தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 நவம்பர், 2012

அரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு!!


அரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு

அம்பேத்கரின் மதமாற்றமே சமத்துவம், சகோதரத்துவம் வேண்டித்தான். அந்த சமத்துவம், சகோதரத்துவம் இஸ்லாத்தில் உண்டா? இதற்கு ‘பாகிஸ்தான்’ நூலில் அம்பேத்கர் விளக்கத்தைப் பார்ப்போம்.

‘‘…. இனி அடுத்து சாதிமுறையை எடுத்துக்கொள்வோம். சகோதரத்துவத்தைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதைக் கொண்டு, அடிமைத்தன முறையிலிருந்தும், சாதிமுறையிலிருந்தும் விடுபட்ட சமயமாக பலரும் இஸ்லாமைக் கருதுகிறார்கள்.

இவற்றில் அடிமைத்தனத்தைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. இப்போது அது சட்ட ரீதியாக ஒழித்துக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அது நடைமுறையிலிருந்து வந்தபோது இஸ்லாமிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் தான் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்துவந்தது. அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை.



சர் டபிள்யூ. முய்ர் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பயங்கர மின்னல் வெட்டும் சமயத்தில் அவன் கால் விலங்கை மேலும் இறுக்கினான்… தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’

ஆனால் பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. வங்க முஸ்லீம்களிடையே நிலவும் நிலைமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இஸ்லாமிய சாதிப் பிரிவுகள்

வங்காள மாகாணத்துக்கு 1901 ஆம் வருடம் குடிமதிப்புக் கணக்கெடுத்த கண்காணிப்பாளர் வங்காள முஸ்லீம்களைப் பற்றி பின்கண்ட சுவையான விவரங்களைக் கூறுகிறார்.



‘‘பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மாகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது.

முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்:

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப்

2. அஜ்லாஃப்

ஆகியவையே அவை. அஷ்ராஃப் என்பதற்கு உயர்குடிமகன் என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.

இஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்

தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்



இந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.



A. அஷ்ராஃப்கள் உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துகள்
2. ஷேக்குகள்

3. பட்டாணியர்கள்

4. மொகலாயர்கள்

5. மாலிக்குகள்

6. மிர்ஜாக்கள்



B. அஜ்லாஃப் என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1) பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.

4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.

C. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.

பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மௌக்தா, மெஹ்தார்.



ஜாதி உயர்வுதாழ்வைக் கட்டிக்காக்கவே ஜமாத்துகள்

முஸ்லீம் சமூக அமைப்பில் காணப்படும் மற்றோர் அம்சத்தையும் குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் குறிப்பிடுகிறார்; அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ‘‘பஞ்சாயத்துமுறை’’தான் அது.

கலப்புத் திருமணத்தை எதிர்க்கும் இஸ்லாம்

அவர் கூறியதாவது:

…… பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துகளைப்போன்றே முஸ்லீம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லீம்களில் மேட்டுதட்டுப்பிரிவினரும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும்.

உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றான். அவன் அவமானப் படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.



இஸ்லாம் இழிவு செய்யும் தொழிலாளர் சாதிகள்

இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது. அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாடமுடியும்.

ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.’’



இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடிமதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.’’ என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

சகோதரத்துவம், சமத்துவம் வேண்டி மதமாற்றத்தை அறிவித்த அம்பேத்கர் அந்த சகோதரத்துவம், சமத்துவம் இல்லாத இஸ்லாத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்? அம்பேத்கர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காததற்கு இஸ்லாத்தில் நிலவிய ஜாதி முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக