தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

யாழ் தீவுகளும் சரித்திர பின்னணியும் ,,,,,,,ஒரு சிறப்பு பார்வை ,,,,பகுதி ,,,04,,, பரு(ரி)த்தியடைப்பு!


ரு(ரி)த்தியடைப்பு என்று இன்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வேலணை தீவின் ஒரு சிறிய கிராமம் ஆகும் .இந்த பிரதேசம் ஒரு காலத்தில் தேவன்கணை என்று அழைக்கப்பட்டு இருக்கலாம்.இதன் அயல்கிராமங்கள் ,வீரநாராயணன் படைத்தளபதிகளான நாராயணன் வேலன் ,சரவணன் ஆகியோரின் தானை நின்ற இடம் என்று கூறப்பட்டு படைத்தளபதிகளின் பெயரை முதன்மையாக கொண்டு ,நாரந்தனை ,வேலணை ,சரவணை ,என அழைக்கபடுவதால் இங்கும் தேவன் எனும் தளபதியின் படை நின்று இருக்கலாம் அதனால் இந்த இடமும் தேவன் கணை என்று அழைக்கபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .அதற்கு ஒரு ஆதாரமாக இன்று உள்ள தேவன் கணை பிள்ளையார் கோவிலை கூறலாம் .

பருத்தியடைப்பு என்ற பெயர் போர்த்துகேயர்காலதுக்கு பின்னர் வந்ததாகவே கருதப்படுகின்றது .இந்த பெயர் எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போமானால் .போர்த்துகேயர் தெற்காசிய நாடுகளை ஆக்கிரமித்த பொழுது பருத்தி ஒரு முக்கிய பணப்பயிர் என்ற உண்மையை உணர்ந்தார்கள் .அனேகமாக தமது ஐரோப்பிய நாடுகளில் செம்மறி ஆட்டு கம்பளி உடைகளை பயன்படுத்திய அவர்கள் .பருத்தி மூலம் செய்யப்படும் ஆடைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள் .அதனால் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் .நெசவு தொழில்சாலைகளை அமைத்து பருத்தி செடியை பயிருட்டு அந்த பணபயிர் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முயற்சித்தார்கள் .அந்த வகையில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் ஊர்காவற்துறையில் ஒரு நெசவு தொழில்சாலையை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள் .அந்த நெசவு நிலையத் தேவைக்கான பருத்தி பஞ்சு மூலம் பெறப்பட்ட நூலினை பெற்றுகொள்வதற்காக தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து பரித்தி செடியை கொண்டு வந்து காவலூருக்கு அண்மையில் இருந்த இந்த கிராமத்தில் பயிரிட்டார்கள் .அந்த காலத்தில் வேலணை தீவின் சகல கிராம மக்களும் கால் நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருந்ததால் பருத்தி செடியை கால் நடைகள் தாக்கி உணவாக உண்டு சேதம் விளைவிக்கும் என்பதால் இந்த பெரும் பிரதேச பகுதியை வேலி அடைத்து பாதுகாத்து பருத்தி பயிர் இட்டதால் இந்த இடம் பிற்காலத்தில் பரித்தியடைப்பு என்று பெயர்பெற்றது .இங்கு பருத்தியை பயிரிட்டு அதன் பஞ்சில் இருந்து நூலினை தயாரித்து ,பல்வேறு வகையான ஆடைகளை இங்குள்ள தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டி தயாரித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் செல்வம் ஈட்டினார்கள் .அத்துடன் ஆழ்கடல் மீன்பிடிக்கான வலைகளையும் வடிவமைத்து .கடல் வளங்களையும் சுரண்டி செல்வம் ஈட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள் .

இன்று நாம் பருத்தியடைப்பு என்று அழைக்கப்படும் இந்த கிராம மக்கள் ஆதி காலத்தில் கடல்வழி வாணிபத்தில் சிறந்து விளங்கிய வணிகர்களாகவும் சிறந்த கடல் படகு ஓட்டிகளாகவும் இருந்து இருக்கின்றார்கள் .காவலூர் துறைமுகம் அண்மையில் இருந்ததால் துறைமுகம் சார்ந்த பணிகளிலும் அநேகமானோர் பணியாற்றி இருக்கின்றார்கள் .அன்னியர் வருகைக்கு பின்னர் மிக பெரும் பண பயிர் ஆக அக்காலத்தில் கருதப்பட்ட பருத்தி பயிரிடப்பட்ட ஒரு விவசாய கிராமமாக இருந்து பிற்காலத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள் தொழிலில் நிமித்தம் பரந்துவாழும் நிலமாக மாறியது .இங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் புகையிலை மிளகாய் ,பயிரிடுவதில் முன்னோடியாக விளங்கினார்கள் .

கடல் வழி வாணிபத்தின் மூலம் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த மக்கள் இங்கு இருந்ததால் தங்கள் பிள்ளைகளுக்கு தென்னிந்தியாவுக்கும் அனுப்பி கலைகளை கற்று கொடுத்த ஈழத்தவர்களில் பரித்தியடைப்பு மக்களும் முதன்மை வகித்தார்கள் .கால ஓட்டத்தில் காவலூர் துறைமுகத்தின் கடல் வாணிப செயல்பாடுகள் குறைவடைய ,தமது பாரம்பரிய தொழிலான விவசாயத்தோடு ,ஏனைய சிறு தொழில்களோடும் ,அரச பணிகளில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை நடை முறை வாழ்கையில் ஏற்பட கல்வியிலும் இந்த மக்கள் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக ஆரம்ப கல்வியை உள்ளூர் முனியப்பர் முன் பள்ளி ,மற்றும் கதிரேசானந்தா வித்தியாலயத்திலும் ,உயர் நிலை கல்வியை ஏனைய அண்மைய கிராம பாடசாலைகளிலும் யாழில் உள்ள பிரபல பாடசாலைகளிலும் சென்று கற்றார்கள் .

இங்கு வாழ்ந்த மக்கள் வழிபடும் குல தெய்வங்களாக பிள்ளையார் ,அம்மன் ,,முனியப்பர் ,ஆகிய தெய்வங்களை வழிபட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கண்ணகை அம்மன் ,ஆலயம் ,ஸ்ரீ கதிரேசன் கோவில் ,முனியப்பர் கோவில் ,தேவன் கணை பிள்ளையார் கோவில் என்பனவற்றை குறிப்பிடலாம் .

யாழ் /50 என்ற இலக்கம் கொண்ட ஒரு கிராம சேவகர் அலகை கொண்டு நிர்வகிக்க பட்டு சாதாரண வசதிகளோடு வாழ்ந்துவந்த இந்த கிராம மக்களும் போர் தந்த வடுக்களால் நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் இடம் பெயர்ந்து வாழவேண்டிய நிலை 1990 களின் ஆரம்பத்தில் இவர்களுக்கும் ஏற்பட்டது .உறவுகளையும் ஊரையும் பிரிந்து இடம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் தமது பாரம்பரிய கலைகள் பண்பாடுகள் என்பனவற்றை மறவாத மக்களாக உலக பரப்பில் வாழ்த்து வரும் இவர்கள் என்றாவது எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு நாளில் ஊர்திரும்பி நல்வாழ்வு வாழவேண்டும் என்ற கனவோடு ,கிராம முன்னேற்றத்துக்கும் உறவுகளுக்கும் இன்றைய நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் பரித்தியடைப்பு மக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றார்கள் .

புளியங்கூடல்

புளியங்கூடல் என்று நாம் இன்று அழைக்கும் இந்த கிராமம் வேலணைத்தீவின் ஒரு கிராமம் ஆகும் .ஆதி காலத்தில் இந்த பிரதேசம் பெரு மரங்கள் நிறைந்த ஒரு சோலையாக இருந்ததாகவும் ,அதில் புளியமரங்கள் அதிகமாகவும் நெருக்கமாகவும் இருந்ததாகவும் அத்தோடு, செருத்தி, குருந்து, கொன்றை,நாவல்,வேம்பு போன்ற மரங்கள் இந்த பிரதேசத்தில் நிறைந்து இருந்ததாகவும் வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன .புளிய மரங்கள் நெருடலாக இருந்ததனால் புளியங்கூடல் என்ற காரணப்பெயரை தனதாக்கி கொண்டு இருக்கலாம் என கருதப்படுகின்றது .

இந்த கிராமத்தில் விவசாயத்தை அடிப்படை தொழிலாக கொண்ட மக்கள் குழுமி வாழ்ந்ததால் அவர்களின் விவசாய தேவைக்கு மாரி கால பெரும் போகத்தில் வான மழை நீர் உதவினாலும் மழை வளம் குன்றிய காலங்களிலும் ஏனைய காலங்களிலும் அவர்கள் நீர் தேவைக்கு கிராஞ்சி, குளுவந்தனை ஆகிய குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீர் பெருதும் உதவியாக இருந்து இருக்கிறது .இங்கு வாழ்ந்த மக்கள் வியாபாரத்திலும் சிறந்தவர்களாக விளங்கி இருக்கின்றார்கள் புளியங்கூடல் சந்தி ஒரு பிரசித்தி பெற்ற இடமாக கருதப்படுகின்றது இது வேலணைத்தீவின் ஏனைய கிராம மக்களும் நாளாந்தம் தங்கள் தேவைகளுக்காக ஒன்றுகூடும் வியாபார தளமாக கருதப்படுகின்றது .

இந்த கிராம மாணவர்களின் கல்வி வளர்சியில் நடராஜா வித்தியாலயம் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது .இந்த பாடசாலையை நடராஜா வாத்தியார் என்பவர் ஆரம்பித்து வழி நடத்திவந்ததால் அந்த பெயருடன் இன்றும் தனது கல்வி சேவையை தொடர்கின்றது .வேலணை தீவின் ஏனைய கிராமங்களில் அன்னியர் வருகைக்கு பின்னர் ஏனைய மதங்களின் தாக்கம் இருந்தாலும் இந்த புளியங்கூடல் கிராமம் அந்த தாக்கத்துக்கு பெரும்பாலும் உள்ளாகவில்லை என்பதை அங்குள்ள ஆலயங்கள் சான்று கூறுகின்றன ,இங்கு வாழ்ந்த மக்கள் அம்மனை குலதெய்வமாக கொண்டவர்களாகவும் ,பிள்ளையார் முருகன் முனியப்பர் வீரபத்திரர் ,ஐயனார் ,ஆகிய தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றார்கள் .புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவில் ஒரு தலச்சிறப்பு மிக்க ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆலய விழாக்களின் போதும் ஏனைய ஆண்டு விழாக்களின் போதும் இந்த ஊர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் ,கூத்துகளாகவும் நாடகங்களாகவும் புராண வரலாறுகளை மக்களுக்கு சொல்வதில் இந்த கிராம முன்னோர்கள் கடந்த காலங்களில் ஆற்றிய பங்கு தமிழ் கூறும் நல்லுலகத்தின் பாராட்டுக்கு உரியது .விளையாட்டு நிகழ்வுகளிலும் தங்கள் வீர சாகசங்களை நிலை நாட்டி காட்டுவதற்கு இவர்கள் என்றுமே பின் நிற்காதவர்கள் .இங்குள்ள புதுவெளி மைதானத்தில் ஆண்டுதோறும் மாட்டு வண்டில் சவாரி, சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், வினோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம் ,போன்ற விளையாட்டுகளை பல காலமாக நடத்தி வந்தார்கள் ,பிற்காலத்தில் ஏனைய நவீன விளையாட்டு போட்டிகளையும் நடத்தினார்கள் .இவ்வாறாக எந்த துறையிலும் பின்னிற்காத வேலணைத்தீவின் இந்த சிறு கிராமம் சாதாரண வசதிக்களுடன் ,ஊர்காவல்துறை தொகுதியில் யாழ் /60 என்ற ஒரு கிராம சேவகர் பிரிவைகொண்டே இயங்கி வருகின்றது .

போர்த்தந்த வேதனையான சம்பவங்களால் இந்த கிராம மக்களும் சோதனைகளுக்கு உள்ளாகி இடம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழ வேண்டிய நிலை 1990 களில் ஏற்பட்டது ,கால ஓட்டத்தில் உலகெங்கும் பரந்து வாழும் இந்த இராம மக்களும் தங்கள் தனித்துவமான கலை கலாசார விழுமியங்களோடு சகல துறைகளிலும் தங்கள் வாழ்வை மேம்படுத்தி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள் .பிரதேசம் தாண்டி தேசம் தாண்டி இந்த மக்கள் வாழ்ந்தாலும் தாய் மண்ணில் தாகம் கொண்ட மக்களாய் தங்கள் ஊருக்கும் உறவுக்களுக்கும் உதவி தங்கள் கிராமத்தை புதுமை அடைய செய்துவருகின்றார்கள் ,வாழ்வியல் நீரோட்டத்தில் மறுபடியும் தங்கள் தாய் நிலத்தில் தங்கள் உறவுகளோடு கூடிவாழவேண்டும் என்ற கனவு ஒவ்வொரு புளியங்கூடல் உறவுகளுக்கும் என்றும் இருந்துகொண்டே இருக்கிறது .

சரவணை

வேலணைத்தீவின் 10 கிராமங்களில் சரவணை என்ற கிராமமும் ஒன்றாகும் .வீர நாராயணன் படை தளபதி சரவணன் தானை நின்று போரிட்ட இடம் சரவணை என்று வந்தகாக கூறப்படுகின்றது .சரவண பொய்கையில் தவழ்ந்ததால் முருகனை சரவணன் என்று அழைத்து வணங்குவார்கள் அந்த முருக மூர்த்தியை இந்த பிரதேச மக்கள் ஒருகாலத்தில் குல தெய்வமாய் கொண்டு வழிபட்டு இருக்கலாம் அதனாலும் சரவணை என்ற பெயர் வைத்து அழைத்து இருக்கலாம் .இன்றும் இங்கு வாழும் மக்கள் முருக வழிபாட்டை சிறப்பாக கொண்டு இருக்கின்றார்கள் .

இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பாரம்பரிய தொழிலாக விவசாயத்தை கொண்டு இருந்தாலும் வியாபாரத்திலும் ஏனைய சிறு தொழில்களிலும் கால் நடை வளர்ப்பிலும் ஈடு பட்டு தங்கள் வாழ்வாதாரத்தையும் செல்வ செழிப்பையும் நிலை நிறுத்தி கொண்டார்கள் .வாழ்வியல் மாற்றத்துக்கு கேற்ப தங்களை மேம்படுத்துவதற்காக கல்வி வளர்சியிலும் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் கல்வியிலும் பல்வேறு சாதனைகள் படைத்து சமுதாயத்தில் இந்த கிராம மக்களுக்கு ஒரு தனித்துவமான நிரந்தர இடத்தை நிலை நிறுத்தினார்கள் .இவர்கள் கல்வி வளர்சிக்கு நாகேஸ்வரி மகா வித்தியாலயம் ,சின்னமடு ரோமன் கத்தோலிக்க பாடசாலை ,போன்றனவும் அண்மைய கிராம பாடசாலைகளும் பெரிதும் உதவியாக இருந்தது .

இங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய கலைகளை கலை விழாக்கள் எடுத்து வளர்த்து வந்ததோடு விளையாட்டு துறைகளிலும் பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள் .ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் வைத்து தங்கள் திறமைகளை வெளிகொண்டுவந்தார்கள் .

இங்கு வாழ்ந்த மக்கள் பெரும் பகுதியினர் இந்துக்களாகவும் ,வாழ்வியல் மாற்றத்தால் கணிசமான அளவு கிறிஸ்தவ மக்களும் இருந்தார்கள் .இந்துக்கள் அம்மன் முருகன் காளி,ஐயனார் வைரவர் பிள்ளையார் போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்து சிறப்பாக வழிபட்டு வந்தார்கள் . கிறிஸ்தவ மக்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் ,அன்னை மரியாள் ,மாதா கோவில்களுக்கும் சென்று தங்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார்கள் .மதங்களால் வேறு பட்டு நின்றாலும் அவர்கள் கலை விழாக்களிலும் கோவில் விழாக்களிலும் ஏனைய பொது நிகழ்வுகளிலும் ஒன்றுபட்டு நின்று ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள் .

வேலணை தீவின் ஒரு சிறு கிராமமாக இருந்தாலும் பல்வேறு சிறப்புக்களுடன் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் யாழ் /20 சரவணை கிழக்கு , யாழ் /21 சரவணை மேற்கு என்ற இரு கிராம சேவகர் பிரிவுகளை கொண்டு சாதாரண வசதிகளுடன் இந்த கிராமம் இயங்கி வருகின்றது .

வாழ்வியல் நகர்வில் மாறாத வடுக்களாக மக்கள் மனங்களில் பதிந்துள்ள ஈழபோரினால் பாதிக்க பட்ட கிராமங்களில் சரவணையும் விதி விலக்கல்ல .1990 ,களில் தொடங்கிய இடம் பெயர்வினால் இங்கு வாழ்ந்த மக்கள் பெரும் தொகையினர் உள்நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் என உலகெங்கும் பரந்து வாழும் நிலை ஏற்பட்டது .தமது அன்னை மண்ணை பிரிந்து இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஆத்மாவின் தாகம் தாங்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியையே எந்த நேரமும் நினைத்துகொண்டு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் ஊர் பற்றும் உறவுகள் மீதான பாசமும் எம்மை சிந்திக்க வைக்கின்றது . .தாங்கள் வாழும் இடங்களில் ஊரவர்கள் கூடி விழாக்கள் கலை நிகழ்வுகள் என ஒன்றுகூடுவதோடு ,தங்கள் கிராமத்தின் எதிர்காலம் கருதி கோவில்கள் பாடசாலைகள் வீதிகள் என பல புனர்நிர்மாண பணிகளுக்கு பெரிதும் உதவி செய்து கொண்டு இருக்கின்றார்கள் .எந்தையும் தாயும் பிறந்த திருநாட்டின் கிராம முற்றத்தில் எல்லோரும் சந்தோசமாய் சிந்தை குளிர சிரித்து விளையாடி எம் முந்தையர் புகழ் பாடும் நாள் மீண்டும் வருமா என்ற ஏக்கத்தோடு காத்து இருக்கும் ஈழ மக்களில் இந்த கிராம மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள் .என்றோ ஒரு நாள் அந்த காலம் கனிந்து வரும் என்ற செய்தியோடு வாழ்வியல் நீரோட்டத்தில் தொடர்ந்து செல்வோம் .

வேலணை தீவின் ஏனைய கிராமங்களினதும் ஏனைய தீவுகளினதும் சரித்திர பின்னணியையும் அவற்றின் சிறப்புக்களையும் வாழ்வியல் மாற்றங்களையும் வரலாற்றின் பாதையில் பயணித்து தொடர்ந்தும் பார்ப்போம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நன்றியுடன் ,,,,,,,,சிவமேனகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக