ஒரு நித்திய சுடரின் (Jwala ji) ஆரம்பமும் அறிந்திராமல், இன்றுவரை அதை அணைக்கவும் முடியாமல், அது தொடர்ந்து எரிவதற்கான ஆதார மூலத்தையும் ஆராய முடியாமல் இருப்பதுதான் ஜுவாலா ஜி கோவிலின் சிறப்பு.
இமயமலை சாரலில் உள்ள இமாசல பிரதேச மாநிலத்தில் காங்க்ரா மாவட்டத்தில் இந்த ஜுவாலா ஜி கோவில் உள்ளது. இது சக்தியின் வடிவமாகவும் இந்துமத வழிபாட்டு தலமாகவும் விளங்குகிறது. ஜுவால தேவி, ஜுவால முகி என்றும் இது அழைக்கப்படுகிறது.
இங்கு சமஸ்கிருதம், தேவநகரி, ஹிஜ்ரி, பஞ்சாபி மொழிகளிலான 1158, 1745, 1802 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகிறது.
இந்த ஜுவாலை தோற்றம் பற்றிய கதையோ, நிலவுக்கும் எட்டாத பழங்கால தன்மையுடையது.
ஜுவாலா ஜி கோயில் தோன்றிய கதை:
இதிகாச புராண கதையின்படி, சக்தியின் தந்தை, சிவன் மீது குற்றம் சுமத்தியதால் சக்தி தனது புனித சக்தியால் தானாகவே இறக்கிறார். அதனால், சிவபெருமான் மரண மயக்கமாகி விழுகிறார்.
இதனால், மகாவிஷ்ணு சக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் வீசுகிறார்.
சக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில். சக்தியின் மற்ற உடற்பகுதிகள் விழுந்த இடங்கள் ஒவ்வொன்றுமே சக்தி பீடங்களாக புகழான கோவில்களோடு விளங்குகின்றன.
நித்திய சுடர் பற்றி நீளும் ஆய்வுகள்:
இந்த நித்திய சுடர் சக்தி நாக்கு விழுந்த நாளிலிருந்து எரிவதாக புராணம் கூறுகிறது.
7 ஜுவாலைகளில் தெரிவது ஏழு தெய்வ சகோதரிகள், 9 ஜுவாலைகளில் தெரிவது ஒன்பது துர்கைகள் என துதிக்கின்றனர்.
அறிவியல் ஆராய்கிறது:
சுடர் நீலநிறத்தில் எரிவதால் வெளியாகும் எரிபொருள் முழுபயன்பாட்டோடு எரிவதாக அறிவியல் பார்க்கிறது.
இதற்கு காரணமாக அந்த இடத்தில் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கை எரிபொருள் மூலம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதே சமயம், இயற்கை வாயு ஊற்றுகள் உள்ள பல இடங்களில் இதுபோன்ற அணைக்கவே முடியாத நெடுங்கால நித்ய சுடர் எங்கும் ஏற்பட்டதில்லை.
மொகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் தனது ஆட்சியில் இந்த நித்திய சுடரை அணைக்க முயன்றார்.
அது முடியாமல் போனதால் அந்த வினோத சக்தியை வியந்து தங்கம் போல குடைவடிவிலான ஒரு பொருளை அன்பளிப்பு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நேருவும் தனது ஆட்சியில் புவியியலாளர்களை அழைத்துச்சென்று அதை அணைக்கவும் ஆராயவும் முயன்றார். இரண்டுமே சாத்தியமாகாமல் போனது.
ஒரு புனித தன்மையை ஏற்படுத்திவிட்டதால் மேற்கொண்டு, ஆணைப்பதற்கும் ஆராய்வதற்கும் உலகளவிலான பெரிய முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பாகு அடெஷ்கா கோயில்:
இதே போல, பாகு அடெஷ்கா, என்ற இந்துக்கள் மற்றும் ஸொராஷ்டிரர்கள் வழிபாட்டுத்தலம் அஸெர்பைஜனில் உள்ளது.
அங்கும் பாறைகளின் பின்புலத்தில் நித்திய சுடர் எரிந்தது. 16 ம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்ட அந்த சுடர் சமீபகாலம் வரை எரிந்து அணைந்தது குறிப்பிடத்தக்கது. சக்தி நகரிலும் ஒரு ஜுவாலா தேவி:
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சக்தி நகரிலும் ஜுவாலா தேவி கோவில் உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.
இந்த அம்மனுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு, உலோகத்தாலான நாக்கை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேபாளத்திலும் ஜுவாலா மாய்:
நேபாலில் தோரங் லா மலை அடிவாரத்திலிருந்து 3710 மீட்டர் உயரத்தில், முஸ்டங் மாவட்டத்தில், முக்திநாத் ஊரில் நித்திய சுடர் கோயில் அமைந்துள்ளது.
நிலம் மற்றும் நீரிலும் இயற்கை வாயு ஊற்றின் காரணமாக சுடர் எரிகிறது. இதையும் இங்குள்ள இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினரும் புனிதமாக வழிபடுகின்றனர்.
ஆனாலும், ஜுவாலா ஜி கோயிலில்தான் இன்னும் குறையாமலும் அணையாமலும் பிரம்மாண்டமாக எரிகிறது, அதனால், அறிவியல் எங்கு திணறுகிறதோ அந்த இடத்தில் ஆன்மீகம் தொடங்குவதாக ஒரு நம்பிக்கையில் பலர் கூறுகின்றனர்.
உலகின் உருவாக்கம் முதற்கொண்டு நல்லது கெட்டது எல்லாவற்றுக்குமே கடவுள்தான் பின்புலமாக இருக்கிறார் என்று ஆன்மீகநெறிகள் கூறுகையில், இந்த நித்திய சுடர் மட்டும் கடவுளுக்கு சான்றாவது அவசியமில்லாதது.
மற்ற இடங்களைவிட, இயற்கை எரிபொருள் மூலம் ஜுவாலா ஜியில் அதிகமாக இருக்கலாம் இந்த தீயும் ஒருநாள் அடங்கலாம் என்று வேறொரு நம்பிக்கையில் சிலர் கூறுகின்றனர். -மருசரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக