தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

நேருவின் ரோஜாவிற்கு பின்னால் மறைந்திருக்கும் காதல் காவியம்!

ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராக நாட்டினை வழிநடத்தியவர் ஆவார்.
குழந்தைகளை கண்டால் நேரு தானும் ஒரு குழந்தையாகவே மாறி அன்பு செலுத்துவார். இதனால்தான் அவருடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் குழந்தை மனம் படைத்த இதே நேருதான் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நாட்டை விட்டே வெளியேற செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவர் காட்டிய வீரம், தீரம் இந்திய நாட்டுக்கு விடுதலை கிடைக்க முக்கிய பங்கு வகித்தது.
நேருவின் பிறப்பு
ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள் ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ம் ஆண்டு “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார்.
கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ம் ஆண்டு இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார்.
1962ம் ஆண்டு வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
நேருவுக்கு கிடைத்த ரோஜா
நேரு அவர்கள் தன்னுடைய சட்டையில் எப்பொழுதும் ரோஜாவை வைத்திருப்பார். ஆனால் இந்த ரோஜாவுக்கு பின்னால் ஒரு காதல் காவியமே ஒழிந்துள்ளது.
1916ம் ஆண்டு கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
நொடிக்கு நாலு முறை வெட்கப்படும் கமலா நேரு ரொம்பவும் அமைதியான சுபாவம்.
பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா. அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.
கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.
கணவர் ஏன் எப்போதும் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலட்சுமி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.
1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.
கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார்.
ஏற்கனவே காசநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கமலா நேரு 1936ம் ஆண்டு தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார்.
மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிவப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.
இந்தியாவின் முதல் பிரதமர்
1945ம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947ம் ஆண்டு யூன் 3ம் திகதி இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.
பின்னர் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை வழங்கப்பட்டது.
அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
நேருவின் பணிகள்
பிரதமர் பதவிக்கு வந்ததுமே நாட்டை எந்த வகையில் முன்னேற்றலாம் என்று திட்டம் தீட்டினார். இதற்காக திட்ட கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கினார்.
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக தொழில்நுட்ப குழுவை அமைத்தார். ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். விவசாயமும், தொழில் துறையும் ஒரே சீராக வளர்ச்சியடைய அதற்கான பிரத்யேக திட்டங்களை கொண்டு வந்தார்.
தொழிற்சாலைகள்தான் இந்தியாவின் கோவில் என்று கூறிய அவர் பெரிய தொழிற்சாலைகள் பல உருவாவதற்கு காரணமாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் 2 பிரிவாக பிரிந்து கிடந்தன.
ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஒன்றிணைத்து அணிசேரா அமைப்பை உருவாக்கினார். அவர் உருவாக்கிய பஞ்சசீல கொள்கைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அவசியம் என்று கருதிய அவர் அணுசக்தி கழகத்தை உருவாக்கினார். உயர் தொழில்நுட்ப கல்விகள் இருந்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நினைத்த அவர் அகில இந்திய மருத்துவக்கழகம், ஐ.ஐ.டி. கல்லூரி, இந்தியா வேளாண்மை கல்லூரி, தேசிய தொழில்நுட்ப கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.
இறுதிக்காலம்
1964ம் ஆண்டு, மே மாதம் 27ம் திகதி நேரு அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக