புறநானூறு, 48.("கண்டனம்" என நினை!)
பாடியவர் : பொய்கையார்.
பாடப்பட்டோன் : சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை : பாடாண்.
துறை: புலவர் ஆற்றுப்படை.
==========================
கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.
அருஞ்சொற்பொருள்:-
கோதை = சேரன், பூமாலை
மா = கரிய
கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை)
கள் = மலர்த்தேன்
கானல் = கடற்கரைச் சோலை
படர்தல் = செல்லுதல்
முதுவாய் = முதிய வாய்மையுடைய
அமர் = போர்
மேம்படுதல் = உயர்தல்
மேம்படுநனை = மேம்படுத்துபவனை
இதன் பொருள்:-
கோதை=====> இறைவன்
சேரமான் மார்பில் விளங்கும் மாலையாலும், அந்த சேரமானை மணந்த மகளிர் சூடிய மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன்
அன்னோர்=====> கண்டனம் எனவே
முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடைய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.
பாடலின் பின்னணி:-
சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறப்புக் குறிப்பு:-
தலைவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக