தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூன், 2016

நிலப் பாகுபாடு ,மக்களும் பண்பாடும்!


நிலப் பாகுபாடு 

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணை யுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள், வள்ளிக் கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடு மாடுகளை மேய்க்கும் மேய்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள் ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையி லிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்றூர்கள் பேரூர் களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாக யிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் எறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக