தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 டிசம்பர், 2013

மித்ரா ,நத்தார், கிறிஸ்மஸ் தினம்!!


உலகம் தோன்றியகாலத்தில் இருந்து முதன்மையான மதங்களை கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு வணங்கிய வணக்க முறை உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய வணக்கம் .இது இன்றும் அனைத்து மதத்தவராலும் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு வணக்கமுறையாகும். மதவாதிகள் இனங்களை பிரித்து தங்கள் சுய புராணங்களை புகுத்தி மனித மனங்களை சஞ்சலபடுத்தி மாற்றங்களுக்கு உள்ளாக்கி பிரிவினைகளை தோற்றுவித்து ,அவற்றை ஊக்கிவிப்பவர்களுக்கு புகழ்மாலை சூட்டி வரலாறுகளை மாற்றி எழுதிக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் .பல உண்மைகள் ஊமையாக உறங்கிக்கொண்டு இருக்கின்றது .அந்தவகையில் உலகில் பல தத்துவமேதைகளுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரிந்தும் ஊமையாக பல நூற்றாண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உண்மைதான் இந்த மித்ரா தினம் ,,,,,,

மார்கழி மாதத்தில் சூரிய ஒளியை உலக மக்கள் பெற்றுகொள்வது மிகவும் குறைவாகவே இருக்கும் ,ஆசிய நாடுகளில் பருவகால மழைகாலம் என்பதால் சூரிய ஒளி உலகிற்கு கிடைப்பது அரிதாக இருக்கும் ஏனைய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கடும் குளிர்காலம் அங்கும் சூரிய ஒளி மக்களுக்கு கிடைக்காமலே இருக்கும் .பல நாட்கள் ஒளி கிடைக்காமல் இருந்து ஒளி பிறந்த நாள் மார்கழி 25 என்பதால் அந்த நாளை ஒளி பிறந்தநாளாக கொண்டாடினார்கள் என்று பண்டைய ஈரானியர்களும் அர்மேனியர்களும், ரோமானியர்களும் ஒத்த கருத்தை கொண்டு இருக்கின்றார்கள் .ஸ்கண்டநேவிய நாடுகளில் அறுவடை திருவிழா என்று இந்த நாளை இன்றும் சொல்பவர்களும் இருக்கின்றார்கள் என்ற கருத்தும் இருக்கிறது .ஸ்கண்டநேவிய மக்களே வீடு வீடாக சென்று ஏழைகள் வறியவர்களுக்கு தங்கள் உற்பத்தி பொருள் வழங்கும் நத்தார் பாப்பா முறையை அறிமுகபடுத்தினார்கள் என்றும் வரலாறுகள் இருக்கிறது .மித்ரா என்ற சொல் இருக்குவேதத்திலும் வருகின்றது அதனால் இந்தியாவிலும் ஈழத்திலும் இந்த நாள் பண்டைய காலத்தில் கொண்டாடபட்டு இருக்கலாம் .பிற்காலத்தில் எமது தமிழ் வருடப்பிறப்பை //தை 14 //நாம் அடிப்படைகாக வைத்து அது தைபொங்கல் நாளாக மாறியும் இருக்கலாம் .இது ஆய்வுக்கு உரியவிடயம் .

பண்டைய ஈரானியர்கள் இந்த நாளை யால்டா என்றே அழைத்தார்கள் என்ற குறிப்பு இருக்கிறது .அதாவது யால் என்றால் பார்சி என்ற மொழியில் பிறப்பு என்றும் ,டா என்றால் நாள் என்றும் கூறுகின்றார்கள் .டா என்பதில் இருந்துதான் நாளை குறிக்கும் டே என்ற ஆங்கில சொல்லும் உருவாக்கி இருக்கலாம் .அதைவைத்தே டார்க் என்று சொல்ல படும் இருள் என்ற சொல்லும் தோன்றி இருக்கலாம் பண்டைய காலத்தில் நாள் என்பது பகல் பொழுதை குறிப்பதாகவே இருந்திருகின்றது ,இரவு என்பதே இரவு பொழுதை குறிப்பதாகும் .பிற்காலத்தில் எம்மவர்கள் இரண்டையும் சேர்த்து ஒரு நாள் என்ற வழக்கத்தை கொண்டுவந்து விட்டார்கள் .

5000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையுடைய சூரிய வணக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்த மித்ரா தினத்தை பிற்காலத்து ரோமானியர்கள் அண்ணளவாக கி,மு 600 அளவில் சதுர்நாலியா என்ற மக்கள் நலன்களுக்காக சேவை செய்த மனித பிறப்போடு தொடர்புபடுத்தி புனைகதைகள் எழுதினார்கள் .அந்த மாமனிதன் சதிர்நாலியா பிறந்த நாள் மார்கழி 25 அண்மித்த நாள் என்றவகையில் கருத்துக்கள் எழுதி இருக்கின்றார்கள் இன்று இந்த சதுர்நாலியாவை நினைவுகூருமுகமாக ரோமில் மார்கழி 25 திகதிக்கு ஒரு கிழமைக்கு முதலே வீடு வீடாக சென்று ஆடல் பாடல்களுடன் மாயங்கள் குழப்பங்கள் செய்து பணம் சேகரிக்கும் வழக்கம் இருக்கிறது .முற்காலத்தில் இவர்கள் இவ்வாறு செல்லும் பொழுது நிர்வாணமாக சென்று பாலியல் பலாத்காரம் செய்து மனித உருவில் செய்யப்பட்ட சொக்லேட் பிஸ்கட் வகைகளை உண்டு சோம பானங்களும் அருந்துவார்கள் என்று லூசியான் என்ற கிரேக்க சரித்திர நூலாசிரியர் தனது குறிப்புக்களில் குறிப்பிட்டு உள்ளார் .இந்த கூற்றை மார்கழி மாத ரோமின் புவியியல் காலநிலை கடும் குளிரில் நிர்வாணமாக சென்று இருப்பார்களா என்றது கேள்விக்கும் ஆய்வுக்கும் உரிய விடயம் .ஆனால் இந்த தினத்தை ரோமானியர்கள் மனித பிறப்போடு தொடர்புபடுத்தி நினைவுபடுத்துவதை மறுக்க முடியாது .பொதுவாக அண்டவெளியில் இருக்கும் சூரியன் சந்திரனுக்கும் .தாய் தந்தை தாத்தா பாட்டன் என பெயர்கள் கொடுத்து இந்தியாவிலும் பல புராணங்கள் எழுதப்பட்டு உள்ளது .அவற்றில் ஒன்றில் காசிபன் மகன் சூரியன் என்றும் அத்திரி மகன் சந்திரன் என்றும் எழுதப்பட்டு உள்ளது .இதுபோலவே ரோமர்களால் மித்ரா என்று அழைக்கப்படும் சூரியனை ,சதுர்மாலிகா பிறப்போடு தொடர்புபடுத்தியும் ,,ஈரானியரான சாரதூசர் என்ற தீர்க்க தரிசி இறைவன் ஒருவன் என்ற மத நம்பிகையை கொண்டு அவன் பெயர் மஸ்டா என்றார் .இந்த மார்கழி 25 அந்த மஸ்டா என்பவரோடும் தொடர்புபடுத்தியும் புனையப்பட்டு இருக்கலாம் .அந்த மஸ் என்பதை கொண்டே இயேசு கிறிஸ்துவை இணைத்து கிறிஸ்மஸ் என்ற சொல்லும் உருவாகி இருக்கலாம் .அதைவைத்து பிற்காலத்தில் இயேசு நாதரின் பிறப்போடும் தொடர்பு படுத்தி வரலாறு எழுதப்பட்டு இருக்கலாம் .

இயேசு நாதரின் பிறப்பு பற்றி ஆராய்ந்து பார்ப்போமானால் பொதுவாக எம்மவர்களில் 19 நூற்றாண்டில் பிறந்தவர்கள் மற்றும் 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்களுக்கே பிறந்த நாள் சரியாக தெரியாது .அவர்களில் சிலர் இன்று முகபுத்தகத்தில் வெகு விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடினாலும் ,அவர்களிடம் நீங்கள் நேரடியாக கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள் நான் பிறந்த நாளை அப்பு வீட்டு வளையில் எழுதிவைத்தார் வீடு மரம் மாற்றிய பொழுது அது காணாமல் போய்விட்டது என்றும் ,தான் பிறந்த நேரம் கடுமையான மழைகாலம் என்றும் ,தைபொங்கலுக்கு கொஞ்சநாள் பிறகு என்றும் பனம்காய் விழுந்த நேரம் என்றும் ,சோழக காத்து அடித்த காலம் என்றும் வாடை காற்று வீசிய காலம் என்றும் ,அப்பு ஆச்சி சொன்னதாக ஞாபகம் என்கின்றார்கள் .வேறு சிலர் சில நபர்களின் பெயரை சொல்லி அவருக்கு 1 கிழமைக்கு முதல் இவருக்கு 2 கிழமைக்கு பிறகு என்று சொல்கின்றார்கள் .அவர்களிடம் கேட்டால் இதுவே தொடர்கதை .உண்மை அப்படி இருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னம் பிறந்த இயேசு நாதருக்கு பிறந்த நாளை சரியாகவா குறித்துவைத்து இருப்பார்கள் .குளிர்காலத்தில் பிறந்தார் என்பதை வைத்து அண்ணளவாக கணித்து இருப்பார்கள்.அதுவும் அவர் பிறந்த இன்றைய இஸ்ரவேலில் ஜெரிசெலம் நகரில் மாட்டு தொழுவத்தில் அந்த கடும் குளிர் வேளையில் பிறந்து இருப்பாரா என்ற சந்தேகத்தையும் உருவாக்கின்றது .இதை இல்லை என்று மறுக்கவோ ஆம் என்று உறுதிபடுத்தவோ யாராலும் முடியாது .இருந்தாலும் ஒரு புனிதமான மனிதன் பிறந்த நாளாக இந்த நாளை கருதுவதில் மதங்களை கடந்து மனிதத்தை நேசிப்பவர்கள் மத்தியில் மாற்று கருத்து இருக்காது என்பது உண்மையாக இருந்தாலும் யதார்த்தமான உண்மையை மறைக்கவும் முடியாது .

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இயேசுநாதர் பிறப்பு மார்கழி 25 என்பதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதையே பலர் குறிப்பிட்டு உள்ளார்கள் .அவர் பிறந்த நாள் பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கிறது .

இயேசுக்கிறிஸ்து பிறந்த பொழுது நள்ளிரவு வேளையில் மந்தை மேய்ப்பவர்கள் வயல்வெளியில் தங்கி தமது மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்ததாக பைபிளில் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்புப் பற்றி எழுதிய வைத்தியரான லூக்கா, தனது பதிவின் 2ம் அதிகாரம் 8ம் வசனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இயேசுவின் பிறப்பு நிச்சயமாக கடும் குளிரான மார்கழி மாதத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இயேசு காலத்தில் வாழ்ந்தவர்கள் அவரது சீடர்கள் இந்தநாளையே இயேசு பிறந்த நாளையோ கொண்டாடியதாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை .இயேசு நாதரின் இறப்பும் உயிர்தெளுதலும் நிகழ்ந்த காலத்தில் உலகின் பெரும் பகுதி ரோமானியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது .இயேசு பிறந்த இன்றைய இஸ்ரெயலும் ரோமர்களின் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தது.இயேசு பிறப்புக்கு பின்னர் ஆரம்பத்தில் கி 1,கி,பி 2 அளவில் கிருஸ்தவ மதத்தை ரோமானியர்கள் எதிர்த்தாலும் நாளடையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அந்த மதத்தை அரவணைத்து சென்றதால் அந்த காலத்தில் உலகில் பல பகுதிகளிலும் கிறிஸ்தவ மதம் பரவ தொடக்கி விட்டது .பெரும் தொகை ரோமானியர்களும் கிறிஸ்தவ மதத்தை தளுவிகொண்டார்கள்.

ரோமானியர்கள் கிறிஸ்தவர்களாய் மாறிவிட்டாலும் அவர்களின் பாரம்பரிய மித்ரா ஒளி விழாவையும் சதுர்மாலிகா நினைவு ஊர்வலங்களையும் அவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள் .கிறிஸ்தவ மதவாதிகளுக்கு இது பெரும் குழப்பத்தை விளைவித்தது .இந்த விழாவை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது .நிறுத்த முயன்றால் அதனால் வரும் விளைவுகள் கிறிஸ்தவ மதத்தை மிகவும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தபடியால் அதுவே இயேசுவின் பிறந்த நாளாகவும் கொண்டாடபட்டது .

ஆரம்ப காலத்தில் ரோமானியர்களுக்கு பெரும் குழப்பத்தை தோற்றுவித்தாலும் நாளடைவில் அந்த தினத்தை கொண்டாட தொடங்கினார்கள் .ஆனால் ஏனைய நாடுகளில் இயேசுவில் பிறப்பை வேறு வேறு தினங்களில் கொண்டாடினார்கள் .இஸ்ரெயலில் ஒரு தினமும் ,கிரேக்கத்தில் ஒரு தினமும், தற்போதைய துருக்கியில் வேறொரு தினமும், கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்திருந்த ஏனைய தேசங்களில் வேறு வேறு தினங்களிலும் கிறிஸ்துவின் பிறப்பு நினைவுகூறப்பட்டு வந்தது மே 20ம் திகதி, ஏப்ரல் 18 ம் திகதி;, ஏப்ரல் 19 ம் திகதி, மே 28 ம் திகதி, ஜனவறி2 ம் திகதி, நவம்பர்27 ம் திகதி, நவம்பர் 20 ம் திகதி,மார்ச் 21 ம் திகதி, மார்ச் 24 ம் திகதி.. இந்த நாட்களிலெல்லாம் இயேசுவின் பிறந்த தினம் நினைவுகூரப்பட்டு வந்ததாக சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன.இவ்வாறு சில நூற்றாண்டுகள் குழப்பமான நிலையில் இயேசு பிறந்த நாள் கொண்டாடபட்டுவந்ததால் அதற்கு முடிவுகட்ட நினைத்த வத்திகான் திருச்சபையின் பாப்பாண்டவர் முதலாவது ஜூலியஸ் ஆண்டகை கி.பி. 350 ஆண்டு இயேசுவின் பிறந்த தினமாக மார்கழி 25ம் திகதியே உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார் .உலக கிறிஸ்தவ மக்கள் பெருதும் மதிக்கும் வத்திகான் பாப்பரசர் கூற்றை தேவவாக்காக கொண்டு அன்றில் இருந்து மார்கழி 25 இல் இயேசு பிறந்த நாளாக கொண்டாடுகின்றார்கள் ,,,,,,,பொதுவாக விழாக்கள் நிகழ்வுகள் என்பன காலத்துக்கு காலம் வரும் அரசியல் மாற்றங்கள் மதரீதியான மாற்றங்கள் என்பனவற்றால் உருவாக்கபடுபவைதான் அந்த வகையில் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுகொள்ள பட்ட ஒரே ஒருவழிபாடாக இருந்த சூரிய வணக்கமும் //மித்ரா வணக்கம் //இன்று நத்தார் கிறிஸ்மஸ் பண்டிகையாக மாறிவிட்டது ,,,,,,,,மாற்றங்கள் உயிர்களையும் மனித மனங்களையும் துன்பபடுத்தாத வகையில் மக்கள் வாழ்வியலை சிறப்பாக்கும் வகையில் அமைந்தால் ஏற்புடையதே ,,,,,,நன்றியுடன் ,,,சிவமேனகை ,,,,,,,,
அன்பு உறவுகள் அனைவருக்கும் மித்ரா ,நத்தார், கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக