தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2015

புறநானூறும்! – வாகனப் பாதுகாப்பும்!


தமிழ்ச் சமுதாயத்திலே பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் அகத்தோடு பேணிக் கொள்ளும் செயல்களை அக ஒழுக்கம் என்றும் புறத்தே பலருக்கும் சொல்லி இன்புறக் கூடிய செயல்களைப் புற ஒழுக்கம் என்றும் சங்க இலக்கியங்கள் சொல்லும்!
குறிப்பாக காதலைக் கதவாகக் கொண்டும் அன்பை அதன் திறவுகோலாகப் பயன்படுத்தியும் நுழையும் காம வாழ்வியல் அகத்தின் வசப்பட மாறாக வீரம் கொடை அறிவியல் வரலாற்றுச் செய்திகள் எல்லாம் புறத்திலே அடக்கப்பட்டன!
அத்தகைய புறச் செய்திகளை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு சங்க நூல் புறநானூறு! இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் புற நானூற்றிலே காணப்படும் பல செய்திகள் இன்றைய விஞ்ஞான உலகை விப்பில் ஆழ்த்தி வருகின்றன!

கோடிக் கணக்கான பணத்தையும் கம்பியூட்டர் தொழில் நுட்ப வசதியையும் பகையைப் புறந்தள்ளிய அறிவு வேட்கையால் உலக விஞ்ஞானிகளின் கருத்துப் பரிமாறல்களும் என்று பல வசதிகளின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்ட இன்றைய எத்தனையோ விஞ்ஞான முடிவுகள் பற்றிய தகவல்கள் அன்றைய சங்க இலக்கியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன!
அந்த உண்மைகளை வெளிட்ட சங்க இலக்கிய வாதிகள் தாடியும் சடா முடியும் தரித்து மர நிழல்களிலும் குகைளிலும் வாழ்ந்த கர்ம யோகிகள்! ஆண்களும் பெண்களும் என்ற பேதமின்றி கல்வி அறிவு நிரம்பியவர்கள்! எங்கே படித்தார்கள் என்று எம்மால் கூற முடியாத அளவுக்கு இன்றைய விஞ்ஞான நெறிக்கு சவால் விடும் அவர்களின் செய்யுள் ஒன்றைப் பாருங்கள்!
விலங்குகள் இழுத்த வண்டிகள் தான் இன்று விஞ்ஞான முயற்சியால் கார்களாக உருவெடுத்து இருக்கின்றன. 1769ல் தொடங்கிய முயற்சி 1806ல் மோட்டார் காராக வந்ததை அனைவரும் அறிவோம்! ஆனால் 1904ம் ஆண்டு வரை எந்த வாகனத்துக்கும் மாற்றுச் சக்கரம் இருந்தது கிடையாது!
அது மட்டுமல்ல! அப்படி ஒரு சிந்தனையே மோட்டார் கார் கம்பனிகளிடம் அன்று துளிர் விட்டதுக்கு எந்த ஆதாரமும் இல்லை!
ஆனால் புறநானூற்றிலே உமணர் என்னும் உப்பு வணிகர்கள் எருதுகள் இழுக்கும் வண்டியியிலே பெருமளவு உப்பை ஏற்றித் தாம் வியாபாரத்துக்குக் கொண்டு செல்லும் போது தெருவிலே உள்ள மேடு பள்ளங்களில் வண்டிச் சக்கரம் விழுந்து அச்சு உடையக் கூடும் என்ற பயத்தினால் மேலதிகமாக வண்டியில் இன்னுமொரு அச்சை இணைத்து வைத்திருந்தார்கள்! அது சேமஅச்சு எனப்பட்டது என்ற செய்தி சொல்லப்படுகின்றது!
இதிலே வியப்பு என்னவென்றால் வண்டியின் அச்சு முறிந்தால் தான் மற்ற அச்சிலே வண்டியின் பாரம் இறங்கும்! அதுவரை அந்த அச்சு சுயாதீனமாக எந்தப் பாரத்தையும் தாங்காது வண்டியோடு பிரயாணம் செய்யும்! அப்படி என்றால் அந்த அச்சின் இரு புறமும் சக்கரங்களும் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்போது தானே திடீரென்று அச்சு உடைந்து பாரம் மற்ற அச்சில் இறங்கும் போது வண்டி நிலத்தில் விழுந்து விடாமல் இருக்கும்!
இன்று வளர்ந்து விட்ட விஞ்ஞான தொழில் நுட்பம் 52 - 53 அடி பார வண்டிகளுக்கு எல்லாம் பல சக்கரங்களை இணைத்து விடுகின்றது! பாரம் ஏற்றும் போது அந்தச் சக்கரங்கள் தெருவைத் தொடுவதையும் வெறுமையான வண்டிகளில் தெருவைத் தொடாமல் இருப்பதையும் இன்று காண்கின்றோம்!
இந்தப் பொறிமுறை பற்றித்தான் புறநானூறு குறிப்பிடுகின்றது தனது 102 பாடலில்! இன்று நேற்றல்ல ! 2000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனை! பாடியவர் வேறு யாருமல்ல! எங்கள் ஒளவைப் பாட்டிதான்! கிழவியைத் தவிர வேறு யாராலே இதையெல்லாம் சொல்ல முடியும்? அடுத்த சந்ததிக்கு!

எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவலிழியினு மிசையேறினும்
அவண தறியுநர் யாரென வுமணர்
கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே.

தம் கழுத்திலே பாரம் மிக்க உப்பு வண்டியின் நுகம் இருக்கின்றது என்ற எண்ணமே இல்லாத இளையதான எருதுகள் பூட்டப்பட்ட தம் வண்டிகள் மேட்டிலும் பள்ளத்திலும் விழுந்து அச்சு முறியும் நிலை ஏற்படுமோ இல்லையோ யார் அறிவார் என்று நினைத்து உப்புவாணிகர் வண்டியின் அச்சு மரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட சேம அச்சுப் போன்ற புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தவனே! நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை ஒப்பாய் ஆதலின், நின் நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது ?

இரா.சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக