தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முயல், ஆமை கதையின் இறுதியான இன்றைய வடிவம்!


முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
...
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.
நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!
நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!
டீம்_வொர்க்
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!
இறுதியாக
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
ஆனால்
முயலாமை ஒருபோதும் வெல்லாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக