தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

குத்து விளக்கு!


இருளை விரட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனமே விளக்கு. இருளில் உள்ள பொருள்களை தனது ஒளிவிடும் சுடரினால் விளங்கும்படி செய்வதனால் அது விளக்கு என்று ஆயிற்று. அகல் விளக்கு, தொங்கு விளக்கு, காமட்சி விளக்கு, குத்து விளக்கு என வகைகள் பல இருப்பினும் தமிழ் மரபில் குத்து விளக்குக்குத் தனி இடமுண்டு. இவ்விளக்கு சமய சடங்குகள், வாழ்க்கைவட்ட சடங்குகள் மற்றும் பொது விழாக்களில் இடம் பெறுவது சம்பிரதாயம். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் குத்து விளக்கு ஏற்றப்பட்டு தொடங்குவது என்பது மரபு. பொதுவாக குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகம் பித்தளையே ஆகும். வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களிலும் இவ்விளக்குகள் உருவாக்கப்படுவது உண்டு. எவர்சில்வர் என்கிற ஸ்டென்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டிற்கு வந்த பின் அதிலும் விளக்குகள் தயாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறிய விளக்குகளே இதனால் செய்யப்படுகின்றன. இத்தகைய விளக்குகள் விலை குறைவாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகாது. மேலும் இந்த உலோகத்தில் இரும்பு கலப்பு இருப்பதால் பொதுவாக மரபுவழியில் அது ஏற்கப்படுவதில்லை. குத்துவிளக்குகள் வாழைப்பூ விளக்கு, காய் விளக்கு, கம்பி விளக்கு, லட்சுமி விளக்கு, தூண்டாமணி விளக்கு என பலவகைளில் தயாரிக்கப்படுகின்றன.

குத்து விளக்கு தெய்வ அம்சம் பொருந்தியது, மங்களத்தைக் குறிக்கும். விளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் விளக்கப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள் என்பதாக விளக்கப்படுவதுடன் இவை அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பதாகும் என்று கொள்ளப்படுகிறது. குத்துவிளக்கை நன்கு துலக்கி, குங்குமமிட்டு, பூ போட்டு அலங்காரம் செய்யவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது பற்றிய விளக்களையும் முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும் அதன் பலன் என்ன என்பது பற்றியும் விளக்கம் உண்டு. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு. தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும். அது போல் எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்என்பது பற்றியும் அதனால் உண்டாகும் பலன்களும் சொல்லப்பட்டிருக்கிறன

. குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன். இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை. மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி. நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும். தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும். புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும். புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வரும். நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி. விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும். நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலனே. கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும். இவ்வாறெல்லாம் விளக்குப் பற்றிய நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக