"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" அது போல எவரும் பாயிரம் பாடி எமது வரலாற்றை ஒதுக்கி, விலக்கி, தாட்டு வைத்தாலும் அவை அழிந்துபோவதில்லை. நாம் அழிய விடப்போவதில்லை! பூமியில் புதைத்த விதைகள் முளைக்க தவறுவதில்லை!
இலங்கையின் பூர்வீகக் குடிகளாக இருந்த நாகரும், இயக்கரும் திராவிடராக இருந்திருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விஜயன் வருவதற்குமுன்பே இலங்கையில் திராவிட நாகரீகம் பரவியிருந்தது என்பதோடு, இராவணன் மனைவி மண்டோதரியும், சூரபன்மன் மனைவி பதுமகோமளையும், விஜயனின் மனைவி பாண்டிய நாட்டின் அரசியும் நாகர் குலப் பெண்கள் என்று தெரிய வருவதாக மேலும் பல ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களைத் தவிர சங்ககாலத்துப் புலவர் முடிநாகராயரும் நாகர் குலத்தைச் சேர்ந்தவராவர். சமீப காலத்தில் யாழ்ப்பாணம் வல்லிபுரக் கோயிலின் புறமாகக் கண்டெடுக்கப்பட்ட செப்புச் சாதனங்கள் மூலமாக வட இலங்கையில் நாகர் வாழ்ந்ததாகவும், அந்தப் பகுதியை நாகதீபம் என அழைக்கப்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவருகிறது. நாகர்களை கைப்பற்றி ஆட்சி அமைத்த சேர சோழ பாண்டிய மன்னர்களின் மண்டலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் தமிழர்களே என்பதை மறுக்குவோ, மறைக்கவோ, முடியாது. இவர்கள் குடிகொண்டு, இராசதானியாக இருந்த இடங்கள்தான், மாதோட்டமும், திருகோணமலையும் ஆகும். திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் இவர்களால் பராமரிக்கப்பட்ட கோயில்களே என்று ஆ. முத்துத் தம்பிபிள்ளை தனது யாழ்ப்பாணச் சரித்திர நூலிலே குறிப்பிடுகின்றார்.
ஏழாம் நூற்றாண்டளவில் வாணிபம் செய்வதற்கு அரேபிய வர்த்தகர்கள் வருவதற்கு முன்பாகவே இந்து சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த இலங்கைத் தீவானது ஒரு வர்த்தகம் செய்யும் மையமாக இருந்து வந்திருப்பதாக வரலாறு தெரிவிக்கிறது
1505ம் ஆண்டு எதிர்பாராதவாறு இலங்கையின் காலிக் கடற்கரையோரமாக ஒதுங்கியதோடு ஆரம்பமானது பறங்கியர் என்றும் அழைக்கப்படும் போர்த்துக்கீசரின் இலங்கைப் பிரவேசம். போர்த்துக் கீசர்கள் இலங்கைக்கு வரும்போது யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இராச்சியமும், கண்டியில் சிங்கள இராட்சியமும், கொழும்பிற்கு அருகே கோட்டை இராட்சியமும் மூன்று இராட்சியங்களாக அமைந்திருந்தன, கோட்டை இராச்சியத்தின் அரசனாக வீரபராக்கிரம பாகுவும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனாக பரராச சேகரனும், கண்டி இராச்சியத்தின் அரசனாக வீரபாகுவும் இருந்தார்கள்.கோட்டை அரசனுடன் நெருக்கமாகப் பழகிய போத்துக்கீசர்கள் இலங்கையில் விலைமதிப்பான வாசனைப் பொருட்களின் ஏக போக வியாபாரியாகத் திகழ்ந்ததோடு, சிறிது சிறிதாக கோட்டை இராட்சியத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். யாழ்ப்பாண இராச்சியத்தையும் தம் வயப்படுத்த வந்த போர்த்துக்கீசரை அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம்சத்தைச் சேர்ந்த சங்கிலி மன்னன் பல முறை எதிர்த்து போரிட்டான். ஆரம்பத்தில் மிகுந்த எதிர்ப்பை காட்டிக்கொண்ட போதும் 1619ம் ஆண்டு யாழ்ப்பாணமும் அவர்கள் வசமானது.
1560ம் ஆண்டிற்கும் 1645ம் ஆண்டிற்கும் இடையில் போர்த்துக்கீச தலைமை அதிகாரியும் அன்றைய அரச அதிகாரியுமாக இருந்த Philip De Olivera பிலிப்போ என்பவனின் தலைமயில் சுமார் 500 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 1575ம் ஆண்டு சிலாபத்தில் இருந்த முனீஸ்வரன் கோயிலும், 1588ம் ஆண்டு மாதோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த மன்னாரில் இருந்த திருக் கேதீஸ்வரம் கோயிலும், டெவினுவெரவில் இருந்த விஷ்ணு கோயிலும் இடிக்கப்பட்டன.1612ம் ஆண்டு மாசிமாதம் 2ம் திகதி நல்லூர் கந்தசாமி கோயிலும், தொடர்ந்து கீரிமலையில் இருந்த திருத் தம்பலேச்வரன் கோயிலையும் 1622ம் ஆண்டு திருகோணமலை கோணேஸ்வரமும் அழிக்கப்பட்டன என்று இந்துக்களின் வரலாறு விம்மிக் கொண்டு கூறுகிறது.
இலங்கையில் யாழ்ப்பாண இராட்சியம் 1215 ஆண்டு முதல் 1624 ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்திலும் போர்த்துக்கீசரின் ஆட்சி 1505 ஆண்டு முதல் 1658 ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்திலும் இருந்தது.
பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இலங்கையின் ஒரு பகுதியை ஆண்டுவந்த போர்த்துக்கீசருக்கும் கண்டி இராச்சியத்தை ஆண்டுவந்த அரசனுக்கும் இடையில் இருந்த பகைமையினால் இருவருக்கும் இடையே அடிக்கடி யுத்தம் நடைபெற்றது. போர்த்துக்கீசரை வெல்லும் நோக்கத்துடன் கண்டி மன்னனான இரண்டாவது இராஜசிங்கன் டச்சுக்காரருடன் தொடர்புகொண்டு அவர்கள் மூலமாக கொழும்பு இராச்சியத்தை 1656ம் ஆண்டும் யாழ்ப்பாணத்தை 1658ம் தந்திரமாகக் கைப்பற்றச் செய்தான்.
இலங்கையில் சில பகுதிகளை டச்சுக்காரர்களும் கண்டியை ராஜசிங்கனும் ஆண்டு வரும் போது, ஐரோப்பாவை தங்கள் வசம் கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் இலங்கையின் ஒரு பகுதியாக இருந்த டச்சுக் காரர்களின் ஆட்சியையும் 1815 ம் ஆண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். பின்பு 1817ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கண்டி அரசனை சிறைப்பிடித்து இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு இலங்கை முழுவதையும் தங்கள் ஆடசிக்குக் கீழே கொண்டுவந்தனர்.
இலங்கையில் கண்டி இராட்சியம் 1469 ஆண்டு முதல் 1815ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் இருந்தது.
இலங்கையை ஆக்கிரமித்த ஆங்கிலேயரின் ஆட்சி இலங்கையில் 1815 ஆண்டு முதல் 1948 ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் இருந்தது.
விம்மல் தொடரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக