தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 மார்ச், 2020

‘நாரதபுராணத்தில்’ விநாயகபெருமானின் அவதார கதை!



விநாயகர் பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கணபதி என்ற சொல்லுக்கு தேவகணங்களின் தலைவன் என்று பொருள்.
க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர் வந்தது. விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர்.
சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயக பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு யாரும் இல்லாததால் தன் உடம்பில் பூசிய மஞ்சளை பிடித்து சிறுவனாக உயிர் கொடுத்து நிற்க சொன்னார்.
அப்போது சிறுவனிடம் நான் குளிக்கப்போகிறேன். உள்ளே விட யாரையும் அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டார். அப்போது அங்கே சிவபெருமான் வந்தார். சிறுவன் சிவபெருமானை போக விடாமல் தடுத்தார்.
இதனால் சிறுவனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் நடந்தது. இவ்வளவு சொல்லியும் என்னை உள்ளே விட மாட்டாயா என்று கோபமடைந்த சிவபெருமான் சிறுவனின் தலையை சூலத்தால் துண்டித்தார்.
நீராடி முடிந்து பார்வதி வெளியே வந்தாள். சிறுவன் தலை இல்லாமல் கிடந்த கோலத்தை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைந்தாள்.

ஆத்திரமும், கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. தான் உருவாக்கிய பிள்ளையை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக மாறி வெளியேறி மூவுலகில் தமது கண்ணில் படும் எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினாள்.
பார்வதியின் கோபத்தை பார்த்து தேவ உலகமே அதிர்ந்தது. அனைவரும் அச்சம் கொண்டனர். தேவர்கள் பார்வதியின் கோபத்தை கட்டுப்படுத்த நினைத்தனர்.
ஆனால் பார்வதி தன் பிள்ளையை பறிகொடுத்த நிலையில் அனைவரின் பேச்சுகளையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தன் கணவரே என் பிள்ளையின் தலையை துண்டித்துவிட்டாரேன்னு பார்வதி அடங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தாள். வெறித்தனத்தோடு எல்லாவற்றையும் அழிக்க முற்பட்டாள்.

காளியின் ஆவேசத்தை கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். பார்வதி 9 அவதாரங்களை எடுத்து ஆக்ரோஷமாக நின்றாள்.
பின்னர் பார்வதியின் மைந்தன் என் மகன் என்பதை அறிந்த சிவபெருமான் மிகவும் மன வேதனை அடைந்தார். காளியைச் சாந்தப்படுத்த முற்பட்டார் சிவன்.
தனது பூதகணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு கட்டளையிட்டார். அதன்படி பூதகணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்கள் கண்ணில் முதலில் ஒரு யானை தென்பட்டது.
அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த சிறுவனின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார்.

சிறுவன் உயிரெழுந்து பார்வதியை அம்மா என்று அழைத்ததும் பார்வதி சாந்தமடைந்து அகமகிழ்ந்தாள். சிறுவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள்.
சிவன் அந்தப் பிள்ளைக்கு ‘கணேசன்’ என பெயர் சூட்டினார். தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும்.
இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் விநாயகரை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி இந்து மக்களால் கெண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக