தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூன், 2016

பழந்தமிழர் திருமண மரபு


திருமணம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. பழந்தமிழர் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச்சடங்கினை பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில், பழந்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்; எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன; பின்னர் இந்தச் செயல்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மணத்தைக் குறிக்க பல்வேறு சொற்கள் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரைவு என அவை நீளும்.

சான்றாக, கல்யாணம் என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் அமைந்துள்ளது. கடி என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். ""கடிமகள் வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து'' என்ற குறிப்பால் காப்பு என்ற பொருளில் கடி என்ற சொல் இடம் பெறுவதையும் காணலாம். சீவக சிந்தாமணியில் ""கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க'' என்றும், ""கடிமணம் எய்தும் களிப்பினால்'' என்றும் வருகிறது.

சங்க இலக்கியங்கள் வாயிலாக தமிழரின் மணமாக மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவிய மணம், மடலேறிய மணம் ஆகிய மண முறைகளைக் காணமுடிகிறது.

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம்பெற்ற மண முறைகளைத்தவிர, பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலகங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர் திருமணத்தை பெண் வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டனர். களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்வதும் மரமாக இருந்துள்ளது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. இதை,



நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்

எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்

சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்

வையற விளங்கிய கழலடிப்

பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே!



என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போடுதலும், பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம்பெறுவது தமிழர் வழக்கமாக இருந்திருக்கிறது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்துள்ளது. இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப இறைவன் முன்னிலையில், திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம்பெறுகிறது.

பழங்காலத் தமிழரின் மண மரபில் இடம்பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் காணப்பட்டாலும் புதியவைகளும் இடம்பெற்றுள்ளன. பழந்தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம், பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல் முதலிய புதியவைகளும் இடம்பெற்றன.

தமிழர்கள் திருமண முறைகள் பலவாக இருந்தாலும், இருமணம் ஒத்தே வாழ்க்கை நடத்திக் குடும்ப முறைகளைப் பாரம்பரியமாகப் பறைசாற்றி வருகின்றனர் தமிழர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக