கடந்த சில தினங்களாக இரகசியமான முறையில் இந்த சம்பவம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஒல்லாந்தர் காலத்தில் 1850ம் ஆண்டளவில் குறித்த கப்பலேந்தி மாதா ஆலயம் அப்பகுதியில் அமைக்கப்பட்டதாக அந்தக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அப்போதைய காலத்தில் குறித்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபங்களில் காணப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் பல குறித்த ஆலயத்தினுள் புதைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆலய கட்டிடம் சூழ்ந்த பகுதியை தொல் பொருள் திணைக்களம் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததோடு குறித்த பகுதியினுள் நுழைந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதையும் தடை விதித்திருந்தனர்.
குறித்த பகுதிக்குள் கடந்த சில தினங்களாக சென்ற நபர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் அக்கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
நேற்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள பொலிஸ் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன் போது சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த ஆலய கட்டிடத்தின் உட்பகுதியில் சுமார் 8 அடி வரையில் பள்ளம் தோண்டப்பட்டு, அருகில் தேசிக்காய் உள்ளிட்ட சில பொருட்களும் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை எடுத்துள்ள மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த மன்னார் பொலிஸார் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் மேற்குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக