தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 செப்டம்பர், 2017

நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடியொன்று! வியப்பில் மக்கள்...

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.
இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.
தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.
நிலமட்டக் கற்பரப்பின் கற்களைக் கிளப்பியெடுத்து விவசாயத்துக்கு நிலமமைத்தார்கள். கிளப்பியெடுத்த அதே கற்களைக்கொண்டு பயிர்ப்பாதுகாப்புக்கு வேலிகள் அமைத்தார்கள்.
சரைப் பகிர் எனப்படும் சிறுகற்களின் அத்திவாரம் 20-30 சென்ரிமீட்டர் உயரமாக அழகாக அடுக்கப்பட்டு அதன்மேல் பெருங்கற்களின் உறுதியான அடுக்குகள் அடுக்கப்பட்டு அழகிய மதில் போல் காட்சிதரும் கற்களின் கட்டுமானம் கற்பகிர்கள் என்றழைக்கப்படுகின்றன.
பகிர்(வேலி) கட்டும் பயன் பாட்டுக்குரிய கற்கள் முருகைக் கற்கள். இவை நடுத்தரப் பாரமானவை. கல்வேலி இரட்டைப் பயனுடன்பலநூறு ஆண்டுகளுக்கு அழியாதிருக்கும் எல்லைபேணும் சொத்து. இதைப் பார்க்கவும் நெடுந்தீவுக்குப் உல்லாசப் பயணிகள் வருவதுண்டு.
மென் முருகை எனச் சற்றுப் பாரம் குறைந்த சுண்ணக்கற்கள்(காபனேற்கற்கள்) இவற்றின் பயன்பாடு ஒரு காலத்தில் நெடுந்தீவின் ஏற்றுமதிப் பொருளாதாரமாகவும் இருந்தது.
சுண்ணக்கற்களைச் சிறு சிராய்களாக உடைத்து பூவரசு மஞ்சவண்ணா வேம்பு கட்டை விறகுகளை அடுக்கி அந்த அடுக்குகளின் மேல் கற் சிராய்கள் அடுக்கி மாறி மாறிப் பல அடுக்குகள் குவியமிட்ட ஒரு பிரமிட் போன்ற வடிவத்தில் 40-50 அடி உயரத்தில் குவித்து எரியூட்டுவார்கள்.
சுண்ணாம்புச் சூளை எனப்படும் இது எரிந்து ஆறிச் சுண்ணாம்பாக எடுக்கும் காலம் ஒரு வாரத்தையும் தாண்டும். சீமேந்து தொழிற்சாலை வருவதற்கு முன் வட பிரதேசம் பூராவும் கட்டுமானப் பணிகளுக்கு இந்த சுண்ணாம்பே உதவியது ஏற்றுமதியானது.
இதைவிட ஒரு வகைப் பாறைகளாகக் கோளான்கள் அகழப்பட்டன. கிறனைற் எனப்படும் கருங்கற் தீப்பாறைகள்(மலைப்பாறைகள்) வகையைச் சார்ந்தவைகள் என்றாலும் இவற்றின் நிறம் வெண்மையை அண்டிப் போகும் மரநிறத்தைக் கொண்டவை.
இவை தூக்கிக் கையாளமுடியா அளவுக்குப் பாரமானதும் கடினமானதுமான கற்கள் என்பதால் அகழும் இடங்களில் வைத்து சிறுக உடைத்து ஏற்றிச் சென்று சல்லிகளாக உடைத்து சீமென்ற் கற்கள் அரிவதற்குப் விற்பார்கள். கல்லுடைப்பதை வாழ்நாள் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பல குடும்பங்கள் அன்று ஊரில் இருந்தன. இன்று ஒருவர் கூட அந்தத் தொழிலோடு இல்லை.
இதே கோளான் கற்கள் தனித் தனிப் பாறைகளாக இல்லாமற் பெரிய பரப்புகளில் படர்ந்த பாறைகளாகவுமுள்ளன. இந்தப் பாறைப் படர்வுகள் சீமெந்தால் மெழுகியதுபோல அழுத்தமான மேற்பரப்பை அண்டிய தோற்முடையவை.
இந்தப் பாறைப் படர்வுகளில் ஒரு புல் நுனியைக் கூடக் காணமுடியாது. கடப்பாறையோ அலவாங்கோ போட்டால் நெருப்புப் பொறி பறக்கும் அளவுக்கு கெட்டியானவை இலகுவில் உடைவுக்குட்படாதவை.
நெடுந்தீவில் இப் படர்வு பெரிதாகவுள்ள இடங்கள் சாறாப்பிட்டியும், தொட்டாரமும். யாழ் குடாநாட்டிலும் திருநெல்வேலி புத்தூர் காங்கேசன்துறை வசாவிளான், கைதடி இன்னும் சில சில இடங்களில் இது போன்ற பாறைப்படர்வுகள் காணப்படுகின்றன. இப்படியான தோற்றமுள்ள நிலப் பகுதியைப் பொதுவாகக் கலட்டி என்றபெயரில் அழைப்பார்கள். நெடுந்தீவில் பகுதிப் பெயரல்லாமல் பரவைக் கற்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
தொட்டாரத்தில் இடைவிட்டு இடைவிட்டு அதிக பரப்பிலிருந்தாலும். சாறாப்பிட்டியில் இந்தப் படர்வின் பரப்பு 10 அல்லது 12 ஏக்கர் அளவைத் தாண்டும் தொடர்பரப்பாகவுள்ளது. படர் பாறைகளின் சராசரி ஆழமும் 10-12 அடிகளுக்குக் குறையாதிருக்கும்.
இப்போ உங்கள் கற்பனையைப் பறக்கவிடுங்கள் பத்து ஏக்கர் பரப்புள்ள, பத்தடி ஆழமான, இரும்பு போலக் கெட்டியான ஒரு பாறையில் 40 முழ மனிதன் மிதித்தாலோ 400 கோடி தொன் எடையை வைத்தாலோ சேற்றில் பதிவது போல ஒரு பதிவையோ தடயத்தையோ ஏற்படுத்த முடியவே முடியாது. அப்படியிருக்க இந்த ஐதீக மனிதப் பாதம் எப்படி?
அங்கு அகன்ற மனிதப் பாத வடிவமொன்று காணப்படுகிறது உண்மை தான்! பாதமோ மேல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அங்குல ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது மனிதன் மிதிப்பதால் சாத்தியமாகுமா?
நம்பகத் தன்மையை முழுமையும் மறுதலிக்கின்றதான கீழுள்ள நான்கு அனுமானங்களையும் பார்ப்போம்.?
1. நாற்பது முழத்தில் எப்போ மனிதனிருந்தான்? நான்கு முழ மனிதனையே காற் பாதத்தின் அளவை வைத்து உயரத்தைத் துல்லியமாச் சொல்லிவிட முடியாது. ஒரே உயரமான எல்லோருக்கும் ஒரே அளவான சப்பாத்துக்கள் பொருந்துவதில்லை.
அது போகட்டும் காலுள்ள இடம் நெடுந்தீவின் தென் மேற்குத் தொங்கல் வடகிழக்குத் தொங்கலுக்கு குறைந்தது 7 கிலோமீட்டர் தூரமிருக்கும்! 40 முழ உயர மனிதனாக இருந்தாலும் 20 அடிக்கு மேல் கவடு எட்டி வைக்க முடியுமா? கவுண்டன்-செந்தில் வாழைப்பழப் பகிடிமாதிரி ஒரு காலிங்க இருக்கு மற்றக்காலெங்க? சரி மண்ணில தான் வைபட்டாலும் இந்தக் கல்லில இந்த அழுத்தமெண்டால் மண்ணில ஒரு நிலாவரைக் கிணறு காணணுமே.
2. கற்பனைக் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நிஜமாக நம்பிக் கடவுளாக்கி, மலையைத் தூக்கியது கடலுக்கடியில் பாலமிருக்கிறது என்று கடைஞ்செடுத்த ராமாயண-பாரத முட்டாள் தனத்தில் அலையும் மக்கள் தானே இதையும் சில வேளை நம்புவார்கள்.
3. மனித பாதச் சுவட்டினைப் போன்ற கற்பாறைகள் அத் தீவெங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. என்றுமொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது.
இது முழுமையும் தவறான செய்தி நிலத்தில் கண்டெடுக்கும் கற்களை அண்ணளவாக ஒரு தோற்றத்தில் உருவகப்படுத்திப் பார்க்கலாமே தவிர. மனித வேலைப்பாடுகளாலானவையா துல்லியமாகவோ புதைபாட்டுச் சிதைவுகளோடோ காணமுடிந்த உருவப் பாறைகளா என்ற விபரங்கள் எதுவும் செய்தியில் கிடையாது.
4. பௌதீகக் காரணங்களான வெப்பமும், நீரும் சிதைக்கலாம். கரிய நிறப் பாறைகளில் வெப்பம் உறிஞ்சப்படும் போது மேற்பரப்பு மட்டும் அதிக வெப்படையும் காரணத்தால் கற்கள் சிதைவதும், நீரால் கரைக்க முடியாத பொருளில்லை என்பதால் நீரரிமானத்தாலும் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அந்த வகை வாய்புகளும் மிகக் குறைவு.
இப்பாறைகளின் அழுத்தமான பரப்பும் வெள்ளை சார் நிறமும் ஒளித் தெறிப்புக்கு வாய்ப்பே தவிர அதிகம் உறிஞ்சாது.
இத் தீவில் மழை நீரின் பொழி குறைவு அப்படி பொழிந்து மாரி வெள்ளம் வந்தாலும் ஒரிரு நாளுக்கு மேல் சாறாப்பிட்டி வெளியில் தங்குவதில்லை. ஓடி வடிந்துவிடும். இந்த இரு காரணிகளும் கூடச் சிதைவை ஏற்படுத்த வாய்ப்பற்ற போது விரல்களே துல்லியமாத் தெரியும் ஆழமான பாங்கான பாதத்தின் பதிவு எப்படி?
இந்த கிறனைற் பாறைகளின் 10 – 12 அடி ஆழத்தின் கீழ் கோறல்லைம்ஸ்ரோன் என்ற கொத்தைக் கல்சியப் பாறைகளின் படிவுகள் காணப்படுகின்றன.
காற்றுப் புகும் இடைவெளிகொண்ட இவையுள்ள இடமெல்லாமே அருமையான நன்னீர் ஊற்றுக்கள் வருகின்றன. இதையறிந்துகொண்டு சாறாப்பிட்டியில் முதலில் நான்கு நன்னீர்க் கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன.
இது தாச்சாயின் மலைக் குகைகளைப் பொழிந்து பாதையமைத்தது போல் கல்லுளிகள் கொண்டு பொழியப்பட்ட கிணறுகள். இக்காலம் நெடுந்தீவினை ஒல்லாந்தர் வைத்திருந்த காலங்களாக இருக்கலாம் என்ற கணிப்பு.
இந்தப் பொழிதலுக்காக வரவழைக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அமைத்திருந்த கூடாரமருகே இவர்கள் பொழுதுபோக்காகப் பொழிந்தெடுத்த ஒரு காலடிச் சித்திரம் தான் கதைமாறி நாற்பது முழ மனிதனின் பாதமாக இன்று சொல்லப்படுகிறது.
http://www.jvpnews.com/history/04/139263

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக