தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 26, 2018

போதிமர ஞானமும்.... மனைவியை நாடிய புத்தரும்!


புத்தர் பற்றிய ஓர் கேள்விக்கு விடைகூற முற்பட்ட வேளையில் கதையின் ஊடாக வாழ்வின் தத்துவத்தையும், புரிதலையும் ஆசையின் விளைவையும் கூட தெளிவுபடுத்திடலாம். இது ஆன்மீகத்தின் பார்வையில் மாத்திரமே சாத்தியமாகின்றது.
சாந்தமே உருவானவர், கொடூர கொலை மனம் கொண்ட வஞ்சகன் கூட இவர் பார்வைப்பட்டால் சாந்தமாகிவிடுவான். அவரே “ஆசையே உலகில் துன்பத்திற்கு மூல காரணம்” என்று உலகிற்கு போதித்த கௌதம புத்தர்.
அமைதியே உருவான கௌதம புத்தர் புனிதராக போற்றப்படுகின்றவர். உண்மையான பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்கள் புத்தரிடம் வரங்களை கோருவதில்லை அமைதியையே எதிர்பார்ப்பார்கள்.

இந்த புனித கௌதம புத்தரின் போதனைகளின் படியே உலகில் பௌத்தம் பரவியது. என்றாலும் புத்தர் பற்றி இன்றும் ஓர் மிகப்பெரிய கேள்வி உள்ளது அதாவது, ஆசைகளை துறந்த பின்னரும், ஞானம் பெற்றதன் பின்னர் தன் மனைவியை அவர் மீண்டும் ஏன் சந்தித்தார் என்பதே.
கௌதம புத்தர் சித்தார்த்தனாக இளம் பராயத்தில் இருந்தபோது யசோதராவை மணக்கின்றார். அவர்களுக்கு அழகிய ஆண்குழந்தை பிறக்க ராகுலன் எனப் பெயர் சூட்டப்படுகின்றது.
13 வருடங்கள் இன்பமான இல்வாழ்வை களித்த சித்தார்த்தனுக்கு தன் 29ஆவது வயதில் வாழ்வின் அடிப்படை புரிய ஆரம்பித்தது. இளவரசனாக இருந்த அவர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் செல்கின்றார்.
அச்சந்தர்ப்பத்தில் தள்ளாடும் கிழவர், நோயாளி, அழுகும் பிணம், முனிவர் என்ற பாத்திரங்களை அடுத்தடுத்தாக அவர் காண நேரிடுகின்றது. இதனால் வாழ்வின் யதார்த்தம் புரிந்து கொண்ட அவர், மனித வாழ்வின் துன்ப நிலையை முதன்முதலாக உணர்கின்றார்.
இதனால் அவரெடுத்த முடிவு துறவறம், அனைத்தையும் துறந்தார் மனைவியைப்பிரிந்தார், புதல்வரைப் பிரிந்தார் வாழ்வின் இரகசியம் தேடி அரண்மனை வாழ்வைத் துறந்தார். 12 வருடங்கள் யசோதராவை பிரிந்து வாழ்வின் யதார்த்தத்தை அறிந்து கொண்டு கௌதம புத்தராக ஞானம் பெறுகின்றார்.
சித்தார்த்தன், போதிமரத்தடியில் அமர்ந்து நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் கௌதம புத்தராக ஞானோதயம் பெற்றதன் பின்னர் ஒரு நாள் தன் சீடர்களிடம் “நான் என்மனைவியை பார்க்கப்போகின்றேன்” என்கின்றார்.
இதுவே மிகப்பெரிய கேள்வியாக பிற்காலத்தில் மாறிப்போனது, அதாவது “அனைத்தையும் துறந்து ஞானம் பெற்றதன் பின்னர் மனைவியைப்பார்க்க புத்தர் ஏன் மீண்டும் விரும்பினார்? அவளுடன் பேச ஆசைத் துறந்தவர் ஏன் ஆசைகொண்டார்” என்பதே அது.
விளக்கங்கள் அறியாத பலர் இதனையே புத்தரை நிந்திக்க பயன்படுத்தினர். அப்படியாயின் புத்தர் ஏன் அவ்வாறு ஆசை பட்டார் என்பது கதையின் தொடர்ச்சி உணரவைக்கும்…
புத்தரின் கோரிக்கை சீடர்களுக்கு அளவில்லா அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “புனிதரே, ஞானோதம் பெற்ற பின்னர் மீண்டும் மனைவி எனும் உறவை தாங்கள் நாடிச்சென்றால், இதனை மக்கள் எவ்வாறு பொறுப்பார்கள்? ஏன் இவ்வாறு தாங்கள் விரும்புகின்றீர்கள்” என ஆச்சரியம், பயம், வியப்பு, என பலவகை உணர்வு கலந்து கேள்வியாக முன்வைக்கின்றார்கள்.
அதற்கு அமைதியே உருவான புத்தர் “எனக்கு இந்த ஞானோதயம் கிடைக்க அவளே காரணம், அதனால் அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக மாறிவிட்டேன், அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்” என்கிறார்.
தொடர்ந்து மீண்டும் 12 வருடங்கள் பின்னர் அரண்மனையை அடைகின்றார் நெடுநாள் கழித்து தன் கணவனை மீண்டும் காணும் யசோதரா கோபம் கலந்த அன்போடு, துயர் மிக்க மனநிலையுடன் கண்களில் நீர் வடிய நிற்கின்றாள்.
அவளிடம்… “தவறு செய்துவிட்டேன், தவறை உணர்ந்து விட்டேன் தவறை மன்னிக்க வேண்டும். அப்போது புரியாத நிலை… இப்போது புரிந்த நிலையில் இருக்கின்றேன். என் அனுபவத்தினையும் உன்னோடு பகிர்ந்து கொள்கின்றேன்” என்கிறார் புத்தர்.
புத்தரின் இந்த வார்த்தைகள் யசோதராவை நிலைகுலையச் செய்கின்றன, அப்போது புத்தரின் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிவதை அவள் காண்கிறாள், கண்ணீர் மல்கி இது என் கணவரல்ல என்பதை உணர்ந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும் படி புத்தரின் பாதம் வீழ்ந்து வேண்டுகின்றாள்.
இந்தக் கதையை மீண்டும் ஒருமுறை படியுங்கள் புத்தர் ஏன் மனைவியைச் சந்தித்தார் என்பதற்கு மட்டுமல்ல, ஆழ் மனதில் உள்ள பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும், அமைதியை தரும், புரியாத வாழ்வின் தத்துவத்தையும்கூட புரிய வைக்கும்.

http://www.manithan.com/history/04/159277

No comments:

Post a Comment