தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மாடு மேய்க்கும் அண்ணா! நீ எங்கே இருக்கிறாய்?


மாடு மேய்க்கும் அண்ணா! நீ எங்கே இருக்கிறாய்?

பரம ஏழையான பிராமணப் பெண் ஒருத்தி விதவை ஆகிவிட்டாள். அவளுக்கு ஆண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தச் சிறுவன் எப்படியும் படித்தாக வேண்டும். அந்த சிற்றூரில் ஆசிரியர் யாரும் இல்லை. கல்வி கற்க சிறுவன் பக்கத்துக் கிராமத்திற்கு போக வேண்டியிருந்தது. இரு கிராமங்களுக்கு இடையே சிறிய காடு ஒன்று இருந்தது. அதைக் கடந்தே சிறுவன் செல்ல வேண்டும். சிறுவன் பள்ளி செல்லும்போதும
், பிறகு மாலையில் வீடு திரும்பும்போதும் இருட்டாக இருக்கும். ஆயினும் தனியாகக் காடு வழியில் செல்ல சிறுவன் மிகவும் பயந்தான்.

அவன் தாயை அணுகி," அம்மா ! பயங்கரமான காட்டுவழியில் தனியாக செல்ல மிகவும் பயமாக உள்ளது." என்றான்.

அதற்கு அவனது தாய், "மகனே ஒன்று சொல்கிறேன் கேள். காட்டில் உனது சகோதரனான கிருஷ்ணன் என்ற இடையன் இருக்கிறான். கூப்பிட்டால் அவன் வந்து உனக்கு உதவுவான்.உன்னைக் கவனித்துக் கொள்வான். நீ கவலைப் பட வேண்டாம்!" என்று சொன்னாள்.

மறுநாள் அந்தச் சிறுவன் காட்டிற்குப் போய், "அண்ணா, மாடு மேய்க்கும் அண்ணா !நீ எங்கே இருக்கிறாய்?" என்று கூப்பிட்டான். "தம்பி இங்கேதான் இருக்கிறேன்!" என்று ஒரு குரல் அவனது காதில் விழுந்தது. சிறுவனுக்கு இருந்த பயம் நீங்கிவிட்டது. பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து உரையாடினார்கள்.அவன் சிறுவனுடன் சேர்ந்து நடந்தான். விளையாடினான். சிறுவனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இந்த வேளையில் ஆசிரியரின் தந்தை காலமானார்.அப்போது நடந்த சடங்கில் பலரும் ஆசிரியருக்குப் பரிசுகள் வழங்கினார்கள். ஏழைச் சிறுவனும் தன தாயிடம் சென்று, ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டான். ஏழையான தாயோ தனது இயலாமையைத் தெரிவித்தாள். உடனே அவனது தாய், மாடு மேய்க்கும் அண்ணனிட்டம் கேள் என்று சொன்னாள். சிறுவனும் காட்டிற்குச் சென்று "மாடு மேய்க்கும் அண்ணா! ஆசிரியருக்குப் பரிசு கொடுக்க வேண்டும். ஏதாவது கொடு!" என்று கூறினான். அந்த இடைச் சிறுவனும் ஒரு செம்பு நிறைய பால் கொடுத்தான்.

நன்றியுடன் அந்தச் செம்பை வாங்கிக் கொண்டு தன ஆசிரியரின் வீடு சென்று தான் கொண்டு வந்திருக்கும் வெகுமதியைக் கொடுத்தான். சிறுவன் கொண்டு வந்திருக்கும் வெகுமதி அவருக்கு அற்பமாகத் தோன்றியது. ஆகவே வேலைக்காரனிடம் வெகுமதி குறித்துச் சிறுவன் சொல்லிக்கொண்டே இருப்பதால், "அதை வாங்கி ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு, பையனைப் போகச் சொல்!" என்று சொன்னார். வேலைக்காரப் பையனும் செம்பை வாங்கி பாலை பாத்திரத்தில் ஊற்றினான். என்ன ஆச்சிரியம்! ஊற்ற ஊற்ற பால் குறையாமல் வந்துகொண்டே இருந்தது. "தம்பி உனக்கு இந்தச் செம்பு எப்படிக் கிடைத்தது?" என்று வினவினார் ஆசிரியர். "காட்டில் இருக்கும் மாடு மேய்க்கும் அண்ணன் கிருஷ்ணன் இதைத் தந்தான்!" என்று சிறுவன் பதில் சொன்னான்.

ஆச்சிரியமுற்ற அவர்கள், "என்ன! நீ கிருஷ்ணனைப் பார்த்துள்ளாயா? அவன் உனக்கு இதைத் தந்தானா? " என்று கேட்டார்கள். "ஆம்" நாள்தோறும் அவன் என்னுடன் விளையாடுகிறான். வரும்போது என்னுடன் துணைக்கு வருகிறான்' என்று சிறுவன் தெரிவித்தான். அவர்கள் ஆச்சிரியத்துடன், "அவனை எங்களுக்கு நீ காட்ட முடியுமா?" என்று ஆசிரியர் கேட்டார். "ஆம் , காட்ட முடியும். என்னுடன் வரலாம்" என்று சிறுவன் அழைத்தான்.

ஆசிரியரும் சிறுவனும் காட்டிற்குச் சென்றார்கள். வழக்கம் போல், "மாடு மேய்க்கும் அண்ணா !" என் ஆசிரியர் என்னுடன் வந்திருக்கிறார். நீ எங்கே இருக்கிறாய்? என்று சிறுவன் கூப்பிட்டான். பதில் ஒன்றும் இல்லை. மீண்டும் மீண்டும் சிறுவன் கூப்பிட்டு பார்த்தான். பதிலே இல்லை. அதனால் சிறுவன் அலுத்து கொண்டே, "அண்ணா இங்கே உடனே வா. இல்லாவிட்டால் அவர்கள் என்னைப் பொய்யன் என்பார்கள்!" என்று குரல் தழுதழுக்க கூறினான். அப்பொழுது தூரத்திலிருந்து ஒரு குரல், "நீ தூயவனாக இருப்பதாலும் உரிய காலம் வந்து விட்டதாலும் நான் உன்னிடம் வந்தேன். உன் ஆசிரியர் என்னைக் காண இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டும்..!" என்று கூறிற்று.

கடவுளை காட்டு, காணவேண்டும் என்று அலட்சியமாக கேள்வி கேட்பவர்கள். அதற்கு முதலில் நான் தகுதியானவனா என்பதை பார்க்க வேண்டும். உண்மையை கூறுங்கள்.. கடவுள் எதிரே வந்தாலும் அது உண்மையான கடவுளா, எப்படி நம்புவது என்ற சந்தேங்கள் தான் உங்களிடம் உள்ளன. முதலில் அந்த மனோநிலையை நாம் தாண்ட வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக