தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 டிசம்பர், 2012

7 நாட்களில் உலகம் அழியப் போகிறதா?: நக்கீரன் நாளிதழ்!!



“உலகம் அழியப் போகிறதாமே…?’ -உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் கேட்கப்படும் கேள்வியாக இதுதான் இன்றைக்கு எதிரொலிக்கிறது. கடந்த சில வருடங்களாகவே, மாயன் காலண்டர் 21.12.2012-ல் முடிவுக்கு வருவதை சுட்டிக் காட்டி, அழிவை நோக்கி உலகம் நகர்வதாக இணைய தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.
அழியும் என்று மத ரீதியிலான நம்பிக்கைவாதி களும், அழியாது என்று அறிவியல் விஞ்ஞானிகளும் இரண்டு பிரிவுகளாக நின்று மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படையாக இருப்பது மாயன் காலண் டர்தான்.
கி.மு. 2000 ஆண்டு களுக்கு முன்பு தென் அமெ ரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் வாழ்ந்தது. சுமார் 3500 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இனம், கடந்த 15-ம் நூற் றாண்டில் அழிந்து போனது. அவர்கள் விஞ்ஞானிகளை விடவும் அதிபுத்திசாலிகளாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.
“”இன்றைக்கு நம்மிடம் இருப்பது போல அவர்களும் காலண்டரை பயன்படுத்தினர்.. ஆனால், அவர்கள் 3 காலண்டரை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு காலண்டரும் 5 கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த 3-வது காலண்டர் கி.மு 313-ல் தொடங்குவதாக இருந்துள்ளது. 5 கால கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அந்த காலண்டர், டிசம்பர் 21, 2012-ல் முடிவடைந்துவிடுகிறது. அதன்பிறகு எந்த குறிப்புகளும் மாயன் இனத்தவர் பதிவு செய்யவில்லை.
தாங்கள் அறிந்துள்ள பல்வேறு வானசாஸ்திரங்களின் அடிப்படையில் வளிமண்டலத்திலுள்ள கோள்களைப் பற்றியும் நிறைய விபரங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியில் மிக அதிகமான முன்னேற்றத்தை நாம் எட்டியிருக்கும் நிலையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டிருக்கிறது உலகம். நெபிரு என்று ஒரு கோளை (பிளானெட்) அண்மையில் நமது அறிவியல் உலகம் கண்டறிந்தது. ஆனால், இந்த பிளானெட்டைப் பற்றி தங்களது கல்வெட்டுகளில் அன்றைக்கே பதிவு செய்துள்ளனர் மாயன்கள்.
இப்படி நிறைய விசயங்களைப் பற்றி அவர்கள் கணித்துள்ளனர். அவர்கள் கணித்த பல விஷயங்கள் நடந்துள்ளன. இந்த சூழலில், மாயன் காலண்டர் டிசம்பர் 21, 2012-ல் முடிந்து போயிருக்கிறது. இந்த தேதிக்குப் பிறகு உலகம் இருக்காது என்பதால்தான் மாயன்கள் தங்களது காலண்டரை தொடராமல் முடித்துவிட்டனர் என்றும், அவர்கள் சொல்லியிருப்பது பல நடந்திருப்பதால் இதுவும் நடக்கலாம் என்கிற ரீதியில் உலகம் அழியும் என்றும் நம்பப்படுகிறது”’என்கிறார் ஆஸ்ட்ராலஜி ஆராய்ச்சியாளர் சூரியப்பிரசாத்.
மேலும் இவர், “”விண்வெளி ஆராய்ச்சிக் கென்று அமெரிக்கா உருவாக்கிய அமைப்பு நாசா. விண்வெளியில் கண்ணுக்குப் புலப்படாதவைகளை கண்டறிவதற்காக, ஈராஸ் (IRAS-Infrared Astronomical Satellite) என்ற தொலைநோக்கி கருவி பொருத்தப்பட்ட ஹபிள் என்ற செயற்கைகோளை (சாட்டிலைட்) 1983-ல் அனுப்பி வைத்தனர் நாசா விஞ் ஞானிகள். இந்த ஹபிள் செயற்கைகோள் மூலம் பல அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த ஈராஸ் கருவி, தனது இன்ஃபிராரெட் கதிர்களை விண்வெளியில் செலுத்தி கண்ணுக்குத் தெரியாத பலவற்றையும் படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. அப்படி விண்வெளியை ஆராய்ந்த ஈராஸ் தொலை நோக்கி, சூரிய மண்டலத்தின் எல்லையைக்கடந்து சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான கோள் போன்ற ஒன்றை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. அதை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது ஒரு பயங்கரம் அவர்களை தாக்கியது. அதாவது அந்த கோள், பூமியை நோக்கி நகர்ந்துகொண்டி ருப்பதுதான் அந்த பயங்கரம்.
மேலும் மேலும் அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது அந்த கோளுக்கு “பிளானெட் எக்ஸ்’ என்று பெயரிட்டனர். மாயன்கள் மற்றும் சுமேரியர்களால் நெபுரு என பெயரிடப்பட்ட கோள்தான் அது என்றும் ஒரு முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர். பூமியை நோக்கி நகர்வதாக நாசா விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்ட அந்த கோள், டிசம்பர் 21, 2012-ல் பூமியைத் தாக்கும் என்று சொல்லப்படுவதும், மாயன்கள் கணித்த காலண்டர் டிசம்பர் 21, 2012-ல் முடிந்து போனதாலும் இரண்டையும் ஒப்பிட்டு விவாதிக்கப்படுவதால் அன்றைய தினத்தில் உலகம் அழியும் என்கிற நம்பிக்கை மேற்குலக நாடுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.
ஆனால், பூமியை நோக்கி அந்த கோள் நெருங்குவது அறிவியல் பூர்வமாக உண்மை என்றாலும் பூமியை நெருங்கிவிட்டதாக எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை தெளிவாக கூறவில்லை”’’ என்கிறார் இவர்.
உலகம் அழியும் என்கிற பரபரப்பு உலகம் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில் தமிழகத்திலும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிக்கவே செய்கிறார்கள்.
கண்டங்கள் நகர்கின்றன என்பது நமது அறிவியல் கண்டுபிடிப்பு. ஆனால் கண்டங்கள் நகர்வ தில்லை; அவைகள் உயருகின்றன என்று அறிவியலில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை கண்டறிந்தவரும் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் உருவாவது எப்படி என்றும் அதனை முன் கூட்டியே அறிய முடியும் என்றும் பல ஆதாரங்களின் அடிப்படையில் கண்டு பிடித்துள்ளவருமான விஞ் ஞானி பொன்முடியிடம், மாயன் காலண்டர் பற்றி கேட்டபோது,’’”"மாயன் காலண்டரை வைத்து “உலகம் அழியும்’ என்று உலகம் முழுவதும் ஒருவித பயம் பரவியிருக்கிறது. இந்த பயம் அர்த்தமற்றது. நம் பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. இதனை ஒரு ஆண்டு என்கிறோம்.
இதன் அடிப்படையில் தான் தற்போது புழக்கத்தி லுள்ள காலண்டர்கள் உரு வாக்கப்பட்டன. இந்த காலண் டரை கிரிகர் என்ற பதின் மூன்றாம் போப் அறிமுகப் படுத்தியதால் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது நாம் பயன் படுத்தும் காலண்டரும் இதுவே. இதுதான் அறிவியல் அடிப்படையில் அமைந்தது.
ஆனால் மாயன்களோ ஒரு ஆண்டு என்பது 360 நாட் களைக் கொண்டது என்று கருதினார்கள். இதன்படி பார்த்தால் மாயன்களின் காலண்ட ரானது அறிவியல் பூர்வமானதல்ல. அதேபோல, மாயன் இனத்தின் கல்வெட்டு குறிப்புகளை ஆராய்ந்த போது எந்த ஒரு இடத்திலும் “இன்றைய தினத்தில் உலகம் அழியும்’ என்று அவர்கள் எழுதி வைக்கவே இல்லை. பல விஷ யங்களை சொன்னவர்கள், உலகம் அழியும் என்பது உண்மையானால் அதையும் அவர் களால் பதிவு செய்திருக்க முடியும். ஆனால், அப்படி அவர்கள் பதிவு செய்யவில்லை.
இன்றைய கணினி யுகத்தில், எதிர் காலத்தில் கிரகங்களுக்குள் மோதல் ஏற்படுமா என்று கணினி உதவியுடன் விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில் கோடிக் கணக்கான ஆண்டுகளில் கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் வேகத்தில் மிகச் சிறிய அளவிலேயே மாற்றம் ஏற்படும் என்பதைத் தான் கண்டறிந்துள்ளனர். அதனால், மாயன் காலண்டர் முற்றுபெற்றிருப்பதை வைத்து உலகம் அழியும் என்பது சுத்த ஹம்பக். மாயன்கள் ஒரு மாயை, ஒரு பரபரப்பு, அவ்வளவுதான். அதனால் எப்போதும் போல சந்தோஷமாக இருங்கள்”’’என்கிறார் மிக அழுத்தமாக.
தமிழ்நாடு அறிவியல் ஆய்வு மையத்தின் (பிர்லா கோளரங்கம்) நிர்வாக இயக்குநர் அய்யம்பெருமாளிடம் இது பற்றி விவாதித்தபோது,’’”"சூரியனில் இருந்து வெளியாகும் ஒளியால் தான் பூமிக்கு வெளிச்சமும் சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்பத்தினால்தான் பூமியிலுள்ள உயிரினங்கள் வாழ தட்பவெப்பமும் கிடைக்கிறது. சூரியனிலுள்ள நியூக்ளியர் அணு பிணைவுகளால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுகிறது. அப்படி மாறும் போது அதிலிருந்து வரக்கூடிய ஒளியானது ஆல்ஃபா கதிர்கள், பீட்டா கதிர்கள், காமா கதிர்கள், அகச்சிவப்பு மற்றும் ஊதா கதிர்கள், ரேடியோ அலைகள் போன்றவைகளை உமிழ்கிறது. இதன் மூலம் தான் உயிரினங்களுக்கு அனைத்து விதமான விஷன் கிடைக்கிறது. இந்த ஒளியையும் வெப்பத்தையும் பூமி இழக்கும் போதுதான் உலகம் அழியும் நிலைக்குப் போகும்.
ஆனால், இந்த தன்மையை சூரியன் இழக்க இன்னும் 450 கோடி ஆண்டுகளாகும் என அதன் காலகட்டத்தை நிர்ணயித் துள்ளனர் விஞ்ஞானிகள். அந்த காலகட்டத்தை சூரியன் எட்டும் போது, ஹைட்ரஜன் ஹீலியமாகவும் ஹீலியம் மெக்னீஷியமாக வும் மாறும். அப்படி மாறும் போது சூரியனின் விட்டம் அதிகமாகி சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி வெகுவாக குறையும். அப்போது சூரியனில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமானது கடலில் உள்ள தண்ணீரை ஆவியாக கிரகித்துக் கொள்ளும். அதன்படிதான் பூமிக்கு ஆபத்தே தவிர, மாயன் காலண்டர் முடிந்து போயிருக்கிறதே என்பதால் எந்த அழிவையும் உலகம் சந்திக்காது”’என்கிறார்.
ஆக, இந்த இதழ் வெளியாகும் டிசம்பர் 15-லிருந்து 21-ம் தேதிக்கு ஏழு நாட்கள் இருக்கின்றன. அதுவரை உலகம் அழியும் என்று பொழுதுபோக்கிற்காக, சுவாரஸ்யமாக பேசிக் கொள்ளவும், விவாதித்துக் கொள்ளவும் உதவியிருக்கிறது மாயன் காலண்டர். ஆனால் உலகம் அழியும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த சான்றுகளும் இல்லை. அதனால் மக்களே… எப்போதும் போல் வாழ்க்கையை சுவாரஸ்யமாக அனுபவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக