வி. தெட்சணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 – மே 13, 1975) ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார்.
யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.[1] இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது.
இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் புல்லரித்துப் போனோம்" என்று மெச்சியுள்ளார்.
இந்தியப் பெருங் கலைஞரான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார்.[3] தொடர்ந்து இந்திய நாதசுவர மேதைகளாகிய காருக்குறிச்சி அருணாசலம், சேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை விழாக்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈழத்திலும் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை, என். கே. பத்மநாதன், கே. எம். பஞ்சாபிகேசன், திருநாவுக்கரசு ஆகியோருக்கும் தவில் வாசித்தார். தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக