1) ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் - தன்னலம் கருதா மக்கள் சேவையே மிகவுயர்ந்த யாகம் என சனாதன தர்மம் முன்மொழிகின்றது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது, தேவைபடுபவருக்கு உடனே உதவுவதே மிகவுயர்ந்த பண்பாகும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு நல்லிணக்கத்தோடு வாழ்வதால் மனிதர்களெல்லாம் உய்வுபெறுவர். (3:10)
2) எல்லா செயல்களிலும் மிதமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் - மிக அதிக நேரம் உறங்குவதோ அல்லது மிக குறைவான நேரம் உறங்குவதோ நலமற்ற செயலாகும். அதேபோல மிக அதிகமாக உண்பதும், உண்ணாமலே இருப்பதும் நலமற்ற செயலாகும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி, செயல் அனைத்திலும் மிதமான போக்கு உடையவர்கள் தியானத்தில் ஈடுபட்டால் அவர்களின் எல்லா துன்பங்களும் மறையும். (6:16)
3) எல்லா உயிர்களும் சமம் என்பதை உணர வேண்டும் - ஈஸ்வரனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் தான். உயிரினங்களின் ஆன்மா இறைவனின் சொரூபமானது. எனவே அடிப்படையில் எல்லா உயிர்களும் தெய்வீகமானவை. (9:29)
4) எல்லாருக்கும் இறைவனே தந்தை, இயற்கையே அன்னை, உலகமே ஒரு குடும்பம் - எல்லா உயிர்களும் ஈசனின் சக்தியில் இருந்து வந்தவை. உயிர்களின் உடல் இயற்கையால் அளிக்கப்பட்டது. எனவே இந்த உலகமே ஒரு குடும்பம், நமக்கெல்லாம் ஈஸ்வரனே தந்தை இயற்கையே தாய். (14:4)
5) உன்னுடைய செயல்கள் தான் உனக்கு சொந்தமானது - இந்த உலகில் நமக்கு சொந்தமானது என்று உண்மையில் எதுவுமே இல்லை. நம்முடைய வாழ்நாளில் நாம் செய்யும் (நல்ல மற்றும் தீய) செயல்கள் தான் நம்முடைய உண்மையான சொத்து. அவை கர்மங்களாகி, பல பிறவிகளிலும் நம்முடன் வருகின்றது. (2:47)
6) மனதை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் - மனம் எப்போதும் சஞ்சலமாய் அங்குமிங்கும் உழலும் இயல்புடையது. அதை கட்டுப்படுத்தி உறுதியோடு செயல்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும். மனதை கட்டுப்படுத்த தெரிந்தவனுக்கு மனம் தான் சிறந்த நண்பன், மனதை கட்டுப்படுத்த தெரியாதவனுக்கு மனம் தான் கொடிய பகைவன். (6:6)
7) ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் - ஆன்மிக அறிவு ஒருவனுக்கு தெளிவான சிந்தனையையும் நிலையான மெய்ப்பொருளையும் உணர்வதற்கான வழியைக் காட்டுகின்றது. தர்மத்தைப் பற்றி முழுமையான அறிவுடைய ஒருவன் சரியெது பிழையெது என பகுத்தறியும் பண்பாடுமிக்கவன் ஆகின்றான். ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதால் ஒருவனின் கர்மவினைகள் தீயிலிட்ட விறகுகளைப் போல சாம்பலாகிவிடுகின்றன. (4:37)
8) ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடை போடக் கூடாது - தோற்றத்தை வைத்து ஒருவரை அத்தகையர், இத்தகையர் என கருத்து கணிப்பது மனிதர்களின் இயல்பான குணம். ஆனால் இது இயற்கையின் மாயையால் ஏற்படும் 'பொய்யான' கணிப்பு. எனவே ஒருவரின் உண்மையான இயல்பை அறிவதற்கு அவருடன் பழகி, அவரின் குணங்களையும் செயல்களையும் நன்கு ஆராய்வதே சிறப்பாகும். (13:31)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக