின் சனி தோஷத்தினாலேயே மனைவியைப் பிரிய நேரிட்டதாகவும் அதற்கான தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அசரீரி கூற அதன் படி அங்கிருந்து தேவிபட்டினம் என்கிற ஊருக்கு ராமர் வந்தார்.
தெய்வங்களிற்கும் மனிதர்களுக்கும் தோஷங்கள் பேதங்கள் பார்ப்பதில்லை போலும்.
தேவிபட்டினம் வந்த ஸ்ரீராமர் அவரது கைகளால் பிடிக்கப்பட்ட ஒன்பது மண் உருண்டைகளை ஒன்பது கோள்களாக்கி அவை கற்களாக மாறும்படி ஸ்ரீமன் நாராயணரை வேண்டினார். கற்களாக மாறிய கோள்களை பக்தியோடு வழிபட்டார்.
ராம பிரான் வழிபடும்போது கடல் அலைகள் குறுக்கிடவே அவை குறுக்கிடா வண்ணம் விஷ்ணுவை வேண்டினார். அன்றிலிருந்து இன்று வரை இதனாலேயே கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை.
இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு.
இங்குள்ள நவகிரகங்களுக்கு நம் கைகளாலேயே அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பு.
அமைதியாக ஆரவாரமில்லாத கடல் நடுவே மூர்த்தி தலம் கீர்த்தி எல்லாம் ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம்தான் நவபாஷாணம் என்றும் சொல்லுவர் . இங்கேதான் பார்வதியும் பரமேஸ்வரனும் ஒன்றாக ராமபிரானுக்கு காட்சி அளித்த தலமும் கூட.
ஒரு பாவமும் செய்திராத ஸ்ரீ ராமருக்கே மனித அவதாரத்தால் ஏற்பட்ட பாவங்கள் போக்க உதவிய ராமேஸ்வரமும் தேவி பட்டினமும் மனிதராய்ப் பிறந்து உயிரின் பயன் புரியாமலே வாழ்ந்து முடிக்கும் நம் அறியாமை பாவங்களை அவசியம் போக்கித் தர வேண்டும் என்பது தெரியாத என்ன?
நேர்த்திக் கடன் தீர்க்க நவகிரக வலம், நவதான்ய தர்ப்பணம் , தானம் செய்தல் மற்றும் தோஷ நிவர்த்தி ஆகியவை இங்கு செய்ய வேண்டும்.
இங்கு நவ தானியங்களை வைத்து வழிபடுவதன் மூலம் அனைத்து பலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம் .
ஸ்ரீ ராமரின் சனி தோஷத்தையே நீக்கிய ஸ்தலத்தில் நம் தோஷம் நீங்காமலா போய் விடும்.. நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்.
http://news.lankasri.com/spiritual/03/179533?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக