வேலும் மயிலும் துணை
'சும்மா இருத்தல்'
என்னும் தமிழ்ச் சொற்றொடர் எதைக் குறிக்கின்றது?
ஓர் அறிமுக ஆய்வு
சிங்காரவேலு சச்சிதானந்தம், மலாயாப் பல்கலைக்கழகம்
1. குறும்பு செய்யும் குழந்தைகளையோ சிறார்களையோ நோக்கிச் 'சும்மா இரு' என்று சொல்வது
தமிழர்களிடையே காணப்படும் ஒரு பொதுவழக்காகும். வேலையில்லாதவர்களையும், பணி
ஓய்வுபெற்றுள்ள முதியோர்களையும் நோக்கி, "இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
என்று கேட்கும்போது, "சும்மாதான் இருக்கின்றேன்!" என்று அவர்கள் விடையளிப்பதுண்டு.
'சும்மா இருப்பதும்' ஒருவகையில் சுகம்தானே!
2. தமிழரிடையே, 'சும்மா' என்னும் சொல் பல்வேறுபொருளில் வழங்கிவருவதையும் காணலாம்.
எடுத்துக்காட்டாக, "என்ன காரியமாக வந்தீர்கள்?" என்னும் கேள்விக்குச் சிலர் "சும்மாதான்
வந்தேன்!" என்று கூறிய பின்னர் தாம் வந்துள்ள காரியத்தைப் பற்றிக் கூறுவர்!. "வந்த காரியத்தைப்
பற்றிச் சும்மா [ஒளிவிமறைவின்றி, அல்லது தடையின்றிச்] சொல்லுங்கள்" என்றோ, ஒருவர் தாம்
விரும்பும் ஏதாவது ஒரு பொருளைச் "சும்மா [கட்டணம் யாதுமின்றிக்] கொடுங்கள்!" என்று
மற்றொருவரிடம் வற்புறுத்திக் கூறுவதும் உண்டு.
3. இத்தகைய பொருளுடைய 'சும்மா' என்னும் தமிழ்ச் சொல், மலாய் மொழியிலும் 'Cuma',
'percuma', 'bercuma' என்னும் வடிவில் வழங்கிவருவதையும் காணலாம். அம்மலாய் மொழிச்
சொற்கள், 'hanya' ('மட்டும்') 'melainkan ('தவிர'), 'memberikan, atau menerima sesuatu
dengan percuma' ('ஒன்றை இலவசமாகக் கொடுத்தல், அல்லது பெறுதல்') 'sia-sia' ('பயனற்ற')
என்னும் பொருளில் வழங்குவதாகத் தெரிகின்றது.
4. ஆயினும், 'சும்மா இருத்தல்' என்னும் தமிழ்ச் சொற்றொடர், பண்டைக் காலந்தொட்டு
தமிழர்களிடையே ஆன்மிகநெறியைச் சார்ந்த முக்கியமானதொரு மரபுச் சொற்றொடராக விளங்கி
வருவதையும் காணலாம். எடுத்துக்காட்டாக, அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தரலங்காரம்
என்னும் நூலில், 'வெட்சிப் பூக்களாலும்' 'தண்டை' எனப்படும் அணிகலன்களாலும் அலங்கரிக்கப்
பெற்ற திருமுருகப்பெருமானின் செந்தாமாரைமலர் போன்ற திருவடிகளைக் காவலாகக் கொண்டு
அவற்றை மவுனமாகச் சிந்தித்தவாறு 'சும்மா இருத்தல்' சிறந்ததோர் ஆன்மிக நெறியாகச்
சித்திரிக்கப்படுகின்றது:
"வேதஆ கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும்இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப்
போதாய் இனிமன மேதெரி யாதஒரு பூதர்க்குமே."
(கந்தரலங்காரம், திருப்பாடல் 17).
மேலும், 'பஞ்சபூதங்கள்' எனப்படும் மண், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம்' ஆகியவற்றலாகிய
பூதவுடலில் வசிக்காமல் வேறு எவரும் அறிந்திராத 'மௌன பஞ்சரம்' எனப்படும் ஒப்பற்ற
தனிவீட்டில் சொல்லும் நினைவுமின்றி 'சும்மா இருப்பாயாக!' என்று திருமுருகப்பெருமான்
உபதேசித்தருளினார் என்னும் அரிய செய்தியை அருணகிரிநாதர் சுவாமிகள் நம்முடன்
பகிர்ந்துகொள்கின்றார்:
" 'ஒரு பூதரும் அறியாத தனிவீட்டில் உரை உணர்வு அற்று
இரு, பூதவீட்டில் இராமல்,' என்றான்"
(கந்தரலங்காரம், திருப்பாடல் 45:1-2).
'சும்மா இரு சொல்லற' என்பது இறைவனின் அருள்மொழியன்றோ!.
5. திருமூலர் நாயனார் அருளிய திருமந்திரம் போன்ற சித்தர் நூல்களில், 'சும்மாயிருத்தல்'
என்பது, ஆன்மிக மவுனத்தையும், அடியார்களின் உள்ளத்தின் மவுன மொழியையும் குறிக்கின்றது.
[T.A. Ganapathi, "The mysticism of the Tirumantiram," The Yoga of Siddha Thirumular
(2006): பக்கம் 262].
6. 'மவுனம்', அல்லது 'மோனம்' எனப்படுவது பேச்சும் நினைவுமின்றி சும்மாயிருத்தலாகும்.
அத்தகைய மோனநிலை, வெறுமனே பேசாமல் ஊமையாக இருத்தலனின்று வேறுபட்டதாகும்;
செயலற்ற தன்மையாகிய மவுனம், 'வாய் பேசாதிருத்தல்', 'மனம் சிந்தியாமலிருத்தல்' என்னும்
இருவகைப்படும்; வாய் மட்டும் பேசாதிருத்தல் ஊமையேயாகும்; வாக்கும் மனமும் ஒன்றாக
செயலற்ற தன்மையே பயன் தரும் ஆன்மிக மவுனமாகும். 'திருவருள் உடன்நின்று ஆக்கும்
அத்தூய்மையின் உண்மையினை அறிவார் யார்?' என வினவுகின்றார் திருமூல நாயனார்.
"வாக்கு மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே?"
(திருமூல நாயனார் அருளிய திருமந்திரம், திருப்பாடல் 1859, திரு ப. இராமநாத பிள்ளை
அவர்களின் விளக்கவுரையுடன் கூடிய கழக வெளியீடு, மறுபதிப்பு, 1963).
'சும்மா இருத்தல்' என்னும் மோன நிலையில் முத்திப் பேற்றினையும் அடைதல் கூடும்.
அஃதாவது, ஆங்காரத்தை (ஆணவத்தை) அடக்கி மோன நிலையில் இருத்தல் மூலம் அழியாத
பேரின்ப நிலையைப் பெறலாம் என்பது திருமூல நாயனார் அவர்களின் திருவாக்காகும்:
"நீங்காச் சிவானந்த ஞேயத்தை நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதனிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே."
(திருமந்திரம், திருப்பாடல் 1579, திரு ப. இராமநாத பிள்ளை அவர்களின் விளக்கவுரையுடன்
கூடிய கழக வெளியீடு, மறுபதிப்பு, 1963);
"மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் ..."
(திருமந்திரம், திருப்பாடல் 1585:1-2, திரு ப. இராமநாத பிள்ளை அவர்களின் விளக்கவுரையோடு
கூடிய கழக வெளியீடு, மறுபதிப்பு, 1963).
எனவே, மேற்கூறிய 'சும்மா இரு' என்று குழந்தைகளை நோக்கிக் கூறும் தமிழ் வழக்கானது,
அக்குழந்தைகள் இளமைப் பருவம் முதலே ஆன்மிகக் கட்டொழுங்கினைப் பற்றித்
தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பினைப் பெறுகின்றனர் என்பதை உணர்த்துகின்றதன்றோ!
துணை நூல்கள்:
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம்.
விரிவுரை. உரையாசிரியர்: திருமிகு கிருபானந்தவாரியார் அவர்கள்.
சென்னை: வானதி பதிப்பகம், எட்டாம் பதிப்பு, 1986.
திருமூல நாயனார் அருளிச்செய்த திருமந்திரம் மூவாயிரம்.
திரு. ப. இராமநாத பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரை.
சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
மறுபதிப்பு, 1963.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக