தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சோனியா காந்தியின் காதல்!

இத்தாலி கிராமம் ஒன்றில் ஒரு கட்டடத் தொழிலாளியின் மகளாக 1946-ம் ஆண்டு பிறந்தவர் எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் பெல் கல்வி அறக்கட்டளையினரின் ஆங்கில மொழிப் பாட வகுப்பில் சேர்வதற்காக அவர் கேம்பிரிட்ஜ் வந்தபோது, அவருக்கு வயது 18!


அங்குதான் அந்த இளைஞரை சந்தித்தார் எட்விகே. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயின்று கொண்டிருந்த அந்த இளைஞர், தன்னை 'இந்தியன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட ஈர்ப்பு, சாதாரணமான நட்பு மட்டுமல்ல.. அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று என்பதை இருவருமே உணர்ந்தனர்.

வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பல முறை சந்தித்துக் கொள்ளத் தொடங்கினர். நாடு, குடும்பம் போன்ற விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது அந்த இளைஞர் தன்னைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்லிக் கொண்ட ஒரு விஷயம் அந்த இத்தாலியப் பெண்ணை திடுக்கிட வைத்தது.

''நான் நேருவின் பேரன்! இந்திராவின் மகன்!''

ஆம்! இன்று சோனியா காந்தியாக மக்கள் மனதில் அழுந்தப் பதிந்திருக்கும் ஒரு தேசியத் தலைவியின் இளமைக் காலம் அது.

''நாங்கள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லிக் கொள்ளும்போதே, ஓர் உண்மை தெளிவாகப் புரிந்து போனது. அந்தச் சந்திப்பிலேயே நான் அவர் மீது காதலில் விழுந்து விட்டேன் என்பதுதான் அது!'' என்று ராஜீவுடனான தன் முதல் சந்திப்பைப் பற்றிப் பிற்பாடு குறிப்பிட்ட சோனியா, அன்று என்னவோ பயந்துதான் போனார். நாடு, மொழி, அந்தஸ்து என்று அவர்களிடையே இருந்த வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நினைத்து கலங்கிப் போனார்.

ஆனால், ராஜீவ் அவர் மீது காட்டிய கலப்பில்லாத அன்பும், பரிவும், காதலும் அவர் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்தன.

இந்தியக் கலாசாரத்தின்படி, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணமாய்க் கனிய வேண்டும் என்பதில் இருவரும் தீர்மானமாக இருந்தனர். தந்தை இல்லாத ராஜீவுக்கு அப்போது எல்லாமுமாக இருந்தவர் அவருடைய தாய் இந்திராதான். அவர் ராஜீவின் தாய் மட்டுமல்ல.. இந்தியாவின் பிரதமரும் கூட! அவரது அனுமதியையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்காக ஆவலோடு காத்திருந்தனர் காதலர்கள். அந்த நாளும் வந்தது..

ராஜீவ் தைரிய வார்த்தைகள் சொல்லி தயார் செய்திருந்தாலும், அந்தச் சந்திப்பைப் பெரும் பயத்துடன்தான் எதிர்கொண்டார் சோனியா. ஆனால், அன்று அவர் சந்தித்தது மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரை அல்ல. கனிவுடன் வரவேற்று, தன் உள்ளத்தில் இடமளித்த ஒரு தாயைத்தான்! முதல் பார்வையிலேயே ராஜீவுடன் காதல் உருவானது என்றால், இந்திராவுடனான முதல் சந்திப்பிலேயே தாய் - மகள் என்ற புதிய உறவு உருவானது!

தன் பாதுகாவலனாலேயே சுடப்பட்ட இந்திரா காந்தி, சோனியாவின் மடி மீது உயிர் துறந்த கணம் வரை அந்த அசாதாரண பாசமும், உறவும் தொடர்ந்தன.

மூன்று ஆண்டுகள் உயிருக்கு உயிராய்க் காதலித்த பின், 1968-ல் ராஜீவும் சோனியாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்திய சாத்திர முறைப்படி நடைபெற்ற எளிய திருமண நிகழ்ச்சியில், தன் கையால் நெய்த இளஞ்சிவப்பு நிறக் கைத்தறிப் புடவை அணிந்து, ராஜீவின் கைத்தலம் பற்றி, நேரு குடும்பத்தில் அடியெடுத்து வைத்தார் சோனியா.

கணவர் மீது உயிரையே வைத்திருந்த காதல் மனைவியாகவும், பிரதமர் இந்திராவுக்கு தோழியாகவும், பாசமிகு மருமகளாகவும் சோனியா விளங்கினார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டியாகப் பணிபுரிந்த ராஜீவும் சோனியாவும் அரசியலே அண்டாத அமைதியான, அழகான வாழ்க்கை நடத்தினர். காதலின் பரிசாக அவர்களுக்கு ராகுல் என்ற மகனும், பிரியங்கா என்ற மகளும் பிறந்தனர்.

ஆனால், அரசியலில் இருந்த இந்திராவின் இளைய மகன் சஞ்ஜய் 1980-ம் ஆண்டு ஒரு விமான விபத்தில் அகால மரணம் அடைந்த போது, தாய்க்கு உதவியாக ராஜீவ் அரசியலில் ஈடுபடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ராஜீவ் அரசியலில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்த்த சோனியா, இறுதியில் மாமியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி சம்மதம் தந்தார்.

1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ராஜீவ் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கும் நிலை வந்தது. நல்ல மனமும், துடிப்புள்ள செயலாக்கமும் கொண்டிருந்த ராஜீவ், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் கம்ப்யூட்டர் கல்வியையும், தொழில் நுட்பத்தையும் பெருமளவில் நடைமுறைப்படுத்தினார். நாடு முழுக்க கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் துயர் துடைப்பதில் ராஜீவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினார் சோனியா.

ஆனால், விதியின் ஏற்பாடு வேறாக இருந்தது. 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, தமிழ் மண்ணில் பலியானார் ராஜீவ். சோனியாவின் உலகமே அந்த நொடியில் தகர்ந்து போனது. அப்போது அவர் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அடுத்து வந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, சோனியாவை பிரதமராகப் பொறுப்பேற்க வலியுறுத்தியது. கணவர் மறைவின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத சோனியா, பதவியை மறுத்தார். பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த அவர், பிறகு கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2004 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட சோனியா, நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து, காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் அயல்நாட்டுப் பெண் என்று எழுந்த அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் வென்று நின்றது அவரது மடிப்பு கலையாத புடவை.

உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக வெளிநாட்டு நிறுவனங்களாலும் பத்திரிகைகளாலும் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டவர் சோனியா. விமர்சனங்கள் ஒருபுறம் கிடக்கட்டும்.. அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய ஒரு சாதாரண பெண்ணை அசாதாரண சூழ்நிலைகள் அசுரத்தனமாக சுழற்றியடித்தது உண்மை. அப்போதும் அசையாத கோபுரமாக நின்றவர் சோனியா.. 

இதுவும் உண்மை. ராஜீவ் மீதும், ராஜீவ் நேசித்த இந்த நாட்டின் மீதும் அவருக்கு இருந்த பக்தியே அப்படிப்பட்ட வலிமையை அவருக்குத் தந்தது என்பதும் உறுதியான உண்மை!

- See more at: http://www.manithan.com/news/20160209118752#sthash.8zwywY4T.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக