தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 டிசம்பர், 2012

இலங்கையின் விண்வெளிப் பயணத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்த தமிழ் தலைவர்!!!


கடந்த சில வாரங்களாக இலங்கை மற்றும் உலகெங்கும் பேசப்பட்ட ஒரு விடையம் இலங்கையின் விண்வெளிப்பயணம் பற்றியதாகும். செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பல முக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரிம் நிறுவனமானது இலங்கைத் தமிழ் வர்த்தகரான மணிவண்ணனுக்குச் சொந்தமானதாகும். இலங்கையின் மிக முக்கிய தமிழ் வர்த்தகர் என்று விக்கிபீடியாவில் விபரிக்கப்படும் மணிவண்ணன் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். சுப்ரிம்சட் இன் வெற்றிகரமான ஏவுதலின்பின் அவர் வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது உங்களுக்கு நிம்மதியை அளிக்கிறதா?
ஆம். கடைசி சில தினங்கள் முக்கியமாக முற் குறிப்பிடப்பட்ட ஏவப்படும் தினம் பிற்போடப்பட்தால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் உருவாக்கப்பட்டன. செயற்கைகோள் ஒன்றை அனுப்புவதில் ஏற்படும் தாமதங்கள் விண்வெளித் துறையில் மிகவும் சாதாரண நிகழ்வாகும். எனினும் இலங்கையைப் பொறுத்தவரை தமது நாட்டின் முதல் செய்மதி விண்ணைத் தொடவேண்டும் என்பதில் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இலங்கையரும் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த ஆர்வத்தை ஈடுசெய்யும் பாரிய பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டது. இறுதியாக நவம்பர் 27ம் திகதி இலங்கை நேரப்படி பி.ப. 3.43க்கு செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. எமக்குப் பெரும் மன நிறைவைத் தந்தது.

இந்தத் திட்டத்தின் அரசாங்க ஈடுபாடு தொடர்பாக இறுதிநேர விமர்சனங்கள் வெளிவந்தன. அதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?
ஆரம்பம் முதல் இந்தத் திட்டம் முழுமையான ஒரு தனியார் மயமான திட்டம் என்பதை நாம் அனைவருக்கும் அறிவுறுத்தியிருந்தோம். இத் திட்டம், முதலீடு, முயற்சி அனைத்துமே எமது வர்த்தக நிறுவனத்தால் செய்யப்பட்டவை. இலங்கையின் தனியார் நிறுவனங்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் அமையுமென நான் அடிக்கடி கூறிவந்தேன். ஏந்த நாட்டிலும் அரசாங்கத்தால் செய்யக்கூடிய அபிவிருத்திப் பணிகளுக்கு ஒரு எல்லை உண்டு. எந்த ஒரு அரசாலும் வர்த்தகர்களுக்கு தமது திறமையை வெளிக்காட்டக்கூடிய சூழலை மட்டுமே ஏற்படுத்தித் தர முடியும். அதற்குமேல் சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை படைக்க வர்த்தகர் சமூகம் முன்வர வேண்டும். அப்படிச் செய்யாமல் எதுவித முயற்சியிலும் ஈடுபடாமல் வீணே அரசை குறை கூறிக்கொண்டிருப்பதால் எதுவித பயனும் இல்லை.
எமது திட்டத்தின் பிரமாண்டத்தை கண்டு ஏராளமானோர் சந்தேகித்த ஒரு விடையம் இது அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு திட்டமென சந்தேகித்தனர். இந் நிலை வரக் காரணம் இலங்கையின் தனியார்துறை கடந்த பல வருடங்களாக இத்தகைய பாரிய செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் காட்டிய அசிரத்தையாகும். இந்த நிலமை இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது. இளைய தலைமுறையினரால் நிருவகிக்கப்படும் ஒரு இளைய நிறுவனமாகிய நாம் இன்று இலங்கையின் தனியார் துறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய பெரும் திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளோம்.
அப்படியானால் அரச ஆதரவு உங்களுக்கு இருந்ததா இல்லையா?
ஆரச ஆதரவு இருந்தது. எமது வர்த்தகத்தை செயற்படுத்தக்கூடிய நல்ல சூழலை அமைத்துத் தந்தது அரசு. இந்த மிகப்பாரிய முதலீட்டை ஊக்குவிக்க வரிச் சலுகைகளைத் தந்தது அரசு. நாட்டுக்கே புதியதொரு தொழில்துறையான விண்வெளித்துறையை நாம் அறிமுகப்படுத்த அங்கீகரித்தது அரசு. இவை மட்டுமே அன்றி எமக்கு விசேட சலுகைகளையோ முதலீட்டையோ அரசு நிச்சயமாக வழங்கவில்லை.
இது சிறிலங்கா அரச செயற்கைக்கோள் இல்லையாயின் ரொக்கட் ஏன் தேசியக் கொடியை ஏந்தியது?
அளப்பெரிய முயற்சிகளையும் பாரிய முதலீட்டையும் செய்தது நாங்கள். நாங்கள் நினைத்திருந்தால் எமது நிறுவனத்தின் கொடியையோ எனது பெயரையோ ரொக்கட்டில் பொறித்திருக்கலாம். ஆனால் நாங்கள் நாம் இந் நாட்டின் உண்மையான மைந்தர்கள். எமக்குக்கிடைந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டுக்கோ தேசியக் கொடிக்கோ பெருமை சேர்க்கும் எந்த செயலையும் செய்ய நாங்கள் பின்வாங்கப்போவதில்லை.
இந்தச் செயற்கைக்கோள் எம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு இலங்கைக் குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்களிப்பை அனைத்து இலங்கையருடனும் சமமாக பகிரவே நாங்கள் செயற்பட்டோம். ஒரு நாட்டின் தேசியக் கொடியானது அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிறுவனத்துக்கும் சொந்தமான ஒன்றாகும். எனவே அத் தேசியக் கொடியை எமது ரொக்கட்டில் பொறிப்பதற்கு நாம் எவரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை.
எனினும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் பின் கேள்விப்பட்ட சில கருத்துக்களின் காரணமாக நான் ஒரு விடயத்தை கூற ஆசைப்படுகின்றேன். இலங்கையின் தேசியக்கொடி எம்மால் விண்ணுக்குக் கொண்டு செல்லப்படுவதை விரும்பாத எவரும் இலங்கையராக இருக்க அருகதை அற்றவர்கள். அவர்களை தேசப்பற்று உள்ளவர்கள் என்றோ மனநிலை பாதிக்கப்படாதவர்கள் என்றோ கூறுவது கடினம்.
இந்தத் திட்டத்தால் பிராந்திய ராஜதந்திர சிக்கல்கள் குறிப்பாக இந்தியா தொடர்பில்?
இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான ஒரு கேள்வியாகும். எமது வர்த்தக நிறுவனம் இந்தப் பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நிறுவனமாகும். வேறு எந்த நாட்டைவிடவும் அதிகமாக இந்தியாவில் வர்த்தக தொடர்புகளை நாம் விஸ்தரித்துள்ளோம். அப்படியிருக்க நாம் இந்திய நலனுக்கு எதிரான ஓர் திட்டத்தை எப்படி நாம் முன்னெடுப்போம்? இத்திட்டத்தின் முதன் நாள் தொடக்கம் மிகப் பொறுப்புடன் நாம் இந்திய அரசுக்கு இத் திட்டம் தொடர்பான அனைத்து விடையங்களையும் அறிவுறுத்தி வந்துள்ளோம். இத் திட்டத்தில் இணையுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு இடைவிடாமல் அழைப்பு விடுத்துள்ளோம். எமக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் அடிக்கடி கோரியுள்ளோம். இதுமட்டுமல்ல எனது மதிப்புக்குரிய முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களை எனது நிறுவனத்தின் கௌரவ தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நான் பிரத்தியேகமாக அழைப்பு விடுத்துள்ளேன். இதற்கு மேல் இந்திய நலன் காக்க ஒரு தனியார் நிறுவனத்தால் வேறு என்ன செய்யமுடியும்?
இறுதியாக எமது செயற்கைக்கோளால் பிராந்திய நாடுகளின் நலனுக்கோ, குறிப்பாக இந்திய நலனுக்கோ எதுவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் பெறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
இந்த செயற்கைக்கோளை ஏன் சீன அரசுக்குச் சொந்தமான விண்வெளி மையத்திற்கு ஏவினீர்கள்?
விண்வெளியில் 500 பாகை கிழக்கு என்று அழைக்கப்படும் இலங்கைக்குச் சொந்தமான பிரதேசத்தில் எமது 3வது செயற்கைக்கோளை ஏவுவதற்கு நாம் இலங்கை அரசிடம் விண்ணப்பித்துள்ளோம். இதற்கான அரச அங்கீகாரத்தைப் பெற சாதாரணமாக ஓன்று இரண்டு வருட வேலைப்பாடுகள் அவசியமாகின்றன. பிராந்தியத்தில் மிகத் துரிதமாக வளர்ந்துவரும் வர்த்தக நிறுவனம் என்ற வகையில் ஓன்று இரண்டு வருடங்கள் வீணே காத்திருப்பது எம்மால் செய்யமுடியாத செயலாகும். இந்த ஒரே காரணத்தால் சீன அரசின் இணக்கத்துடன் விண்வெளியில் சீன அரசுக்குச் சொந்தமான பிரதேசத்தில் எமது முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தினோம். அதிஸ்டவசமாக நான் குறிப்பிடும் இந்தப் பிரதேசம் இலங்கைக்கு மிக அருகில் அமைந்திருப்பது எமது திட்டத்திற்கு பெரும் பலத்தைத் தந்தது. இந்த உண்மை இன்னுமொரு முக்கியமான காரணத்தை வெளிப்படுத்துகிறது. சீன அதரசுக்குச் சொந்தமான பிரதேசத்திற்கு செயற்கைக்கோள் ஒன்றை ஏவுவதற்கு சீன அரசு எவரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை. எமது பங்களிப்பு இருந்தாலும் இல்லாவிடினும் அவர்களால் ஒரு செய்மதியை அங்கு நிலைநிறுத்தி இருக்கமுடியும். எனவே வேவு பார்த்தல் நாட்டின் விண் பிரதேசம் விற்கப்படுதல் போன்ற கருத்துக்களை கூறுதல் கேலிக்குரிய விடயமாகும்.

இவ்வளவு பாரிய முதலீட்டை நீங்கள் எப்படி திரட்டுவீர்கள்?
இது ஓர் நல்ல கேள்வி. இந்த கேள்விக்கான சரியான பதிலை உணர்ந்தால் இத் திட்டம் தொடர்பான பல சந்தேகங்கள் இல்லாதொழிக்கப்படும். 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு என்று கூறும் போது அது எம்மால் 5 வருட காலப்பகுதியில் செய்யப்படும் மொத்த முதலிடாகும். இத் திட்டத்தின் முதற் பகுதியான சுப்ரீம்சட் 1 சம்பந்தப்பட்ட முதலீடு 100 மில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும். இன்றைய வர்த்தக உலகில் நான் கூறும் இந்த எண்கள் மந்திர இலக்கங்கள் அல்ல. சரியான திட்டம், தொலைநோக்கம், வர்த்தகத் திறமை ஆகியவை துணையிருந்தால் இது இலங்கைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எட்டக்கூடிய ஒரு இலக்காகும். இதனை நாம் செய்து காட்டியுள்ளோம். இதற்காக அரசிடமோ, மக்களிடமிருந்தோ நாம் எந்தப்பணத்தையும் பெறவில்லை. இந்த முதலீட்டை செய்ததும் அதற்கான இலாபத்தைப் பெறுவதும் எமக்குச் சொந்தமான சவால்களாகும். இதைப்பற்றி அரசியல் வாதிகளோ அன்னியர்களோ கவலைப்படத் தேவையில்லை.

எதிர்காலத்தைப் பற்றி சில வார்த்தைகள்….
எங்கள் கடின உழைப்பு எங்களை நாட்டின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்த வைத்துள்ளது. அதேவேளை கடந்தகால சாதனைகள் பல எதிர்கால எதிர்பார்ப்புக்களையும் உருவாக்கியுள்ளன. அந்த எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய நாம் தொடர்ந்து முன்னோக்கிப் பாடுபடுவோம். எமது பயணம் எமது நாட்டிற்கும் நாட்டின் வர்த்தக சமூகத்திற்கும் வளர்ந்துவரும் எந்தவொரு நாட்டிற்கும் ஒரு பெரும் படிப்பினையை அறிவுறுத்தும். அந்த நம்பிக்கையுடன் தேசப்பற்றுள்ள நாட்டுமக்களின் ஆசையுடன் நாம் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக