சொல்லிலக்கணம் - 5
***********************
ஐந்தாம் வேற்றுமை – உருபுகள் – இல், இன்
********************
“ஐந்தா வதன் உருபு இல்லும் இன்னும்
நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருளே” (299)
இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கு பொருள்களை உணர்த்துகின்றன.
மலையின்வீழ் அருவி. (நீங்கல் - நீங்குதல்)
பாலின் வெளிது கொக்கு (ஒப்பு)
மதுரையின் வடக்கே தில்லி (எல்லை)
கல்வியில் பெரியர் கம்பர் . (ஏது - காரணம்)
ஆறாம் வேற்றுமை – உருபுகள் – அது, ஆது, அ
********************
எனது கை.
எனாது கை.
என கைகள்
இத்தொடர்களில் உள்ள ‘யான்’ என்னும் பெயர்ச்சொல் என் எனத் திரிந்து நின்று அது, ஆது, அ என்னும் உருபுகளை ஏற்று, உரிமைப் (கிழமை) பொருள் உடையதாய் வேறுபட்டது.
என்னுடைய கை.
நண்பனுடைய புத்தகம்.
இத்தொடர்களிலுள்ள ‘உடைய’ என்னும் உருபு ஆறாம் வேற்றமைச் சொல்லுருபாகும்.
இது ஆறாம் வேற்றுமைப் பொருளில் (உரிமை) வரும்.
அது என்பது அஃறிணை ஒருமைப் பெயர்களின் கிழமையைக் குறிக்கவே பயன்படவேண்டும் என்பது இலக்கண வல்லார் கொள்கை.
இக்காலத்தில் அது அஃறிணைப் பன்மையிலும் உயர்திணை ஒருமையிலும் நடைமுறையில் வழங்கப்படுகிறது.
எனது கைகள்
எனது மகன்
எனப் பன்மையும் உயர்திணை ஒருமையும் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.
மேலும் உடைய நிற்க வேண்டிய இடத்தில் இன் சாரியை நின்று இடப்பொருளை உணர்த்துகிறது.
கண்ணனுடைய வீடு – கண்ணனின் வீடு
‘ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாத்; பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் கூட்டம்
திரிபின் ஆக்கமாம் தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே’ (300)
ஆறாம் வேற்றமைக்குப் பொருள் ‘கிழமைப் பொருள்’.
கிழமை என்பது உரிமை, உறவு, தொடர்பு எனப் பொருள்படும்.
இது தற்கிழமை, பிறிதின் கிழமை என இரண்டு வகையாகக் கூறப்படும்.
வேலனது விரல்.
(தற்கிழமை – பிரிக்க முடியாதது)
வேலனது வேல்.
(பிறிதின் கிழமை – தனித்தனியாகப் பிரிக்கக் கூடியது)
எழாம் வேற்றுமை – உருபுகள் – இல், கண், இடம்
*******************
“ஏழன் உருபுகண் ஆதி யாகும்
பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன் இதன் பொருள் என்ப’ (302)
ஏழாம் வேற்றுமை உருபுகள் கண் முதலாகிய பலவாம்.
இதன் பொருளாவது, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்களும்
தற்கிழமை, பிறிதின் கிழமை என்னும் இரண்டிற்கும் இடமாக நிற்கலாம்.
எனவே ஏழாம் வேற்றுமையின் பொருள் இடப்பொருள்,
தமிழில் இனிமை உண்டு.
பள்ளியின் கண் கல்வி பயில்.
பிறரிடம் பகை கொள்ளாதே.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
மேசை மேல் புத்தகத்தை வை.
ஆகிய தொடர்களில் உள்ள
தமிழ், பள்ளி, பிறர், பெட்டி, மேசை
என்னும் பெயர்ச் சொற்களுடன்
இல், கண், இடம், உள், மேல் எனும் உருபுகள் வந்து
பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன.
இவ்வேறுபாடு ஏழாம் வேற்றுமையாகும்.
இல், கண், இடம், உள், மேல் என்பவை ஏழாம் வேற்றுமை உருபுகளாகும்.
இவ்வேற்றுமை இடப் பொருளை உணர்த்தும்.
இடப்பொருளை உணர்த்தும் உருபுகள் பத்தொன்பது எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
நன்னூலாரோ அவர் காலத்து வழங்கிய சொற்களையும் கருத்திற்கொண்டு 28 ஆக வகுத்தார்.
அவற்றுள் பல இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டன.
இல், கண், இடம் ஆகியவையே இக்கால வழக்கில் உள்ளன. இடம் என்பது உயர்திணையைச் சார்ந்து இடப்பொருள் உணர்த்தும்.
பால், மாட்டு என்னும் சொல்லுருபுகள் பழங்காலத்துப் பெருவழக்காக இருந்தன.
“எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு” (குறள் 991)
எட்டாம் வேற்றுமை – உருபு – விழிப்பொருளில் வரும்.
********************
“எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம், பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தான் அழைப்பதுவே (303)
வேலா, வா!
இத்தொடரில் வேலன் என்னும் பெயர்ச்சொல் விளித்தலின் போது வேலா என ஈற்றெழுத்துக் கெட்டு நீண்டு வந்துள்ளது. இதற்குத் தனி உருபு இல்லை.
எட்டாம் வேற்றுமை விளித்தல் பொருளைத் தருவதால் இதனை விளி வேற்றுமை என்றும் வழங்குவர்.
இவ்விளியானது அண்மை விளி என்றும், சேய்மை விளி என்றும் இருவகைப்படும்.
அண்மை விளி அருகில் இருப்போரை அழைப்பது.
சேய்மை விளி என்பது தொலைவில் உள்ளவரை அழைப்பது.
தம்பி, அப்ப, ஐய – அண்மை விளி
தம்பீ, அப்பா, ஐயாவே – சேய்மை விளி
அண்மை விளியில் இயல்பும் ஈறு கெடுதலும்,
சேய்மை விளியில் ஈறு திரிதல், ஈறு கெட்டு அயல் நீளுதல் முதலியவையும் வருவதைக் காணலாம்.
படர்க்கைப் பொருள்களை முன்னிலைப் பொருள்களாக்கி அழைக்க இவ்வேற்றுமை உதவுகிறது.
வேலன்- வேல – ஈறுகெட்டது
வேலா – ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டது
தந்தை – தந்தையோ! – ஈற்றில் ஏகாரம் மிக்கது
தந்தை – தந்தாய் – ஈற்றில் ஐகாரம் ஆய் எனத் திரிந்தது
மக்கள் – மக்காள் – ஈற்றயல் நீண்டது
உருபு மயக்கம்
***************
ஒரு வேற்றுமை உருபு மற்றோரு வேற்றுமைப் பொருளை உணர்த்தினால் அது உருபு மயக்கம் எனப்படும்.
உ+ம்:
அவ்வித் தழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
இக்குறட்பாவில் தவ்வையை என்று ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளது.
தவ்வைக்கு என்று நான்காம் வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வந்து, நான்காம் வேற்றுமைப் பொருளைத் தருகிறது.
இவ்வாறு வருவது உருபு மயக்கமாகும்.
சாரியை
********
சார்ந்து வருவது சாரியை எனப்படும்.
சில பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது இவற்றின் இடையே சாரியை வந்து வேற்றுமைச் சொல்லாக்கத்திற்குத் துணை புரிகின்றன.
இன்றைய தமிழில் அத்து, அற்று, இன், அன், அம் ஆகிய நான்கு சாரியைகள் காணப்படுகின்றன.
எவ்வகைப்பட்ட பெயருக்கும் ஏற்குமிடமறிந்து இறுதியில் ஒட்டிநின்று, அப்பெயரின் பொருளை வேறுபடுத்துவன வேற்றுமை எனப்படும்.
முடிவுரை
**********
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையினானே”
பவணந்தி முனிவரின் இலக்கண விதிப்படி
நாமும் காலத்துக்கு எற்ற மாற்றத்தை ஏற்றுக் கொள்வது பொருத்தமானதாகும்.
**************************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
முடிவுரை:பழையவை கழிக்கப்பட்டதால் இன்று மொழிபெயர்ப்பாளர் சொல்வதை நாம் நம்பவேண்டிய சூழலில் உள்ளோம்,அதுவும் தமிழுக்கே மொழிபெயர்ப்பு தேவைபொருள் விளக்கம் தேவை இன்றைய தமிழருக்கு,இது முன்னேற்றமா??புதியவற்றை வெறுக்கவில்லை ,பழையவற்றை நாமாக படிக்க முடியவில்லை என்ற வருத்தம்தான்!!புதிய எழுத்துருக்களால் ஏற்பட்ட கொடுமைதானே இது!!ஒரு வரலாறே அழிந்துவிட்ட்டதே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக