கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு. ஆனால் நத்தார் என்பது போர்த்துக்கீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல).
நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை.
கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தைத்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள் - இப்படித்தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.
இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் கிறிஸ்மஸ் தினம் என்கின்ற பெயரில் கொண்டாடப்படுகின்ற பண்டிகை கிறிஸ்வர்களுக்கு உரியதொன்றே அல்ல என்பது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்குக் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடிய கூற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் அதுதான் சத்தியம். அதுதான் உண்மை.
அசுரன் என்ற தமிழ் அரசனை ஆரியர்கள் அழித்த நாளாக நினைவுகூறப்படுகின்ற தீபாவளி எப்படித் தமிழர்களுக்கு உரிய ஒரு கொண்டாட்டம் இல்லையோ, அதேபோன்றுதான் கிறிஸ்மஸ் என்கின்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையும் கிறிஸ்தவர்களுக்கு உரிய ஒருபண்டிகை அல்ல.
கிறிஸ்மஸ் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்வர்களுக்கு உரியது அல்ல என்பது மாத்திரமல்ல, அந்தப் பண்டிகையைக் கிறிஸ்வர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்றும் அடித்துக் கூறுகின்றார்கள் சில கிறிஸ்தவ ஆர்வலர்கள்.
இந்த விடயம் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை?
கிறிஸ்மஸ் தினத்தை கிறிஸ்தவர்கள் கொண்டாடக் கூடாதா? இது என்ன புதுக்கதையாக இருக்கின்றது? - இவ்வாறு சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால் உண்மையிலேயே இயேசுக் கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதிதான் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கிடையாது. கிறிஸ்துவின் பிறப்புப் பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும், அவரது போதனைகள் பற்றியும், இயேசு செய்த அற்புதங்கள் பற்றியும், அவரது இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் விரிவாகக் கூறுகின்றன.
கிறிஸ்தவத்தின் எழுச்சி, வளர்ச்சி கோட்பாடுகள் பற்றி அப்போஸ்தலர் நடவடிக்கை மற்றும் நிரூபங்கள் என்று சுமார் 10 புத்தகங்கள் கூறுகின்றன. ஆனாலும் இவற்றில் ஒன்றிலாவது இயேசுக் கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும்படியான எந்தவித ஆதாரமோ அல்லது தகவலோ கூட இல்லை.
இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், பைபிளை அடிப்படையாகவைத்து நோக்கும் பொழுது, இயேசுக் கிறிஸ்து டிசம்பர் மாதத்தில் பிறந்திருப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை என்றே சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இஸ்ரவேலில் டிசம்பர் மதம் என்பது மிகவும் குளிரான காலம். குறிப்பாக இரவு வேளைகளில் காலநிலை சாதாரனமாக 0 முதல் 7 டிகிரி வரையில் இருக்கும். பனி கொட்டுகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளது. அதனால் இஸ்ரேலில் மந்தை மேய்ப்பவர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது.
ஒக்டோபர் மாதத்தின் இறுதிக் காலம் முதல் மார்ச் மாதத்தின் ஆரம்பம் வரையிலான காலப்பகுதிகளில் தமது ஆட்டு மந்தைகளை இஸ்ரேல் தேசத்திற்கு புறம்பாக உள்ள பாலைவனங்களில் கொண்டுசென்று விட்டுவிடுவார்கள். அல்லது மலைக்குகைகள் மற்றும் வேறு கொட்டகைகளில் அடைத்து வைக்கும் வசதி படைத்தவர்கள் அவ்வாறு தமது மந்தைகளை அடைத்து வைத்துப் பேணுவார்கள். இரவு வேளைகளில் நடுநடுங்கும் குளிரில் வெட்டவெளியில் தமது மந்தைகளை மேய்த்துக்கொண்டு சாகடிக்க முயலமாட்டார்கள்.
அப்படி இருக்க, இயேசுக்கிறிஸ்து பிறந்த பொழுது நள்ளிரவு வேளையில் மந்தை மேய்ப்பவர்கள் வயல்வெளியில் தங்கி தமது மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்ததாக பைபிளில் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்புப் பற்றி எழுதிய வைத்தியரான லூக்கா, தனது பதிவின் 2ம் அதிகாரம் 8ம் வசனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இயேசுவின் பிறப்பு நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அத்தோடு, இயேசு பிறந்த காலத்தில் நாடு முழுவதும் குடிசனப் பதிவு இடம்பெற்றதாகவும் அந்த குடிசனப் பதிவு நடைபெறும் நேரத்தில் அனைத்து பிரஜைகளும் தங்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லவேண்டி இருந்ததாகவும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை காலங்களில் அல்லது குளிர் காலங்களில் பொறுவாக இதுபோன்ற குடிசன மதிப்பீடுகளைத் தவிர்க்கும் வழக்கம் இருந்ததால் டிசம்பர் மாதத்தில் இயேசுவின் பிறப்பு இடம்பெற்றிருக்கச் சாத்தியம் கிடையாது என்று பல பைபிள் சரித்திர ஆராய்சியாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.
அத்தோடு இயேசுவேடு இருந்தவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள், இயேசுவின் சீடர்கள், இயேசுவைப் பின்பற்றியவர்கள் என்று எவருமே இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக பைபிளில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
அப்படியானால் டிசம்பர் காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் என்ற விவகாரம் எப்படி ஆரம்பமானது? ஏன் ஆரம்பமானது? யாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான பதில் பலருக்கும்- குறிப்பாகக் கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
சூரியப் புதல்வன்
இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்னரேயே - அதாவது இயேசுக்கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே டிசம்பர் 25ம் திகதி ஒரு மிகப்பெரிய கொண்டாட்டதினமாக இருந்து வந்தது – ரோமர்களுக்கு.
ரோமர்கள், மித்ரா அல்லது சதுமாலியா (Saturnalia) என்ற தமது முக்கிய கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுகின்ற ஒரு தினமாகவே அந்த நாள் இருந்து வந்தது. மித்ரா என்பது சூரியப் புதல்வன். அந்த சூரியப் புதல்வன் வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி பிறப்பார். அந்தத் தினத்தை ரோமர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதி என்பது மிக மிகக் குறுகிய பகலைக் கொண்ட ஒரு தினம் என்பது எம் அனைவருக்கும் தெரியும். அதாவது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதியில் சூரியன் வெகு சீக்கிரமாகவே அஸ்தமித்து விடும். ஐரோப்பாவில் அன்றைய தினத்தில் 4 மணிக்கெல்லாம் இரவு வந்துவிடும். சூரியனை இருள் கொலை செய்து விடுகின்ற தினமாக நினைத்தார்கள் புராதன ரோமர்கள். சூரியனின் புதல்வனான மித்ரா மீண்டும் பிறக்கின்ற தினமாக புராதன ரோமர்களால் அடையாளப்பட்ட தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தில் ரோமர்களிடையே கொண்டாட்டங்கள் மிகப்பலமானதாக இருந்தது.
இயேசு பிறந்த காலப்பகுதியில் தற்போதைய இஸ்ரேல் தேசம் ரோமின் ஆளுகையின் கீழேயே இருந்தது. இயேசுவின் இறப்பு, உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து கிறிஸ்தவம் மும்முரமாகப் பரவிய அனேகமான நாடுகள் ரோமாபுரியின் ஆட்சியின் கீழேயே இருந்து வந்தன. எனவே டிசம்பர் 25ம் திகதி ரோமர்களது மித்ரா பிறப்பின் கொண்டாட்டங்கள் ஒரு கலாச்சாரமாக, சம்பிரதாயமாக ஆதிகாலக் கிறிஸ்தவம் பரவிய அனேமான நாடுகளிலும் இருந்து வந்தது.
டிசம்பர் 25ம் திகதிக் கெண்டாட்டத்தின் உண்மையான வரலாறு இதுதான் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் அதேவேளை உலகில் உள்ள அனைத்து Encyclopedia க்களும் குறிப்பாக The Catholic Encyclopedia கூட இயேசுக்கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதி பிறக்கவில்லை என்பதை வெளிப்படையாக, தெளிவாக உறுதிபடக் கூறுகின்றன.
அப்படியானால் டிசம்பர் 25 இல்தான் இயேசு பிறந்தார் என்ற கதையை யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்?
டிசம்பர் 25
கி.பி. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமாபுரியில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த
அன்னிய தெய்வங்களுக்கு என்று நடாத்தப்படும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் முடியாது - ஏன் என்றால் அது ஒரு விக்கிரக ஆராதனை. அதேவேளை அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்பதை ரோம ஆட்சிக்கு அடையாளம் காண்பித்து விடும். கொலை செய்யப்பட்டு விடுவார்கள்.
எனவே ஒரு காரியம் செய்தார்கள். டிசம்பர் காலக் கொண்டாட்டங்களின் பொழுது மற்றைய ரோமாபுரி மக்களைப் போலவே ஆதிக்கிறிஸ்தவர்கள் தாமும் தமது வீடுகளை அலங்கரித்தார்கள். ஆனால் அவர்கள் கொண்டாடியது அன்னிய தெய்வப் பிறப்பை அல்ல. மாறாக அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்தார்கள்.
இயேசுவின் பிறப்பு டிசம்பரில் நினைவுகூரப்படத் தொடங்கியது இப்படித்தான். கால ஓட்டத்தில் ரோமாபுரி முழுவதுமாக கிறிஸ்தவ தேசமாக மாறி, கிறிஸ்தவ மதம் ரோமின் உத்தியோகபூர்வ மதமாக மாறியதைத் தொடர்ந்து இயேசுவின் பிறப்பு பகிரங்கமாகவே நினைவுகூரப்படத் தொடங்கியது.
அந்தக் காலகட்டங்களில, அதாவது முதலாம் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறப்பு எப்பொழுது என்பது தொடர்பான பலவித தடுமாற்றங்கள் கிறிஸ்தவர்களிடையே காணப்பட்டு வந்தது. கிரேக்கத்தில் ஒரு தினமும், தற்போதைய துருக்கியில் வேறொரு தினமும், ரோமில் வேறு வேறு தினங்களிலும், கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்திருந்த மற்றய தேசங்களில் வேறு வேறு தினங்களிலும் கிறிஸ்துவின் பிறப்பு நினைவுகூறப்பட்டு வந்தது
மே 20ம் திகதி, ஏப்ரல் 18 ம் திகதி;, ஏப்ரல் 19 ம் திகதி, மே 28 ம் திகதி, ஜனவறி2 ம் திகதி, நவம்பர்27 ம் திகதி, நவம்பர் 20 ம் திகதி,மார்ச் 21 ம் திகதி, மார்ச் 24 ம் திகதி.. இந்த நாட்களிலெல்லாம் இயேசுவின் பிறந்த தினம் நினைவுகூரப்பட்டு வந்ததாக சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இயேசு பிறந்து சுமார் 350 வருடங்கள் வரை இயேசு பிறந்த திகதி தொடர்பான பலத்த தடுமாற்றம் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படவே செய்தது. ஆனாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக டிசம்பர் 25ம் திகதி தமது சூரியப் புதல்வனுக்கு விழா எடுத்து வந்த கலாச்சாரத்தில் இருந்து ரோமாபுரி மக்காளால் மீள முடியவில்லை.
எனவே டிசம்பர் 25ம் திகதியை இயேசுவின் பிறப்பாக மாற்றுவதின் மூலம் ரோமாபுரி மக்களை கிறிஸ்தவத்தின் பக்கம் கொண்டுவரலாம் என்று திட்டமிட்ட கத்தோலிக்கத் திருச்சபை ஒரு அறிவித்தலைச் செய்தது.
கி.பி. 350 வருடம் ரோமத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் பாப்பாண்டவர் முதலாவது ஜூலியஸ் ஆண்டகை இயேசுவின் பிறந்த தினமாக டிசம்பர் 25ம் திகதியே உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலை விடுத்தார். அந்த நேரத்தில் (அந்த நேரத்தில் மாத்திரமல்ல இந்த காலகட்டத்திலும் கூட) கடவுளின் ஒரு பிரதிநிதியாகவே போப்பாண்டவர் பார்க்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டளையை யாரும் மீறமுடியாது. டிசம்பர் 25ம் திகதி இயேசுவின் பிறப்பு நினைவுகூறப்பட ஆரம்பித்த வரலாறு இதுதான்.
சில ஆபிரிக்க நாடுகளில் இயேசுவின் சிலைகள் உருவாக்கப்பட்ட போது இயேசு கறுப்பினத்தவராக வடிவமைக்கப்பட்டது போன்று, இந்தியாவிலுள்ள சில தேவாலயங்களில் இயேசுவின் தாயாரான மரியாள் சேலை கட்டியுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
புரட்சி
அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் சாதாரணமாக பைபிளை வாசிப்பதற்கு அனுமதி இல்லை. சாதாரண கிறிஸ்தவர்கள் பைபிளை தம்முடன் வைத்திருக்க முடியாது. தேவாலயங்களில் மாத்திரம்தான் பைபிள்கள் இருக்கும். குருமார் மாத்திரம்தான் பைபிளை வாசிக்க அனுமதி. 1611ம் ஆண்டு லண்டனில் கிங் ஜேம்ஸ் (King James ) மொழியாக்க பைபிள் சாதாரண கிறிஸ்தவர் கரங்களில் கிடைக்கும் வரை கத்தோலிக்கத் திருச்சபை வெளியிடும் கட்டளைகளை மாத்திரமே வேதவாக்காக நினைத்து கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு கிறிஸ்வர்களுக்கு இருந்து வந்தது. எனவே இயேசு டிசம்பர் 25ம் திகதிதான் பிறந்தார் என்று பைபிளில் கூறப்பட்டிருக்கின்றது என்பதான ஒரு தோற்றப்பாட்டை அவர்களால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இலகுவாக ஏற்படுத்த முடிந்தது.
சாதாரண கிறிஸ்வர்களின் கரங்களில் பைபிள்கள் கிடைத்து அதனை அவர்கள் படித்துத் தேறிய பொழுதுதான் சலசலப்புக்கள், எதிர்ப்புக்கள், வாதப்பிரதிவாதங்கள் ஏற்படலாயின. பலர் எதிர்த்தார்கள். சிலர் புரட்சி செய்தார்கள்.
சரி அந்தத் தினத்தில் இயேசு பிறக்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் இயேசு பிறந்ததை அன்றைய தினத்தில் கிறிஸ்வர்கள் அனைவரும் ஒரு மனதாக நினைவுகூரலாம்தானே என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் வாதமாக இருந்தது.
இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து வழிபடுவது வேதத்தின்படி ஒரு விக்கிரக ஆராதனை. அன்னிய தெய்வ வழிபாடு ஒன்றை கடவுளின் வழிபாடாக கடைப்பிடிப்பதும் ஒருவகை விக்கிரக வழிபாடுதான். எனவே கிறிஸ்தவர்கள் அதனை கண்டிப்பாகச் செய்யக்கூடாது என்பது மற்றவர்களது நிலைப்பாடாக இருந்தது.
ஆனாலும் டிசம்பர் 25ம் திகதியே இயேசு பிறந்தார் என்று பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாயையை இலகுவாக யாராலும் உடைத்துவிட முடியவில்லை.
வரலாற்றை ஆராய்கின்ற பொழுது ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவத்தின் தூணாக மாறியிருந்த அமெரிக்கா, டிசம்பர் 25ம் திகதியை இயேசு பிறந்த தினமான ஏற்றுக் கொள்வதில் பலத்த தயக்கம் வெளிப்படுத்தியதைக் காண முடிகின்றது.
1836ம் வருடம்தான் அமெரிக்காவில் டிசம்பர் 25ம் திகதி இயேசு பிறந்த தினமாக அமெரிககாவில் உள்ள அல்பானா என்ற மாநிலம் ஏற்றுக்கொண்டிருந்தது.
1870ம் ஆண்டு ஜூன் 26ம் திகதிதான் டிசம்பர் 25ம் திகதியை முதன் முதலில் ஒரு விடுமுறை தினமாக அறிவித்திருந்தது அமெரிக்கா.
இருந்த போதிலும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் கொண்ட அமெரிக்க மாநிலமான ஒக்லாகோமா மாநிலம் 1907ம் வருடம் வரை டிசம்பர் 25ம் திகதியை ஒரு விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
டிசம்பர் 25ம் திகதிய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் Puritans என்ற அதி தீவிர பெரும்பான்மை கிறிஸ்தவப் பிரிவினரால் 1659 முதல் 1681 வரை தடை செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ் என்பது ஒரு கிறிஸ்தவ விரோத நடவடிக்கை அது ஒரு விக்கிரக ஆராதனை என்று கூறப்பட்டு கிறிஸ்மசை கொண்டாடுபவர்களுக்கு கசை அடி தண்டனை வழங்கியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று கிறிஸ்மஸ் தினம் என்பது ஒரு விக்கிரக வழிபாடு என்று கூறி 1649 முதல் 1660 வரை இங்கிலாந்திலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கால ஓட்டத்தில் உலகம் வியாபாரமயப்படுத்தப்;பட்டதை
கிறிஸ்மஸ் தாத்தா
இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்மஸ் தாத்தா என்பது இயேசு பிறப்பின் நினைவு கூரலில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிவிட்டுள்ளது. கிறிஸ்மஸ் தின நினைவு கூறலில் இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தி இருக்கின்றதோ இல்லையோ சன்டகுளோஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா கண்டிப்பாக இருந்து விடுவார். கிறிஸ்மஸ் தாத்தா பரிசில்களை வழங்குவது ஒரு கிறிஸ்மஸ் சம்பிரதாயமாகவே மாறிவிட்டுள்ளது.
கிறிஸ்தவம் தன்னை அறியாமல் (அல்லது அறிந்துகொண்டே கூட) கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கி விட்டுள்ள பல விக்கிரகங்களுள் இந்த கிறிஸ்மஸ் தாத்தாவும்; ஒன்று என்று சில பல கிறிஸ்தவ ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
இயேசு பிறந்த பொழுது கிழக்கில் இருந்து வந்த வான சாஸ்திரிகள், இயேசுவைத் தொழுது பரிசுகளைக் கொடுத்ததாக பைபிளில் கூறப்பட்டிருந்தாலும், டிசம்பர் தினக் கொண்டாட்டங்களின் பொழுது பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரோம் நகர கலாச்சாரத்தைக் கொண்டுதான் ஆரம்பமானதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
டிசம்பர் காலப்பகுதியில் தமது சூரியப் புதல்வனின் பிறப்பினைக் கொண்டாடிய ரோமர்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் காலகட்டத்தில் பரிசுகள் பரிமாறுவதென்பது இங்கிருந்துதான் ஆரம்பமானதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதேவேளை, ஸ்கன்டினேவிய நாடுகளில் இருந்து வந்த ஓடன் தெய்வ வழிபாட்டு மறையும், கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவாக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். குதிரையில் வானத்தில் பறக்கும் வழக்கத்தை உடைய நீண்ட வெள்ளைத் தடிவைத்த ஓடன் தெய்வம் வேண்டுபவர்களுக்குப் பரிசுகளையும், வரங்களையும் இல்லம் தேடி வந்து தருகின்ற ஒரு கடவுளாகப் பார்க்கப்பட்டு வந்தார். கையில் நீண்ட கம்பு, தொப்பி, தொப்பை, வெள்ளைத்தாடி இந்த ஓடன் தெய்வத்தின் அடையாளங்களுள் சில. கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவகம் இந்த ஓடன் கடவுளின் பிம்பமாக இருக்கலாம் என்று சில ஆராய்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
செயின்ட் நிக்கலஸ்
4ம் நூற்றாண்டில் பட்டாரா (தற்போதைய துருக்கி) என்ற இடத்தில் பிறந்து கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பிஷப்பாக இருந்த நிக்கலஸ் ( Nikolas of Myra) என்பவர் ஏழைச் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி உதவி செய்தார், பலரை வறுமையில் இருந்தும், மரணத்தில் இருந்தும் தனது உதவிகளினால் காப்பாற்றினார் என்பது உண்மையான வரலாற்றுச் சம்பவம்.
அந்த நிக்கலஸ் என்ற பிஷப் பின்நாட்களில் கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதப்பட்டம் பெற்று சென்ட் நிக்கலஸ்( Saint Nicholas) ஆக அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அவரது பெயர் சன்டாகுளோஸ் ( (Santa Claus) ஆக மாறியது. உண்மையான நிக்கலஸ் அடிகளாருடைய ( (Saint Nicholas) புகைப்படம், மற்றும் அவர் பிறந்த துருக்கியில் உள்ள அவருடை சிலையின் புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக அடையாளப்படுத்தப்பட்டுவரும்
உண்மையான ளுயiவெ Niஉhழடயள இற்கும் தற்காலத்து சன்டகுளோசுக்கும் இடையில் சம்பந்தம் இல்லை என்பது மாத்திரமல்ல- உண்மையான கிறிஸ்தவச் சிந்தனைகளைத் தத்துவார்த்தங்களை சிதறடிக்கின்ற ஒரு அடையாளம்தான் இந்த நவீன கால சன்டகுளோஸ் என்று வாதிடுகின்றார்கள் சில கிறிஸ்தவ ஆர்வலர்கள்.
அவர்களது வாதத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை என்பதற்கு நானே ஒரு சாட்சி.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் நானும் எனது சகோதர சகோதரிகளும் கிஸ்மஸ் நெருங்கும் பொழுது ஒரு பட்டியல் தயாரிப்பது வளக்கம். எமக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை உபகரனங்கள், புது ஆடைகள்.. ஒரு நீண்ட பட்டியலை எழுதுவோம். அந்தப் பட்டியல் நத்தார் தாத்தாவுக்கான எமது விண்ணப்பம். எமது தலையணைகளுக்குக் கீழே அந்தப் பட்டியலை வைத்துவிட்டுத் தூங்கி விடுவோம்.
24ம் திகதி ஒரே பதட்டமாக இருக்கும். அன்றைய தினம் நள்ளிரவு கண்விழித்துப் பார்த்தால் நாங்கள் தயாரித்த பட்டியலில் உள்ள பரிசுப் பொருட்கள் அழகாகப் பொதி செய்யப்பட்டு எங்களது தலையணையின் அருகே வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் குளப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாக இருந்ததால் நத்தார் தாத்தா நாங்கள் கேட்ட அத்தனை பரிசுப் பொருட்களையும் இரவில் பறந்து வந்து வைத்துவிட்டுச் சென்றதாக எமது பெற்றோர் கூறுவார்கள் நமட்டுச் சிரிப்புடன்.
எங்களுக்கோ மிகுந்த மகிழ்ச்சி. கிறிஸ்மஸ் தினம் என்றால் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பை விட கிறிஸ்மஸ் தாத்தாதான் எங்களுக்கு முக்கியாமாகத் தெரிவார். இன்றும் குறிப்பாகக் கூறுவதானால் இயேசுவை விட கிறிஸ்மஸ் தாத்தாதான் எங்களுக்கு ஹீரோ. எனக்கு மாத்திரமல்ல கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்த ஆனேகமான சிறுவர்களின் அனுபவம் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.
கோக்கோகோலாவின் சாதனை
கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை இன்னொருவருக்குக் கொடுப்பது விக்கிரக ஆராதனை என்று பைபிள் கூறுகின்றது. எனவே சண்டகுளோசை கிறிஸ்தவத்தின் ஒரு அடையாளமாகக் கருதக்கூடாது என்று சில கிறிஸ்தவ ஆர்வலகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
சரி, உண்மையான Saint Nicholas எப்படி தற்காலத்து சன்டகுளோஸ் ஆக மாறினார் என்று தேடியபொழுது ஒரு சுவாரசியமான பதில் கிடைத்தது. Saint Nicholas என்ற கத்தோலிக்க பிஷப்பை நகைச்சுவையான, குஸ்தி அடித்து வேடிக்கை காண்பிக்கும் நவீனகாலத்து சன்டகுளோஸ் ஆக மாற்றிய பெருமை கொக்கோகோலா நிறுவனத்தையே சாரும்.
1931ம் வருடம் கோக்கோகோலா நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடாத்தப்பட்ட பொப் இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பொப் இசைப் பாடகர் ஹடோன் ( ர்யனனழn ளுரனெடிடழஅ) சிவப்பு ஆடை, தொப்பி, தாடி அணிந்து கொண்டு மக்களைப் பரவசப்படுத்திய தோற்றம்தான் இன்றைய சண்டகுளோஸ்.
கிறிஸ்மஸ் மரங்கள்(Christmas Trees)
கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்களின் பொழுது வீடுகளில், ஆலயங்களில், வியாபார நிலையங்களில் வைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் மரங்கள் (Christmas Trees) கூட கிறிஸ்தவம் அல்லாத கலாச்சாரப் பின்னனியைக் கொண்டதாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்னதாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக ஜேர்மனியில் யூலே(லுரடந) என்ற தெய்வத்திற்கான வழிபாட்டின் பொழுது, பச்சை மரங்களைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். மார்கழிமாத்தில் இந்த சம்பிரதாயங்களை ஐரோப்பியர்கள், குறிப்பாக ஜேர்மனியர்கள் செய்வது வளக்கம். இதுதான் பின்நாட்களில் கிறிஸ்மஸ் மரங்களாக உருவானது.
1500ம் வருடத்தில் புரட்டஸ்டாந்து மதத்தின் ஸ்பகரான ஜேர்மனியைச் சேர்ந்த மார்டின் லூதர் டிசம்பர் மாதம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு அழகான காட்சியைக் கண்டார். ஒரு மரத்தின் பின்னணியில் வானத்து நட்சத்திரங்கள் ஜெலித்துக் கொண்டிருந்த காட்சி அவரை மிகவும் கவர்ந்தது. நீண்ட நேரம் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பிய அவர் அந்தக் காட்சியை தனது குடும்பத்தாருக்கும் செய்து காண்பிக்க விரும்பினார்.
வீட்டின் நடுவே ஒரு மரத்தை வைத்து அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றி தான் வெளியே நட்சத்திரங்களின் பின்னணியில் கண்ட மரத்தின் காட்சியை காட்சிப்படுத்தினார். இதுதான் பின்நாட்களில் கால ஓட்டத்தில் வர்னமின்குழிழ்கள் ஜொலிக்கும் கிறிஸ்மஸ் மரம் ஆக மாறியது.
இவ்வாறு கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் எம்மத்தியில் உலா வருகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் உருவானவைகளாகவும்;, வேறு மத கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டதாகவுமே சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பன சந்தர்ப்ப வசத்தால் உருவாகின்ற விடயங்கள்தான். இயேசுக் கிறிஸ்துவிற்கும், அவரது போதனைகளுக்கும், கிறிஸ்தவத்திற்கு, கிறிஸ்தவ தத்துவங்களுக்கும், அதன் சத்தியத்திற்கும், எந்தவிதத் தொடர்பும் இல்லாத பல அம்சங்கள் இன்று கிறிஸ்தவ சம்பிரதாயங்களாக மாறிவிட்டுள்ளதும், அன்றாடம் வேதத்தை வாசிக்கின்ற கிறிஸ்தவர்கள் கூட இந்தச் சம்பிரதாயங்கள், சடங்காச்சாரங்களுக்குள் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது நியாயமானதுதானா என்பதை கிறிஸ்தவ ஆர்வலர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.
nirajdavid@bluewin.ch
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக